ஆபாச புகைப்படம் அனுப்பி 2 குழந்தைகளின் தாய்க்கு மிரட்டல் திருப்பத்தூர் இன்ஸ்டாகிராம் காதலன் கைது வேலூரில் தனிமையில் இருந்த
வேலூர், ஜூலை 8: வேலூரில் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படத்தை அனுப்பி 2 குழந்தைகளின் தாயை மிரட்டிய திருப்பத்தூர் இன்ஸ்டாகிராம் காதலனை போலீசார் கைது செய்தனர். வேலூரில் ஒரு பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் பெரிய மூக்கனூரை சேர்ந்த ராகவன்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடன் திருப்பத்தூர் வந்து தங்குமாறு ராகவன் இளம்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் இளம்பெண் வர மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ராகவன், இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படத்தை இளம்பெண்ணின் செல்போனுக்கு அனுப்பி மிரட்டி உள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் நேற்றுமுன்தினம் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.