அரசு புறம்போக்கு இடத்தை அனுபவிப்பது தொடர்பாக தவெக-பாமக நிர்வாகிகள் மோதல்: உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை, ஜூலை 25: உளுந்தூர்பேட்டையில் தவெக-பாமக நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் அருள்மணி. இவரது மகன் விஜய்செல்வா (33) இவர் தமிழக வெற்றிக் கழக நகர நிர்வாகியாக உள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் ரவி மகன் சூர்யா என்பவர் பாட்டாளி மக்கள் கட்சி நகர நிர்வாகியாக உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே இதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை அனுபவிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் தகராறை விலக்கிவிட முயன்றனர். அப்போது இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசார் முன்னிலையில் தடி, கல் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் காயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாமக நிர்வாகி ரவி மகன் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி விஜய்செல்வா, இவரது தாய் ஞானாம்பாள் மற்றும் அவரது உறவினர்கள் பரத், ஜெயராஜ், மணிகண்டன், விக்கி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதே பிரச்னை தொடர்பாக விஜய்செல்வாவின் தாய் ஞானாம்பாள் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் பாமக நிர்வாகி பாலாஜி, சூர்யா, ரவி, அபிநயா, மஞ்சுளா உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு புறம்போக்கு இடத்தை அனுபவிப்பது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிக்கும், பாமக நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


