Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி: பட்டுக்கோட்டையில், இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பட்டுக்கோட்டை, ஏப்18: இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவதற்கான இரண்டு சட்ட முன் வடிவுகளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த சட்ட முன் வடிவை தாக்கல் செய்ததன் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்படுவார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை இயற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு பகுதியில் நேற்று 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்று திரண்டு பலூன்களை வைத்து ஆடிக் கொண்டும், பறக்க விட்டும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பஹாத்முகம்மது தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செல்வராசு, மாவட்ட செயலாளர் ஜலீல்முகைதீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் அஷ்ரப் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில் குமார் கலந்து கொண்டு பேசினார். முதலில் உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா அவர்களை வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் நன்றி கூறி வாழ்த்துகிறோம் என்று பலூன்களை வைத்து ஆடிக் கொண்டும், பறக்கவிட்டும் ஆனந்தமாக முழக்கமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டிக்கொண்டும், விழாவில் கலந்து கொண்ட நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில்குமார், புதுக்கோட்டைஉள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு இனிப்புகளை ஊட்டியும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் மகிழ்ச்சியை வௌிப்படுத்தும்விதமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கத்தின் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம், தஞ்சாவூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் புதுக்கோட்டைஉள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடாசலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக யூனியன் பொறுப்பாளர்கள் பார்த்தசாரதி, சுரேஷ்குமார், பட்டுக்கோட்டை நகர திமுக அவைத்தலைவர் தர், நகர துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் தனபால் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

உள்ளாட்சிகளில் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்

இந்த உலகமே உற்றுநோக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு வழங்கி எல்லோரும் சமம் என்பதை உறுதிப்படுத்திய உண்மையான திராவிட மாடல் அரசின் நாயகன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் உள்ளத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் கடைக்கோடியில் இருக்கக்கூடிய எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமில்லாமல் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாக திகழ உள்ளோம் என்பதை நினைக்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக எங்கள் அப்பாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என நெகிழ்ச்சியோடு கூறினார்கள் மாற்றுத்திறனாளிகளான பஹாத்முகம்மது, ரேவதி மற்றும் அஷ்ரப் ஆகியோர்.