யார் வெற்றி அடைகிறார்கள்?
?இன்றைக்கு உணவு சாப்பிடுகிறோமோ இல்லையோ உணவுக்கு முன்னும் பின்னும் மருந்து நிறைய சாப்பிடுகிறோமே... ஏன்?
- தங்கபாண்டியன், ஸ்ரீரங்கம்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” எனும் குறளைப் பின்பற்றினால் இந்நிலை வாராது.. உணவை மருந்தாகச் சாப்பிட்டால் மருந்தை உணவாக சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு எப்படிச் சாப்பிட வேண்டும், எந்தெந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவர்கள் ஆரோக்கியத்திற்காக இயற்கையையும் வாழ்க்கையையும் இணைத்தார்கள். பெரிய கோயில்களைக் கட்டி வைத்து பிரகாரத்தை சுற்றச் சொன்னார்கள். அது ஒரு மருந்து. மாதத்திற்கு இரண்டு முறையோ மூன்று முறையோ உண்ணாவிரதம் இருக்கச் சொன்னார்கள்.
அது ஒரு மருந்து. இயற்கையோடு இணைந்து வாழச் சொன்னார்கள். அது ஒரு மருந்து. கவலையை மனதில் வைத்துக் கொள்ளாமல் சிரிக்கச் சொன்னார்கள். அது ஒரு மருந்து. ஒரு நாளைக்கு 6, 7 மணி நேரத்திற்குக் குறையாமல் சரியான நேரத்தில் உறங்கச் சொன்னார்கள் அது ஒரு மருந்து. அகால உறக்கமும் அகால உணவும் ஆரோக்கியக் கேடுகள் என்று அடித்துச் சொன்னார்கள். சூரிய ஒளி, மழை நீர் போன்றவற்றைப் பயன்படுத்த சொன்னார்கள். ஒருவருக்கொருவர் நட்போடும் அன்போடும் இருக்கச் சொன்னார்கள். இவைகள் எல்லாமே ஆரோக்கியத்திற்கான மருந்துகள். இந்த மருந்துகளுக்கு எந்த பக்கவிளைவும் இல்லை. ஆனால், இந்த மருந்துகளை புறக்கணிப் பதால் பக்க விளைவுள்ள இரசாயன மருந்துகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். நமக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டால் மீண்டு வருவது கடினம்.
?யார் வெற்றி அடைகிறார்கள்?
- பாலாஜி, வேலூர்.
பொறுமையோடு இருப்பவர்கள் வெற்றி அடைகிறார்கள். ஒரு கிளையில் இரண்டு பழங்கள் இருக்கும். அதில் ஒன்று விரைவில் பழுத்து விடும். ஒன்று பழுப்பதற்காகக் காத்திருக்கும். இதை நாம் சாதாரணமாகப் பார்க்கிறோம். ஆனால் இது நமக்குச் சொல்லும் செய்தியை நாம் உணர்வதில்லை. பழுத்த பழத்தைப் பார்த்து பழுக்கக் காத்திருக்கும் பழம் பொறாமைப்படுவதில்லை. “ஐயோ, நான் இன்னும் பழுக்கவில்லையே” என்று வருத்தப்படுவதில்லை.
தனக்கான நேரத்திற்காக அது பொறுமையுடன் காத்திருக்கும். இதை வாழ்வியலோடு பாப்போம். சிலருக்கு சில விஷயங்கள் சீக்கிரம் கிடைத்து விடுகிறது என்றால் அவர்கள் வெற்றி அடைந்து விட்டதாகவும், கிடைக்காதவர்கள் தோல்வி அடைந்து விட்டதாகவும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு வரவேண்டிய தருணம் வந்துவிட்டது. நமக்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்ற பொறுமையோடு காத்திருக்க வேண்டும். மனம் தளராமல் முயற்சி செய்பவர்களுக்கு கட்டாயம் கிடைத்துவிடும்.
?பஞ்ச பத்திரங்கள் என்பது என்னென்ன?
- கீதா பரமேஷ்வரன், கும்பகோணம்.
பூஜைக்கு உதவும் புனித இலைகளை பத்திரங்கள் என்கிறோம். துளசி, வில்வம், வேம்பு, அருகு, வன்னி இவை பஞ்சபத்திரங்கள் எனப்படும். விஷ்ணுவுக்கு துளசி, மஹாலஷ்மிக்கும் சிவனுக்கும் வில்வம், விநாயகருக்கு அருகு, அம்மனுக்கு வேம்பு, சிவனுக்கு வன்னி என இவைகளெல்லாம் தெய்வங்களுக்கும் உகந்தவை.
? பஞ்ச பூஜைகளில் என்னென்ன முக்கியம்?
