Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உளுந்து அறுவடை பணி துவக்கம்

ராமநாதபுரம், ஜன.31: ராமநாதபுரம் மாவட்டத்தில் உளுந்து, தட்டான்பயறு பயிர்கள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளதால், தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, நயினார்கோயில், ராமநாதபுரம், திருப்புல்லானி உள்ளிட்ட வட்டார பகுதிகளில் குறைந்தளவில் உளுந்து, தட்டான்பயறு போன்ற பயிர் வகைகள் பயிரிடப்படுகிறது. குறுகிய கால பயிரான உளுந்து, விதை விதைத்தவுடன் இருக்கின்ற ஈரப்பதத்தில் வளரக் கூடிய செடி என்பதால், இந்தாண்டு நவம்பர், டிசம்பரில் பயிரிடப்பட்டது.

சாயல்குடி பகுதியில் மட்டும் கன மழைக்கு உளுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் ஓரளவிற்கு நன்றாக வளர்ந்ததால் தற்போது விறுவிறுப்பாக அறுவடை நடந்து வருகிறது. இதுகுறித்து பெருநாழி விவசாயிகள் கூறும்போது, கமுதி பெருநாழி பகுதியில் சுமார் 70 முதல் 80 நாட்களில் வளர்ந்து மகசூல் தரக்கூடிய வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, மதுரை 1 உள்ளிட்ட ரக உளுந்துகளை பயிரிட்டோம். இப்பகுதியில் மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு சுமார் 300 கிலோ முதல் 500 கிலோ வரை வழக்கமாக கிடைக்கும்.

ஆனால் இந்தாண்டு தொடர்ந்து மழையால் செடிகள் பாதிக்கப்பட்டு, மகசூல் குறைந்து காணப்படுகிறது. தற்போது செடி அறுவடை செய்து, உளுந்து பிரிக்கும் இயந்திரத்தை கொண்டு பிரித்தெடுத்து வருகிறோம். ஏக்கருக்கு வெறும் 100 கிலோ கிடைப்பதே அரிதாகி விட்டது. ஒரு கிலோ உளுந்து ரகம், தரத்திற்கேற்ப அதிகபட்சமாக ரூ.90 வரை செல்கிறது. இந்தாண்டு உளுந்து விவசாயத்திற்கு செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. கூலி ஆட்கள் கொண்டு அறுவடை செய்து, வாடகை இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்படும் உளுந்தை விருதுநகர், மதுரை வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.