என்றென்றும் அன்புடன் 8
நன்றி குங்குமம் தோழி
பொறாமை வேண்டாமே...
நம்மை ஒருவர் தாக்கினால் அதை தண்டனையாகக் கொள்ளுவோம். நம்மை நாமே தண்டித்துக் கொள்ளுவது என்பது பொறாமை கொள்வது. பொறாமை என்பது சவுக்கால் நம்மை நாமே அடித்து கொள்வது போன்றது.பிறரின் வளர்ச்சி நம்மை பொறாமையில் தள்ளும். சிறு வயதில் இருந்து ஏற்பட்ட தோல்விகளும் ஏமாற்றமும் நம்மை ஒரு ஆழ்மனப் பிறழ்வில் அழுத்தும். அதுவே பொறாமைக்கு அடித்தளமாக அமையும். பொறாமை புகுந்தால் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் மறந்து நம்மைப் பற்றிய சிந்தனை விஸ்வரூபம் எடுக்கும்.
துரியோதனனுக்கு எல்லாம் இருந்தது. அவனுடைய தந்தையிடம் ராஜ்ஜியம் இருந்தது. உடன் பிறந்தவர்கள், சிறந்த குரு துரோணர் எல்லாம் இருந்தும் தந்தையை இழந்த பஞ்ச பாண்டவர்களின் மீது பொறாமை தீப்போல் அவனுள் பரவியபடி இருந்தது. அது அவனுடைய பலத்தை உணரச் செய்யவில்லை. பீமனைப் பற்றியும் அர்ஜுனனை பற்றியும் ஆத்திரப்பட்டுக் கொண்டே இருந்தான். சிறு வயதிலேயே வெறுப்பு அவனைச் சூழ்ந்தது. அந்த வெறுப்பே பீமனைக் கொல்வதற்கு திட்டம் போட வைத்தது.
பீமனின் உணவில் விஷம் கலந்தான். அவன் மயங்கியவுடன் கங்கையில் பிடித்துத் தள்ளினான். கங்கையில் விழுந்த பீமன் நாக லோகத்திற்குச் சென்றான். அங்கு அவன் மூதாதையர்கள் அவனை காப்பாற்றினர். நாகலோகத்தின் அரசன் வாசுகி பீமனுக்கு பல வரங்கள் கொடுத்தார். ஆயிரம் யானை களின் பலம் கொண்டு பீமன் மீண்டு வந்தான்.துரியோதனின் பொறாமை பீமனுக்கு ஆசிர்வாதமாய் மாறிற்று. பொறாமையின் விதை ஒப்பீடு (comparison). இந்த விதையை முதலில் விதைப்பவர்கள் நம் சுற்றத்தவர்கள்.
அந்தப் பையன் நல்லமார்க் வாங்கி இருக்கான் பாரு. நீ ஏன் வாங்கல?
அந்தப் பொண்ணு நல்லா பாடறா, உனக்கு ஏன் பாட்டு வரலை ?
அவங்க வீட்ல பெரிய கார் இருக்கு. நாமளும் வாங்கணும்.
கொஞ்ச நாட்களில் வெளியில் இருந்து யாரும் இந்த ஒப்பீடுகளை செய்ய வேண்டாம். நமக்கு நாமே செய்து கொள்வோம். நம் மனம் பழகிவிடும்.
ஏன் எனக்கு ப்ரோமோஷன் கிடைக்கல. அவனுக்கு மட்டும் கிடைச்சு இருக்கு?
அவனுக்கு வீடு நல்லா அமைஞ்சு இருக்கு. எனக்கு ஏன் அமையலை?
இந்த ஒப்பீடு, பொறாமையாக மாறும். நம்மை சிறுகச் சிறுக கொல்லும்.பொறாமை செய்யும் முதல் தீங்கு. நம்முடைய கற்றல் என்னும் ஆற்றலை வேரோடு அழிக்கும். உள்ளுக்குள் கருமை படரும். அதுவே முகத்தில் பிரதிபலிக்கும்.பொறாமை என்பது பெரும் புதைகுழி. அதில் வீழ்ந்தவர்கள் பெரும்பாலும் மீள்வதில்லை.ராமர், சீதா, லட்சுமணனுடன் வனவாசத்தின் போது தண்டகாரண்யத்திற்குள் நுழைந்து எளிமையான குடிசையில் தனிமையில் வசிக்கும்போது, சூர்ப்பனகை ராமரை சந்திக்கிறாள். அவருடைய அழகு ,கம்பீரத்தால் கவரப்பட்டு, அவள் உடனடியாக காதலில் விழுந்து, தனது சக்திகளைக் கொண்டு ஒரு அழகான பெண்ணாக மாறுகிறாள்.
