தியாகதுருகம், ஜூலை 14: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை அருகே உள்ள கீழ்பாளையம் கிராமத்தை சேர்ந்த தணிகாசலம் மகன் சத்தியமூர்த்தி (28) என்பவரும் இவரது நண்பர்கள் மற்றும் சக இஸ்லாமிய தோழிகளும் சேர்ந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக நேற்று தியாகதுருகம் அருகே உள்ள புறவழிச் சாலையின் மேம்பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது பிரிதிவிமங்கலம் கரிம்ஷா தக்கா பகுதியை சேர்ந்த சர்தார் மகன் ஷா ஆலம் (44), ஷேக் பாட்ஷா மகன் சையத் ஜமீல் (40), சையத்குல்ஷாத் மகன் சையத்சாஜித் (35) மற்றும் சிலர் சேர்ந்து சத்தியமூர்த்தியிடம் எதற்காக எங்கள் மத பெண்ணுடன் இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கூறி கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சத்தியமூர்த்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சத்தியமூர்த்தியை அவர்கள் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து சையத் ஜமீல் மற்றும் சையத்சாஜித் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


