துக்கம் ஏன் வருகிறது?
‘‘மனமது செம்மையானால்...” என்று தொடங்கும் வரிகள் அகத்தியர் சித்தர் பாடல்களில் காணப்படும் புகழ்பெற்ற வரிகளாகும்.
இதன் முழுப் பொருள், ‘‘மனம் ஒரு நிலைப்பட்டு தூய்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை; வாயுவை உயர்த்தவும், மூச்சைப் பிடித்து நிறுத்தவும் வேண்டியதில்லை” என்பதாகும். அதாவது, மனதைச் செம்மையாக்கி, ஒருமுகப்படுத்தினால், வெளிப்படையான தியானப் பயிற்சிகளும், சடங்குகளும் தேவையில்லை என்பது இதன் உட்கருத்தாகும்.
முழுப் பாடல் வரிகளை காண்போம்:
மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால்
வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால்
வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால்
மந்திரஞ் செம்மையாமே
சில பாடல்களின் முதல் வரி நம் மனதைக் கவர்ந்துவிடும். அடிக்கடி அந்த வரியையே நினைக்கத் தோன்றும்.
திரைப்படப் பாடல்களிலும் அதன் பல்லவி என்பது மிக முக்கியமானது.
பல்லவிதான் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்று கவிஞர் வாலி ஒரு
பேட்டியில் சொல்லியிருக்கின்றார்.
பல்லவி நல்ல முறையில் அமைந்து விட்டால் சரணங்கள் கொஞ்சம் முன்பின்னாக இருந்தாலும் கூட அந்தப் பாடல் வெற்றி பெற்றுவிடும்.
பெரும்பாலான ரசிகர்கள் அந்தப் பல்லவி வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்களே தவிர, சரணம் வரை செல்ல மாட்டார்கள் என்று சொல்வார் வாலி.
அதைப்போல இந்தப் பாடலின் முதல் வரி பல்லவி போல அமைந்து பல்வேறு சிந்தனைகளைத் தந்து கொண்டே இருக்கும்.
எத்தனை அற்புதமான வரி...
“மனம் செம்மையாகிவிட்டால்” வாழ்க்கையில் துன்பங்களே இருக்காது. மனம் செம்மை அடைதல் என்றால் தூய்மை அடைதல், உண்மையை உணர்ந்து கொள்ளல், தெளிவடைதல் ,சஞ்சலம் இல்லாமல் இருத்தல் என்று பல பொருள்களைச் சொல்லலாம்.
மனத்தெளிவு பெற்றுவிட்டால் வேறு மருந்து வேண்டியதில்லை என்பார்கள். காரணம், எந்தப் பிரச்னையையும் தெளிவான மனதால் சமாளித்து விட முடியும். சங்கடங்களை எதிர்கொள்ள முடியும்.
சங்கடங்களையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வெற்றி பெற முடியும்.
மனத்தெளிவு மனத் துணிவைத் தரும். மனத்துணிவு செயலில் வெற்றியைத் தரும். வெற்றி என்பது மகிழ்ச்சியைத் தரும். இது ஒரு வரிசை முறை.ஆனால், ஆன்மிகத்தில் மனத் தெளிவு என்பது அறிவுத் தெளிவு என்று சொல்லலாம். இந்தத் தெளிவு பிறந்துவிட்டால் நமக்கும் தெய்வத்துக்கும் அல்லது நமக்கும் பிரபஞ்சத்துக்கும், நமக்கும் நம் வாழ்வியலுக்கும், நமக்கும் நம் உறவுகளுக்கும் உள்ள தொடர்புகள் அத்தனையும் புரிந்து விடும். காரியங்களுக்கான காரணம் புரிந்து விடும்.அடுத்து என்ன நிகழும் என்பது தெரிந்துவிடும்.இந்தத் தெளிவு பெற்றவர்களுக்கு வாழ்க்கையில் என்ன சங்கடம் இருக்க முடியும்?ஆனால், இது எளிதான நிலையா... என்றால் எளிதான நிலை அல்ல.
குழப்பத்தையும் கலக்கத்தையும் நோக்கி பள்ளமடை போல் பாயும் மனம், தெளிவை நோக்கி மேலே ஏறுவதற்கு மிகவும் சிரமப்படும். பொய்யையும் கற்பனையான விஷயங்களையும் நிஜம் என நம்பும் மனம் எதார்த்தமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள தயங்கும். வாழ்வின் சிக்கல்களுக்கும் துயரங்களுக்கும் இதுவே காரணம்.அது என்ன, கற்பனையை மனம் உண்மை என்று நம்புமா? என்று ஒரு கேள்வி கேட்கலாம்.இதற்கு ஒரு உதாரணம் சொல்லுகின்றேன்.ஒரு பெரியவர் தன்னுடைய கடைசி காலத்தில் மகனை அழைத்து சில பத்திரங்களைத் தந்தார்.
