Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

அருமனை, செப்.7: அருமனை அருகே நண்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் அருமனை அருகே குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (60). ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி டெய்சி பாய். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (60). கூலித்தொழிலாளி. ஜான்சனும், ரசல்ராஜும் பள்ளியில் ஒன்றாக படித்தபோதே நெருங்கிய நட்புடன் பழகி வந்து உள்ளனர். வயதான பிறகும் 2 பேரும் அடிக்கடி பேசிக்கொள்வது, சுக துக்கங்களை பரிமாறிக்கொள்வது என்று நட்பை பேணி வந்து உள்ளனர். இந்தநிலையில் ஜான்சன் சமீபகாலமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை ஜான்சன் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், ஜாண்சன் அதே பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள ரப்பர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜான்சனின் உடலை மீட்டனர். இது எதுவும்தெரியாமல் ரசல்ராஜ் வழக்கம்போல் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அதிர்ச்சியுடன் ஓடிவந்த ரசல்ராஜின் மனைவி, உங்களது நண்பன் ஜான்சன் ரப்பர் மரத்தில் தூக்குபோட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசல்ராஜ், எதுவுமே பேசவில்லை. அப்படியே கையில் உணவு வைத்தபடியே சுருண்டு விழுந்து மயங்கினார்.

இதைக்கண்டு பதறிப்போன அவரது மனைவி உடனே ரசல்ராஜை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்து பார்க்கையில் ரசல்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார்.

நண்பன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்தும் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.