வத்திராயிருப்பு, அக்.10: வத்திராயிருப்பு பகுதியில் முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். தேரோட்டத்திற்கு முன்னதாக வடக்காட்சி அம்மன் கோவிலில் மது பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளை கொண்ட திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. காலையில் வடக்காட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்றது. கோயில் முன்பாக உள்ளாக மைதானத்தில் ஏராளமான பெண்கள் பொங்கலுக்கு வழிபாடு செய்தனர். இரவில் மது பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறுமி கலயத்தை சுமந்தபடி கோவிலில் வலம் வந்தார். பக்தர்கள் அவரை வழிபட்டனர்.
சிறுமி கலையத்தை பலிபீடம் முன்பாக இறக்கி வைத்த சிறிது நேரத்திலேயே மது கலவை பொங்கி வழிந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் குலவையிட்டு வழிபட்டனர். இதனை தொடர்ந்து முத்தாலம்மன் கோவில் தேரோட்ட விழாவிற்கான பறைசாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் தப்பை மேளங்கள் முழங்க ஊர் முழுவதும் தேரோட்டம் நடைபெறும். தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் அறிவிப்பு செய்யப்பட்டது.