Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரம்பப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்:  மாணவ-மாணவிகள் அவதி  நோய் பரவும் என பெற்றோர் அச்சம்

வாலாஜாபாத், ஆக.8: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கியுள்ள மழைநீரில் இறங்கி விளையாடும் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர் அச்சம் அடைந்து வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும், ஊராட்சியில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை மருந்தகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையையொட்டி தேவரியம்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த, ஊராட்சியில் சாலையையொட்டி அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் மற்றும் அங்கன்வாடியில் குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த வாலாஜாபாத் - ஒரகடம் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆறு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், சாலை மட்டத்திலிருந்து தற்போது பள்ளி வளாகம் 3 அடிக்கு தாழ்வான நிலையில் சென்றதால், சிறியளவு மழை பெய்தாலும், பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தோங்கி காணப்படுகின்றது. இதில் பள்ளி மாணவர்கள் விளையாடுவதும், வழுக்கி விழுந்து சேறும் சகதியமாக வீடு திரும்புவதும் தொடர் கதையாகி உள்ளன. இதனால், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு காய்ச்சல், சளி, இரும்பல் உள்ளிட்ட நோய் தொற்றுகளும் ஏற்படுவதாக இப்பகுதி மாணவ - மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி. இங்குள்ள ஆரம்பப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில், லேசான மழை பெய்தால் இப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போன்று காட்சியளிக்கின்றன. இதில், பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் தங்களை அறியாமல் மழைநீரில் விளையாடுவது, நடந்து செல்வதும் போன்ற நிகழ்வால் குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் சூழல் நிலவுகின்றன. இதுபோன்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து மழைநீர் பள்ளி வளாகத்தில் உள்ளே வராத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.