செங்கல்பட்டு, டிச.9: அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் தொட்டியை கடந்து செல்லும்போது கடப்பா கல் உடைந்து தொட்டிக்குள் விழுந்த எருமைமாடு பத்திரமாக மீட்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பிணவறை அருகே ஒரு கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மேல்பக்கத்தில் கடப்பா கல்லைக்கொண்டு மூடப்பட்டிருக்கும். பொதுவாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஆடு, மாடுகள் எப்போதும் சுற்றித்திரிவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றையதினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேய்ச்சலுக்கு வந்த எருமை மாடு ஒன்று கழிவுநீர் தொட்டி மீது ஏறி கடந்து செல்ல முயன்றுள்ளது. அப்போது, எருமை மாட்டின் பாரம் தாங்காமல் கடப்பா கல் உடைந்து எருமை மாடு கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி கயிறு வாயிலாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு எருமை மாட்டினை உயிருடன் மீட்டனர்.