கமுதி, ஜூலை 15: கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பாசன நீர் கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதில் நேற்று சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கருவேல மரங்கள் மற்றும் கால்நடை மேச்சல் பகுதிகளில் உள்ள புற்கள் நிறைந்த நிலங்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகி வீணாகியது.
சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கோவிலாங்குளம் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ பற்றி எரிந்த சேதம் குறித்து கிராம மக்கள் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரித்தனர்.


