Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு கலைக் கல்லூரி விழா; இளைஞர்கள் இயற்கையை பாதுகாப்பது மிக அவசியம் மாணவர்களுக்கு அறிவுரை

தொண்டாமுத்தூர், ஜூலை 10:கோவை அருகே தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி 6ம் நாளாக நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை உரையற்றினார். பொருளியல் துறை பொறுப்புத் தலைவர் பிருந்தா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் கலந்துகொண்டு ‘இயற்கையை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசுகையில், இந்தியாவின் உச்சியை தொட்டவர்கள் அனைவரும் அரசு கல்லூரியில் படித்தவர்கள். பூமி மட்டுமே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றது, இது உயிர்க்கோளப் பகுதி என்பதையும் வாழ்க்கை பற்றிய புரிதலை ஏற்றுக் கொள்வது, பூமியை பற்றிய அறிவு ஆகியவை மாணவர்களின் தேவை. மனித குலம் தவறியது, பூமியை புரிந்து கொள்ளாமல் இருப்பது, காற்று மாசுபடுதல் என்பது இன்றைய மனிதர்கள் சந்திக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

உயிர் காற்று போகாமல் வயதானவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய பிரச்னைகள் கேள்வியாக மாறும்பொழுது இளைஞர்களின் பங்கு தேவைப்படும் சூழ்நிலையில் உள்ளது.  நூறு வருடங்களாக டீசல் பெட்ரோல் பயன்பாடு அதிகமானதால் கார்பன்-டை-ஆக்சைடு பிரச்னைகள் காற்று மாசுபடுதலுக்கு காரணமாக உள்ளது. அதனால் ஏற்பட்ட தாக்கமே இன்றைக்கு மின்சார வாகன உற்பத்தியும் சூரிய ஒளி பயன்பாடும் அதிகமாகியுள்ளது. மரங்கள் நமக்கு தேவை, பூச்சிகள் இல்லை என்றால் மரங்கள் இல்லை, அறிவியல் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் இந்த பூமிக்கு தேவை என்பதையும், பூ காயாகும் காய் பழமாவதும் பூச்சி மற்றும் பறவைகளால்தான்.

பறவைகள் சாப்பிட்டு வெளியிட்ட விதைகள் பறவையின் எச்சில் பட்டு வருவதால் மரங்கள் நன்றாக செழித்து வளர உதவுகிறது. இளைஞர்கள் இயற்கையை பாதுகாப்பது அவசியம். முடிந்த அளவிற்கு அக்கறையான தலைமுறை உருவாக வேண்டும். பாம்பு, சிட்டுக்குருவி, பட்டாம்பூச்சிகளை காப்பதற்கு அந்தந்த அமைப்புகள் உண்டு. தேவைகள் வரும் பொழுது அந்த அமைப்புக்களை நாம் பயன்படுத்தி பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு முயற்சி செய்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு இயற்கையைப் பற்றிய அறிவையும், இயற்கையையும், பூமியையும் பாதுகாக்க இயலும். இதற்கு அடித்தளமாக இளைஞர்கள் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். கௌரவ விரிவுரையாளர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.