Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அனைத்துதுறை அலுவலர்கள் வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் கண்காணிப்புகுழு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

கரூர், ஜூன் 2: அனைத்துதுறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத் தலைவரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி எம்பி தலைமையில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் முன்னிலையில் நேற்று அனைத்துதுறை அலுவலர்களுடன் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், எம்பி ஜோதிமணி பேசியதாவது:

மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும் போது, அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, முறையாக நிதிகள் சென்று சேர்வதையும், அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் அனைத்து துறை அலுவலர்களுடன் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 62 திட்டங்கள் ஆய்வுக்கு எடுததுக் கொள்ளப்பட்டு, அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த குழுவானது, அனைத்து திட்ட பணிகளும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவது உறுதி செய்து, திட்ட செயல்பாடுகளின் இடர்பாடுகளை களைய ஒருங்கிணைந்த வழிகளை அறிந்து மாவட்ட திட்டக்குழுவின் முன்னுரிமை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, முன்னுரிமை பணிகளுக்கு இடம் மற்றும் நில வசதிகள் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, ஒன்றிய, மாநில அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட நோக்கங்களை கொண்டு செயல்படுகிறது.

அவற்றில், குறிப்பாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டம், ஆதர்ஸ் கிராம யோஜனா, தீன் தயாள், சமூக பாதுகாப்பு திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டம், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்று ஜோதிமணி எம்பி பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:

பொதுமக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு, சாலை, குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் ஆய்வு மேற்கொள்ள்பபட்டு வருகிறது. ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் இலக்குகளையும், துறைத்தலைவர்கள் மேலும் விரைவாக மேற்கொள்ள இந்த கலந்தாய்வு கூட்டம் துணையாக உள்ளது.

மேலும், அனைத்து துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறிப்பிடப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், திட்ட இயக்குனர் லேகா தமிழச்செல்வன், மகளிர் திட்ட இயககுநர் பாபு, மாநகராட்சி கமிஷனர் சுதா, சார்ஆட்சியர் சுவாதி உள்பட அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.