விருத்தாசலம், மார்ச் 19: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் வெள்ளாற்றில் மணல் திருடப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார், இறையூர் வெள்ளாற்று பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றுக்குள் மினி டெம்போவை நிறுத்திக்கொண்டு சாக்கு மூட்டைகளில் மணலை கட்டிக் கொண்டிருந்த 5 பேரை பிடிக்க சென்றபோது, 3 பேர் மட்டும் போலீசாரின் பிடியில் சிக்கினர். இரண்டு பேர் தப்பினர்.
இதையடுத்து மூன்று பேரையும் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் மணிவேல் (28), சங்கர் மகன் பாரதிதாசன்(19), செல்வராஜ் மகன் குருராஜ்(22) எனவும் கொளஞ்சி மகன் மாதேஷ் மற்றும் செல்வம் மகன் சுதாகர் ஆகியோர் தப்பி ஓடியவர்கள் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மணிவேல், பாரதிதாசன், குருராஜ் ஆகிய 3 பேரை கைது செய்ததுடன் மணல் திருட பயன்படுத்திய மினி டெம்போவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.