Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்டிட கழிவு, உடைந்த செங்கற்களை சாலையோர, நடைபாதை சரிவான இணைப்புக்கு பயன்படுத்த தடை: காற்று மாசு, பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி அதிரடி உத்தரவு

சென்னை, ஜூன் 14: சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் உடைந்த செங்கற்களை சரிவான இணைப்புகளுக்காக பயன்படுத்துதல் முற்றிலும் தடை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் கட்டிடங்களை இணைத்திடும் சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்கும் வகையில் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றுதல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டிடத்திற்கு சாலை மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் சரிவான இணைப்புகளுக்காக உடைந்த செங்கற்கள், சுண்ணாம்பு, கட்டிடக் கழிவுகள், மண் கலவைகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால், தூசி பரவல் மற்றும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. கட்டுமானக் கழிவுகள் மற்றும் மண் தூசுகள் மழைநீர் வடிகால்களில் சேர்வதால், மழைநீர் தேங்கி நீரோட்டத்தை தடைசெய்கின்றன. மழைக்காலங்களில் மழைநீர் வடிகால்கள் அடைபட்டு சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பும் ஏற்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையிலும், மழைநீர் வடிகால் அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கிலும், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டு கட்டிடங்களை இணைத்திடும் சரிவான இணைப்புகள் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

வழிகாட்டு நெறிமுறைகள்:

கட்டிட கழிவுகள் மற்றும் உடைந்த செங்கற்களை சரிவான இணைப்புகளுக்காக பயன்படுத்துதல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

அதற்கு பதிலாக, மரம் அல்லது இரும்பு போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பொருட்களைப் பயன்படுத்தலாம்.

 இந்த இணைப்புகள் பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பொதுநலப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், மழைநீர் வடிகால் பராமரிப்புக்கு எவ்வித தடையில்லாதவையாகவும் இருக்க வேண்டும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மைக்கான வழிகாட்டுதல்கள் 2025ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் கட்டிடங்களை இணைத்திடும் சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.