‘‘மகனே, இதெல்லாம் நமக்கு கடன் தர வேண்டியவர்கள் எழுதிக்கொடுத்த பத்திரங்கள். இதை பத்திரமாக வைத்துக் கொண்டு இரு. இதுதான் நமது செல்வம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
பையன் அந்தப் பத்திரங்களை வைத்துக் கொண்டிருந்தார். யாராவது ஒருவர் கடனை திருப்பி பத்திரங்களைப் பெற்றுச் சென்றால் மறுபடியும் வேறு ஒருவருக்கு பத்திரம் வாங்கிக் கொண்டு கடன்
தருவார்.இந்தச் சுழற்சி முறையில் அவருக்கு நிறைய பணம் சேர்ந்து விட்டது.
ஆனால், அத்தனையும் அவர் பீரோவில் கடன் பத்திரங்களாகவே இருந்தன. அவருக்கும் வயதாகிவிட்டது. அவரும் கடைசி காலத்தில் தன் மகனை அழைத்து , ‘‘மகனே, இதோ இந்த பீரோவில் உள்ள பத்திரங்களை எல்லாம் பத்திரமாக வைத்துக்கொண்டு இரு. என்னுடைய தகப்பனார் என்னிடத்திலே 10 லட்சம் பெறுமானம் உள்ள கடன் பத்திரங்களைத் தந்தார். நான் அதை சுழற்சி முறையில் கடன் தந்து இன்று 60 லட்சம் பெறுமானமுள்ள பத்திரங்கள் உனக்கு விட்டுச் செல்லுகின்றேன். நீயும் பத்திரமாக வைத்திருந்து உன்னுடைய சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டும்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். இப்பொழுது யோசித்துப் பாருங்கள். அவருடைய அப்பா தந்த சொத்தில் இருந்து அவர் நயா பைசா கூட செலவு செய்யவில்லை. தர்மமும் செய்யவில்லை. மேலே மேலே வளர்த்து பத்திரங்களை 60 லட்சம் ரூபாய் மதிப்புக்கு அதிகப்படுத்தி, தன் பையனுக்குத் தந்து விட்டு மறைந்து விட்டார்.இந்தச் செல்வம் அவருக்குச் சாகும் வரை பயன்படவில்லை. அவர் ஒரு கருவியாக இருந்து இந்த கடன் பத்திரங்களின் மதிப்பை அதிகப்படுத்தி விட்டு மறைந்து விட்டார்.அவருக்குச் சந்தோஷம் முழுக்க அந்த கடன் பத்திரங்களுடைய மதிப்பு அதிகம் ஆவதில் தான் இருந்ததே தவிர, அதனுடைய பயன்பாட்டில் இல்லை.சில நேரங்களில் அதிலிருந்து பணம் எடுத்துச் செலவு செய்து விட்டால் பணம் குறைந்து விடுமே என்று நினைத்துக்கூட கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்.இதில் ஒரு முறை பத்திரம் வாங்கிய ஒருவர் திடீரென்று மறைந்துவிட்டார். ‘‘ஐயோ, பணம் போச்சு” என்று இவருக்கு பல நாட்கள் தூக்கமில்லாமல் போய்விட்டது.அப்புறம் இறந்து போனவருடைய மகன் ஒரு நாள் வந்து ‘‘நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய அப்பா வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பு” என்று சொல்லியவுடன் தான் அவருக்கு நிம்மதி வந்தது.இப்பொழுதும் பாருங்கள். அவர் பணத்தைக் கையாளவில்லை. பணத்தைக் கண்ணால் கூட பார்க்கவில்லை. தன்னுடைய பணம் யாரோ ஒருவரிடத்திலே பத்திரமாக இருக் கிறது என்கிற எண்ணத்தில் தான் அவருடைய சந்தோஷம் இருக்கிறது. அதைப்போல அந்தப் பணம் பழுதாகி விட்டது. இனி வராது என்கின்ற எண்ணம் வந்த பொழுது துக்கம் வந்துவிட்டது. பணத்தைக் கண்ணால் பார்க்காமலேயே துக்கமும் வந்தது. சந்தோஷமும் வந்தது என்று சொன்னால், இதற்குக் காரணம் மன எண்ணம்தானே. இங்கே நிஜ அனுபவம் கூட வேண்டியது இல்லையே.இருக்கும்போதே பயன்படாத ஒரு பொருள் இல்லாதபோது எப்படிப் பயன்படும்?அப்படிப்பட்ட பொருளின் மீது ஏன் ஆசை வைக்க வேண்டும்? இந்தத் தெளிவு நமக்கு எல்லா விஷயத்திலும் வந்துவிட்டால் மனம் செம்மையாகி விடும். மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.தெளிவான மனதில் எப்பொழுதும் துக்கங்கள் வராது.
தேஜஸ்வி