முசிறி, மார்ச் 19: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ஆரமுத.தேவசேனா தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் லோகநாதன் (முசிறி), சேக்கிழார் (தொட்டியம்), மோகன் (துறையூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் கருத்து தெரிவிப்பு நடத்தப்பட்டது. இதில் வாக்களிக்கும் இடத்தில் வாக்காளர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் வசதிகள் ஏற்படுத்துவது, மக்கள் வாக்களிக்கும் இடம் குறைந்த பட்ச தூரத்தில் இருத்தல் வேண்டும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூறினர். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள், தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றிருந்தனர்.