Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், செப்.30: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 8 மாதங்களில் 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமையலுக்கு எண்ணெய் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் உடல் உபாதைகள், நோய்கள் ஏற்படும். இதை தடுக்க மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு குழு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது.

இதை மீறும் உணவகங்கள் மற்றும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். உணவகங்களில், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து அதை மறுசுழற்சி முறையில் பயோ டீசலாக மாற்றப்படுகிறது. இதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி உயர்தர, நடுத்தர உணவகங்கள், தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள், கோழி, மீன் இறைச்சி போன்றவற்றை பொரிக்கும் தள்ளுவண்டி கடைகள், துரித உணவகங்கள் ஆகியவற்றை கணக்கெடுத்து சமையல் எண்ணெய் பயன்பாடு, மீதமாகும் எண்ணெய் ஆகியவை கண்காணிக்கப்பட்டு சேகரிக்க நிறுவனத்தின் முகவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் நேரடியாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் சென்று அவற்றை சேகரிக்கின்றனர்.

அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 75 ஆயிரத்து 989 லிட்டர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேகரித்து பயோ டீசலாக தயார் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.