சூர்ப்பனகை ராமரை மணந்துகொள்ளும் நம்பிக்கையுடன் அணுகுகிறாள். ஆனால், அவளுடைய முன்முயற்சிகள் நிராகரிக்கப்படுகின்றன. ஏக பத்தினி விரதம் பூண்டிருக்கும் ராமர், மெதுவாக மறுத்து, தனது மனைவி மீதான தனது அசைக்க முடியாத பக்தியை விளக்குகிறார். பின்வாங்காமல், சூர்ப்பனகை பின்னர் தனது கவனத்தை லட்சுமணனிடம் திருப்புகிறார். அவர் தனது பாசங்களுக்கு அதிக வரவேற்பு அளிப்பார் என்று நம்புகிறார். இருப்பினும், லட்சுமணனும் அவளை நிராகரித்து விடுகிறார்.
அவமானமாகவும், கோபமாகவும், சூர்ப்பனகையின் நிராகரிப்பு உணர்வுகள் ஆத்திரமாக ,பொறாமையாக மாறுகின்றன. தன் காதலுக்குத் தடையாக இருப்பதாக நம்பிய சீதைக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கிறாள்.அதற்கு பதிலளிக்கும் விதமாக, லட்சு மணன், சீதையைப் பாதுகாக்கும் ஒரு செயலில், தெய்வீக சக்திகளால் மந்திர ரீதியாக சக்தி வாய்ந்த ஆயுதமாக மாற்றப்பட்ட ஒரு புல்லை எடுத்து, சூர்ப்பனகையைச் சிதைக்க, அவளுடைய மூக்கு மற்றும் காதுகள் வெட்டப்படுகிறது.சூர்ப்பனகை பொறாமையால் தன்னை மறந்தாள். தனது சகோதரன் ராவணனிடம் பழிவாங்கச் சொல்கிறாள். அவள் தன் கதையை விவரிக்கிறாள். தன்னை ஒரு அநீதியான செயலுக்கு பலியானதாக சித்தரிக்கிறாள். தன் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தால் கோபமடைந்த ராவணன், ராமரைப் பழிவாங்கி அவரை அழிப்பதாக சபதம் செய்கிறான்.
சூர்ப்பனகையின் பொறாமை துயரமான நிகழ்வுகளின் சங்கிலியை உருவாக்கியது. இறுதியில் ராமாயணத்தில் பெரும் போரைத் தூண்டுகிறது. பொறாமையில் இருந்து தப்புவதற்கு ஒரே வழி, நம்பிக்கை வளர்த்தல். புது விஷயங்களை கற்றுக் கொள்ளுதல். பொறாமை எல்லோருக்கும் வரக் கூடிய உணர்வு. பொறாமை வந்தவுடன் நம் இயலாமை நம் கண் முன் நிற்கும்.
கோபமாக மாறும்.
இந்த இடத்தில் நாம் கவனமாக ஏதேனும் ஒன்றை பற்றிக் கொள்ள வேண்டும். கடவுள் பக்தியோ, விளையாட்டோ, கலைகளோ, உடற்பயிற்சியையோ இறுக்கிக் கொள்ள வேண்டும். பொறாமைக்கு உண்டான விஷயத்தை ஆராய்ந்து, பொறாமையை நம் பலமாக மாற்றிக் கொள்ள ஒரே வழி புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வது. இல்லையென்றால் சிறு வயதில் கைவிட்ட ஒரு நல்ல பழக்கத்தை மீட்டு எடுப்பதற்கு பெரிதும் உதவும்.
பாண்டவர்கள் அனைத்தையும் இழந்த பின்பும், நம்பிக்கை இழக்கவில்லை. தங்களுடைய ஆற்றலை மேம்படுத்தியபடி இருந்தனர். கண்ணனின் வார்த்தைகளில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களுடைய சுயதர்மத்தை கை விடாமல் செய்து கொண்டு இருந்தனர்.பஞ்சபாண்டவர்களுக்குள் பொறாமை வரக் கூடிய பல தருணங்கள் இருந்தும், அவர்களின் தன்னம்பிக்கை அவர்களை உயர்த்திச் சென்றது.
(தொடரும்)
தொகுப்பு: ரம்யா வாசுதேவன்