அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ18 லட்சம் மோசடி செய்தவர் கைது சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சி, செப்.27: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் முகநூலில் அரசாங்க வேலை வாங்கி தருவதாக விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். பின்னர் கிருஷ்ணன் அதில் இருந்த முகநூல் ஐடியை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆர்டிஓ அலுவலகத்தில் கிளர்க் வேலை வாங்கி தருவதாகவும், அந்த வேலையை பெறுவதற்கு பணம் தர வேண்டும் என கூறியதாகவும் அதனை நம்பி கிருஷ்ணன் 216 முறை தவணையாக மொத்தம் ரூ.18 லட்சத்து 16 ஆயிரம் பணத்தை அந்த நபர் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு செலுத்தியுள்ளார்.
ஆனால், பெயர் முகவரி தெரியாத முகநூல் பக்கத்தில் பொய்யான முகவரி வைத்திருக்கும் அந்த நபர் எந்த வேலையையும் வாங்கி தராமல் கொடுத்த பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து அரசு வேலை கிடைக்கும் என நம்பி பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 24ம்தேதி புகார் அளித்துள்ளார். இதுசம்பந்தமாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்ததில் திருப்பூர் மாவட்டம் படியூர் கிராமத்தை சேர்ந்த ஜேம்ஸ்தாமஸ் மகன் ஜெர்ரிமேக்ஸ்(30) என்பவர் மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் ஜெர்ரிமேக்ஸை அதிரடியாக கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


