Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் திட்டத்தால் பயன் உண்டா? பாஜ உறுப்பினருடன் திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி, ஆக. 2: புதுச்சேரி சட்டசபையில் பாஜ எம்எல்ஏவுடன் திமுக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அசோக்பாபு எம்எல்ஏ பேசியதாவது: கவர்னர் உரையில் ஒவ்வொரு துறைவாரியாக என்னவெல்லாம் செய்துள்ளோம் என்பது விரிவாக கூறப்பட்டுள்ளது. பயிர்காப்பீடு திட்டம், பென்ஷன் நிலுவைத்தொகை வழங்கும் திட்டம் உள்பட பல அறிவிப்புகள் உள்ளது.

ஆனால் எதிர்கட்சியினர் ஒன்றிய அரசால் பயனே இல்லை என்பதுபோல பேசி வருகின்றனர். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி தலைவர் சிவா(திமுக), ஒன்றிய அரசின் அறிவிப்புகளோடு, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து எவ்வளவு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய வரி எவ்வளவு, வருமான வரி எவ்வளவு பிடித்தம் செய்கிறார்கள் அதற்கேற்ப ஒன்றிய அரசு எவ்வளவு நிதியை வழங்கியிருக்கிறது என்பதையும் கூறுங்கள்.

நாஜிம்( திமுக): ஒன்றிய அரசின் ஒரே ஒரு திட்டத்தை விவாததுக்கு எடுத்துக் கொள்வோமா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் யார் பயனடைந்தார்கள், உயிர்காக்கும் திட்டம் என்பதனை மாற்றி உயிர் எடுக்கும் திட்டமாக இருக்கிறது. இது ஒரு வீணான திட்டம். இதனால் முதல்வர் மக்கள் நலன் கருதி மாநில அரசின் சார்பில் காப்பீடு திட்டம் கொண்டுவரும் ஆலோசனையில் இருக்கிறார்.

அசோக்பாபு (பாஜ): திட்டத்தால் பயனில்லை என பொய் பேசினால் நாக்கு அழுகி விடும்.

நாஜிம் (திமுக): நீங்கள் எவ்வளவு வேண்டுமானால், என்னவெல்லாமும் பேசலாம், ஏனெனில் உங்களுக்குத்தான் நாக்கு இல்லையே.

அசோக்பாபு: பாரதப் பிரதமரின் மலிவு விலை மருந்தகத்தால் எவ்வளவு மக்கள் பயனடைகிறார்கள். ஏன் இன்னும் சொல்லப்போனால் நாஜிம் எம்எல்ஏகூட காரைக்காலில் உள்ள மக்கள் மருந்தகத்தில்தான் மருந்து வாங்கி உட்கொள்கிறார்.

நாஜிம்: நீங்கள் சொல்லும் மலிவு விலை மருந்து, எந்த ரெஸ்ட்டோ பாரில் கிடைக்கிறது. நான் மருந்தை சொன்னேன், நீங்கள் வேறு ஏதெனும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

அசோக்பாபு: ஒன்றிய அரசின் மானியவிலையில் உரத்திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் என மக்கள் பயன்பெறுகிறார்கள். அதனைத்தான் கவர்னர் உரையில் தெரிவித்துள்ளார்கள்.

நாஜிம்: நீங்கள் சொல்லும் சாதனைகளையெல்லாம் குறிப்பிட்டு, சாதனை வண்டி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தியுங்கள். அப்புறம் தெரியும், வண்டி திரும்புமா? என்று.

சிவா (எதிர்கட்சி தலைவர்): 30 ஆண்டுகளுக்கு முன்பே 1 லட்சம் தொழில் துவங்க கடன் கொடுத்திருக்கிறோம். வெறும் 10 ஆயிரம் கொடுத்துவிட்டு சாதனை என்கிறீர்கள். தேஜ கூட்டணி ஆட்சியில் ஒரே ஒருவருக்கு கடன் கொடுத்தீர்களா? பிற்படுத்தப்பட்டோர் கழகம், ஆதிதிராவிடர் வரை நிலை மேம்பாட்டு கழகம், மகளிர் மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் இதுவரை லோன் கொடுத்தீர்களா? என்றால் இல்லை. ஒத்தபைசா கொடுக்காமல் சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதா? இவ்வாறு விவாதம் நடந்தது.