Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எத்தனை முறை சொன்னாலும் கேட்காத ஆசாமிகளுக்கு கிடுக்குபிடி: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் பறிமுதல்; போலீசார் எடுத்த தடாலடி நடவடிக்கை

பெரம்பலூர், ஏப். 17: திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகே பெரம்பலூர் புது பஸ்டாண்டு அமைந்துள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் புது பஸ்டாண்டுக்கு வந்து சொல்லு கின்றனர். இதற்காக பெரம்பலூரில் இருந்து வெளியூர்களுக்கு, வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்களில் புது பஸ்டாண்டுக்கு வரக்கூடிய ஒட்டு மொத்த பயணிகளில் குறைந்த அளவு பயணிகளே தங்கள் பைக்குகளை நகராட்சி சார்பாக புது பஸ்டாண்டு உள்ளே அமைக்கப்பட்டுள்ள ஸ்டேண்டில் கட்டணம் செலுத்தி நிறுத்திவிட்டு செல்கின்றனர். பெரும்பாலான பைக்குகள் புது பஸ்டாண்டு வளாகத்திற்கு உள்ளே இயங்கி வரும் கடைகளுக்கு முன்பாக நிறுத்தி பூட்டிவிட்டு அருகிலுள்ள திருச்சி, அரியலூர், துறையூர், ஆத்தூர், தொழுதூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சென்று வந்து எடுத்துச் செல்கின்றனர்.

இவர்களில் பலர் கட்டுப்பாடு இன்றி கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தங்கள் இருப்பிடங்களில் நிறுத்திச்செல்ல இடையூறு ஏற்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பல பஸ்கள், நிறுத்தப்பட்டு இருப்பது உள்ளூர்காரரின் பைக்காக இருக்கும், யாரை கூப்பிட்டு அகற்றச் சொல்வது என காத்திருக்கும் பட்சத்தில் பின்னால் வரக்கூடிய இதர பஸ்களுக்கு இடையூறாக அமைந்து விடுகிறது. இதனால் பஸ்டாண்டு உள்ளேயே பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் தினமும் போக்கு வரத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புது பஸ்டாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் பைக்குகளை அபராதம் விதித்து அகற்றுங்கள் என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இதன்பேரில் நேற்று(16 ஆம்தேதி) பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மேற்பார்வையில், பெரம்பலூர் டவுன் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், பெரம்பலூர் டவுன் ட்ராபிக் இன்ஸ்பெக்டர் மகேஷ், ட்ராபிக் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, எஸ்எஸ்ஒ பன்னீர் செல்வம் மற்றும் டிராபிக் ஏட்டுகள் உள்ளிட்ட போலீசார் புது பஸ்டாண்டு உட்புறம் நடவடிக்கை மேற்கொண்டனர். டிராபிக் போலீஸ் சார்பாக ஏற்கனவே நோ பார்க்கிங் என போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எல்லையைத் தாண்டி வரக்கூடாது என்பது போல் 50 மீட்டர் நீளத்திற்கு தரையில் நைலான் கயிறு அடிக்கப்பட்டது. தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை உடனடியாக அகற்றிக் கொள்ளும்படியும், அகற்றா விட்டால் வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்படும் எனவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைக் கேட்டு அலறியடித்த பைக் ஆசாமிகள் பலர் தங்கள் பைக்குகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றனர்.

இருந்தும் சாவகாசமாக தங்கள் பைக்குகளை நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்ற ஆசாமிகளின் பைக்குகள் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தன. இதில் சிக்கிய 8 பைக்குகளை டவுன் டிராபிக் போலீசார் அள்ளி எடுத்துச் சென்று, புது பஸ்டாண்டு உள்ளே இயங்கி வரும் புறக்காவல் நிலையம் முன்பாக நிறுத்தி, இரும்பு சங்கிலியால் சுற்றி வளைத்து பூட்டு போட்டனர். மேலும் புதுபஸ்ஸ்டாண்டு வளாகத்திற்குள் இயங்கி வரும் கடை உரிமையாளரிடமும், ஊழியர்களிடமும் தங்கள் கடையின் முன்பு பைக்குகளை யாரும் நிறுத்த அனுமதிக்கக் கூடாது எனவும் டிராபிக் போலீஸாரால் எச்சரிக் கப்பட்டது.

இது தொடர்பாக சப்-இன்ஸ் பெக்டர் பிரசன்னா தெரிவிக்கையில், இன்று மாலையில் தங்கள் பைக்கு களைத் தேடிவரும் ஆசாமிகள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்படுவதோடு, இனி இவ்வாறு புது பஸ்ஸ்டாண்டு வளாகத்திற்குள் \\”நோ- பார்க்கிங் ஏரியாவில் தங்கள் பைக்குகளை நிறுத்த மாட்டோம்\\” என எழுதி வாங்கிக்கொண்டு பைக்குகள் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து இதுபோல் நோ- பார்க்கிங் ஏரியாவில் பஸ்களின் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் பைக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார். டிராபிக் போலீஸாரின் அதிரடியால் பெரம்பலூர் புது பஸ்டாண்டு வளாகத்திற்குள் நேற்றுக் காலை பரபரப்பாகக் காணப்பட்டது.