ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற கன்டய்னர் லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில், ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயமடைந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் இருந்து, ஊத்துக்கோட்டைக்கு நோயாளியை ஏற்றி சென்றுவிட்டு, மீண்டும் தண்டலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அரக்கோணம் - சென்னை நெடுஞ்சாலை வழியாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, வளர்புரம் பெட்ரோல் பங்க் எதிரே பழுதடைந்து சாலையின் நடுவே நின்ற கன்டெய்னர் லாரியின் மீது ஆம்புலன்ஸ் மோதியது.
இதில் ஆம்புலன்ஸின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரசாந்த் கால் மற்றும் தலையில் பலத்த காயம் எற்பட்டது. இதனைகண்ட அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த பிரசாந்தை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தண்டலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த, விபத்தால் அரக்கோணம் - சென்னை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


