இல்லாத நாடுகள் பெயரில் மெகா மோசடி; உபியில் வாடகை வீட்டில் போலி தூதரகம் : சொகுசு கார்களுடன் வலம் வந்தவர் கைதுஇல்லாத நாடுகள் பெயரில் மெகா மோசடி; உபியில் வாடகை வீட்டில் போலி தூதரகம் : சொகுசு கார்களுடன் வலம் வந்தவர் கைது
புதுடெல்லி: உபியின் காஜியாபாத்தில் உள்ள கவி நகரில் போலி தூதரகம் செயல்பட்டு வருவதாக சிபிஐ-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு ஆடம்பர பங்களாவில் ‘மேற்கு ஆர்ட்டிகா’ நாட்டுக்கான தூதரகம் என்கிற பெயரில் போலி தூதரகம் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பார்க்கும் யாரும் அது உண்மையான தூதரகம் என நம்பும் அளவுக்கு அதன் அமைப்பு இருந்தது. பங்களா முன்பு பல்வேறு நாடுகளின் தூதரக நம்பர் பிளேட் கொண்ட ஆடம்பர கார்கள் வரிசை கட்டி நின்றன. ஆங்காங்கே வெளிநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. கவி நகரை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்கிற நபர், பங்களாவை வாடகைக்கு எடுத்து, போலி தூதரகத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. பங்களாவில் இருந்த அவரை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,‘ஹர்ஷ்வர்தன் ஜெயின் 7 ஆண்டுகளாக இந்த போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார். மேற்கு ஆர்ட்டிகா, சபோர்கா, பவுல்வியா, லோடோனியா என இல்லாத நாடுகள், அதாவது அங்கீகரிக்கப்படாத நாடுகளின் தூதர் என தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு , வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறியும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பரிமாற்றம் செய்தும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் சம்பாதித்து வந்துள்ளார். மக்களை நம்ப வைக்க தூதர அதிகாரிகள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி சொகுசு கார்களில் வலம் வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்ற முக்கிய பிரமுகர்களுடன் இருப்பது போன்று போட்டோக்களை மார்பிங் செய்து வைத்துள்ளார்.
அவரிடம் இருந்து ரூ.44 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுடன் கூடிய 4 கார்கள், பாஸ்போர்ட்கள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சீலுடன் கூடிய போலி ஆவணங்கள், போலி பான் கார்டுகள், பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் 34 போலி சீல் கட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளோம். ஹர்ஷ்வர்தன் ஜெயினுக்கு இவருக்கு சர்ச்சைக்கு பெயர்போன சாமியாரான சந்திராசாமி, சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் ககோஷி ஆகியோருடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவர், கடந்த 2011ம் ஆண்டு சேட்டிலைட் போன் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்’ என்றனர்.
இந்தியாவில் முதல் முறையாக போலி தூதரகம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.