கடந்த ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்கட்சிகள் குறை கூறுகிறார்கள் முதல்வர் ரங்கசாமி பரபரப்பு பேட்டி
புதுச்சேரி, ஜூலை 8: புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் எதுவுமே செய்யாதவர்கள், காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த ஆட்சியின் மீது குறை கூறி வருகிறார்கள் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.
ஆதி திராவிடர் நலத்திட்ட நிதியின் கீழ் உழவர்கரை பகுதியில் பள்ள வாய்க்காலில் பீச்சவீரன்பேட், லட்சுமிநகர் குறுக்கு சாலை முதல் முத்துப்பிள்ளை பாளையம் பிரதான சாலை வரை மற்றும் முத்துப்பிள்ளை பாளையத்தில் பல்வேறு குறுக்கு சாலையில், 7 குறுகிய பாலங்கள் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.
பொதுப்பணித்துறை, நீர்பாசன கோட்டம் மூலம் ரூ. 6 கோடியே 72 லட்சத்து 90 ஆயிரம் செலவில் நடைபெறவுள்ள பணிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் சாய்.ஜெ. சரவணன்குமார், சிவசங்கர், தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் லூயி பிரகாசம், இளநிலை பொறியாளர் கணேஷ், ஒப்பந்ததாரர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பணிகளை துவக்கி வைத்த பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அரசின் பணியிடங்களை முழுமையாக நிரப்ப தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நல்ல கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை அரசு செய்து கொடுத்துள்ளது. ஒன்றிய அரசின் அனுமதி வந்தவுடன் நியமன எம்எல்ஏக்கள் பொறுப்பேற்பார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இந்த ஆட்சியில் எதுவுமே நடக்காதது போன்று சொல்கிறார்கள். உண்மையில் கடந்த ஆட்சியில்தான் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கோடிக்கணக்கிலான பணிகளுக்கு பூமி பூஜை நடக்கிறது. எப்படி பணிகளை திட்டமிட்டு முடிக்கிறார்கள் என்று எதிர்கட்சிகள் நினைக்கிறது. இலவசம் தர முடியாது என்றனர். இப்போது இலவசமாக அரிசி, கோதுமை, முதியோர் உதவித்தொகை உயர்வு, மகளிருக்கு ரூ. 1000 என சொல்வதையெல்லாம் செய்து வருகிறது. ரூ.20 கோடி திட்டத்தில் ரூ.25 கோடி ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் எப்படி? எடுத்துக்கொள்வது.
அரிசி வழங்குவதில் நீதிமன்ற இடைக்கால தடையில்லை. நீதிமன்றமே அந்த மனுவினை தள்ளுபடி செய்து விட்டனர். அடுத்த மார்ச் மாதம் வரை அரிசி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் கோதுமையை சேர்த்து வழங்குவோம். தேர்தல் வரப்போகிறது என்பதால் எதிர்கட்சிகள் எதையாவது குறை சொல்வோம் என கூறுகிறார்கள். புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில், உடைத்து பார்ப்பது பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் செய்யக்கூடாது. இது சரியானது அல்ல. அரசிடம் சொன்னால், சீரமைத்து சரி செய்யும். சீட்டுகள் எத்தனை, யார் போட்டியிடுவார்கள் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். தற்போது நவீன தொழில் நுட்பத்தில் குப்பைகள் தரம் பிரித்து உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படும். குப்பைகள் தேங்காது, துர்நாற்றம் வராது. அது ஒரு தொழிற்சாலை போல இனி செயல்படும். 25 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது, நின்று போன வழித்தடங்களில் மீண்டும் பேருந்து இயக்கப்படும். தரமான குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.