Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இளம்பெண் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச போட்டோ அனுப்பி டார்ச்சர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

வேலூர், மே 29: வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ், போட்டோ அனுப்பி தொல்லை கொடுப்பதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி மதிவாணன் தலைமையில் நேற்று நடந்தது. ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி சந்திரதாசன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.

இதில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த மனுவில், வீட்டில் மது விற்ற வழக்கில் கடந்த ஆண்டு என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது எனது வங்கி கணக்கையும் முடக்கினர். சிறையில் இருந்து திரும்பிய நிலையில் திருந்தி வாழும் நோக்கில் தற்போது நூறுநாள் திட்டத்தில் ேவலை செய்து வருகிறேன். ஆனால் வங்கி கணக்கு முடக்கம் காரணமாக எனக்கான கூலி கிடைக்கவில்லை. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்யவேண்டும்.

குடியாத்தம் கவுதம்பேட்டையை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவர் அளித்த மனுவில், மேல்ஆலத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மாத ஏலச்சீட்டு கட்டினேன். கடந்த ஆண்டு சீட்டு எடுத்தேன். ஆனால் அதன் தொகையான ரூ.2.03 லட்சத்தில் ரூ.50 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர். மீதி தொகையை தராமல் இழுத்தடிக்கின்றனர். இதைக்கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்பாடி அடுத்த லத்தேரியில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் அளித்த மனுவில், எனக்கும், பூதூர்மேடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு வந்த நிலையில், அதன்பின்னர் எனது கணவர் என்னை சந்திக்க மறுத்து வந்தார். அவரிடம் கேட்டதற்கு, தனக்கு கார் வேண்டும், உனது பெற்றோரிடம் கூறி வாங்கிக்கொடு என கேட்டார்.

அதற்கு மறுத்ததால் கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அவர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வசிக்கிறார். கடந்த ஒரு மாதமாக வெவ்வேறு எண்களில் இருந்து எனது செல்போனுக்கு ஆபாச மெசேஜ் மற்றும் புகைப்படங்கள் அனுப்பி தொல்லை செய்து வருகின்றனர். இதனை எனது கணவர் அனுப்பியிருக்கலாம். எனவே அவரை கண்டறிந்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.