ஓமலூர், ஜூலை 26: ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் 52 கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இன்ஸ்பெக்டர் அங்கப்பன் தலைமையில் எஸ்.ஐ சையத் முபாரக் மற்றும் போலீசார், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட எஸ்.பி கௌதம் கோயல், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக போலீஸ் ஸ்டேஷன் புதுப்பிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
போலீஸ் ஸ்டேஷனை சுற்றி பார்த்த அவர், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும் ஆலோசனைகள் வழங்கினார். மேலும், ஓமலூர் போலீசாரின் பணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டும் தெரிவித்தார். தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டரிந்தார்.
போலீசார் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும், பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் கூறினார். மேலும், வழக்குகளில் ஆஜராகாமல் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்கை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் உடனிருந்தார்.