Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு அருங்காட்சியங்களில் பார்வையாளர் நேரம் மாற்றம்: அதிகாரிகள் தகவல்

வேலூர், ஆக.12: வேலூர் உட்பட 23 மாவட்டங்களில் செயல்படும் அரசு அருங்காட்சியங்களில் பார்வையாளர் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் அருங்காட்சியகங்களின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான சென்னை அரசு அருங்காட்சியகம் 1851ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுதந்திரத்தின்போது சென்னைக்கு அடுத்தப்படியாக புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் மற்றும் அதனைத் தொடர்ந்து சில அருங்காட்சியகங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

அருங்காட்சியகங்கள் துறையின் கீழ் 23 மாவட்ட அரசு அருங்காட்சியகங்கள் இயங்கி வருகிறது.. சென்னை மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியகங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன. அருங்காட்சியக கையேட்டின்படி செயல்பட்டுவரும் அருங்காட்சியகத்திற்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலை நேரத்தில் வருகின்றனர். ஆனால் தற்போதுள்ள கால அட்டவணைப்படி அருங்காட்சியகங்கள் காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படுவதால் அவர்களால் அருங்காட்சியகத்தை பார்வையிட முடியாமல் போகிறது என புகார் எழுந்தது.

இதனால் அருங்காட்சியகங்கள் துறையின் கீழ் இயங்கும் சென்னை அரசு அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியகங்களின் திறந்து வைக்கும் நேரம், முடிவடையும் நேரம் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான விடுமுறை நாட்கள் ஆகியவற்றை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட அருங்காட்சியங்கள் திறக்கும் நேரம், முடிவடையும் நேரம் மற்றும் அருங்காட்சியகங்களுக்கான விடுமுறை நாட்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும், சென்னை அரசு அருங்காட்சியத்திற்கு அரசால் அனுமதிக்கப்படும் விடுமுறை நாட்கள். அதில் வெள்ளி மற்றும் தேசிய

விடுமுறை நாட்கள் ஜனவரி 26ம், ஆகஸ்ட் 15ம், அக்டோபர் 2ம், தீபாவளி, பொங்கல் திருநாள், வேலூர் உட்பட மற்ற மாவட்ட அரசு அருங்காட்சியங்கள் வெள்ளி, 2வது சனிக்கிழமை மற்றும் தேதிய விடுமுறை நாட்கள், ஜனவரி 26ம், ஆகஸ்ட் 15ம், அக்டோபர் 2ம், தீபாவளி மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறை வழங்கப்படுகிறது. குறிப்பாக முக்கியமான பண்டிகை நாட்கள், அனைத்து அருங்காட்சியங்களுக்கு தீபாவளி ஒருநாள், பொங்கல் ஒரு நாள் விடுமுறையாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாக்ஸ்.....

வேலூர் அருங்காட்சியகத்தில் புதிய நடைமுறை அமல்

வேலூர் கோட்டையில் மாநில அரசு சார்பில் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாட்டினர் என பலர் வந்து செல்கின்றனர். மேலும் வரலாற்று தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அருங்காட்சியத்திற்கு வருகின்றனர். இங்கு முக்கிய நாட்களில் ஓவியப்போட்டி, எழுத்துப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் காலை 9.30 மணியளவில் இருந்து மாலை 5 மணி வரை இயங்கி வந்தது. தற்போது புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், நேரத்தை மாற்றி புதிய நேர அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இனி காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக வேலூர் அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவக்குமார் தெரிவித்தார்.