சேலம், ஜூன் 11: கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், சேலம், மணக்காடு காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடந்தது. இதனை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகள் புதிதாக ஆதார் எடுக்கவும் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக அட்டவணை தயார் செய்யப்பட்டு சிறப்பு முகாம்கள் பள்ளிகளிலேயே நடத்தப்படுகிறது. தேவையுள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த முகாம் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இம்முகாமினை பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதாரில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புதிய ஆதார் எண்களை பெற்றுத்தரவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உள்பட பலர் உடனிருந்தனர்.
+
Advertisement