- கு.ரவி சந்தோஷ், மதுரை.
சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நிவேதனம் ஆகியவைகளை பஞ்ச உபச்சாரங்கள், பஞ்ச பூஜைகள் என்று சொல்வார்கள்.
? சப்த மாதாக்கள் வேறு, சப்த கன்னியர்கள் வேறா?
- ஆர்.சுப்புலட்சுமி, பரமக்குடி.
பிராம்மி , மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தேவதைகளை சப்த மாதாக்கள் என்றும், கங்கா, யமுனா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஏழு நதிகளை சப்த கன்னிகைகள் என்றும் சொல்லும் வழக்கம் உண்டு.
?சில நேரங்களில் உடனடியாக பதில் சொல்லக்கூடாது என்கிறார்களே!
- பரத், செங்கல்பட்டு.
உண்மைதான். நாம் உடனுக்குடன் அதே வேகத்தில் பதில் சொல்வதால் பல பிரச்னைகள் வருகின்றன. மூன்று விஷயங் களைப் பின்பற்றும்படி அறிஞர்கள் சொல்லுகின்றார்கள். 1. நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபத்தில், படபடப்பில், கொந்தளிப்பில் இருக்கும் பொழுது மௌனமாக இருங்கள். பதில் சொல்லாதீர்கள். 2.அதைப்போலவே நீங்கள் அபரிமிதமான சந்தோஷத்தில் இருக்கும் பொழுது யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். 3. தாங்க முடியாத துக்கத்தில் இருக்கும் பொழுது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீர்கள். இந்த மூன்று விஷயங்களைப் பின்பற்றினால் போதும். கஷ்டங்கள் வராது.
? சிரார்த்தம் என்று எழுதுவது சரியா சிராத்தம் என்று எழுது வது சரியா?
- பா.வரதன், தென்காசி.
சிராத்தம்தான் சரி . சிரத்தையோடு செய்வதுதான் சிராத்தம்.
?கும்பாபிஷேகத்தில் ஸ்பர்சாஹூதி என்ற போட்டு இருக்கிறார்கள் இதன் பொருள் என்ன? என்ன செய்வார்கள்?
- ஹனுமந்தாசன், சென்னை.
ஸ்பர்சம் என்றால் தொடுதல் என்று பொருள். ஆஹூதி என்பது யாகசாலையில் அக்னியின் மூலம் செய்யப்படும் பூஜை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட குடத்திற்கும் மூல விக்கிரகத்திற்கும் தர்ப்பை கயிறு, தங்கக் கம்பி, வெள்ளிக் கம்பி மூலம் ஓர் பிணைப்பை ஏற்படுத்துவார்கள். யாக மந்திரங்களின் மூலம் கும்பத்திலிருந்து பிம்பத்திற்கு சக்தியைக் கடத்தும்
நிகழ்வுதான் ஸ்பர்சாஹூதி.
?ஜபம் எப்படிச் செய்ய வேண்டும்?
- செல்லதுரை, பல்லடம்.
சுத்தமான இடத்தில் சுத்தமான ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தீர்த்த பாத்திரத்தை எதிரே வைத்துக்கொண்டு பத்மாசனம் போட்டுக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்து கொண்டு மேல் வஸ்திரத்தை குறுக்காகக் போட்டுக்கொண்டு எந்தவிதமான சலனமும் இல்லாமல் மனதை ஒருமுகப்படுத்தி ஜபம் செய்ய வேண்டும்.
? உலகத்தில் எண்ணூறு கோடி பேர் இருக்கிறார்கள். அது எப்படி 12 கட்டத்திற்குள் அத்தனை பேருக்கும் ஜாதகத்தை எழுதுகிறார்கள்?
- புஷ்பலதா, திருப்பரங்குன்றம்.
இந்தக் கேள்விக்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அறிவொளி அவர்கள் ஒருமுறை விளக்கம் அளித்து இருந்தார். அவர் சிறந்த ஜோதிடரும் கூட என்பது பல பேருக்குத் தெரியாது. அவர் ஒரு உதாரணத்தைக் கூறி இந்த விஷயத்தை விளக்கினார். நாம் காலணி வாங்குகின்றோம். கடையில் ஏழு அல்லது எட்டு எண்களில்தான் காலணிகள் இருக்கின்றன. சிலர் ஏழாம் நம்பர், சிலர் எட்டாம் நம்பர், சிலர் பத்தாம் நம்பர் என்று வாங்குகின்றனர்.
ஆனால், 800 கோடி பேருக்கும் இந்த குறிப்பிட்ட எண்களுக்குள் அமைந்து விடுகிறது. ஆனால், எல்லோருடைய பாதத்தின் அளவும் நுட்பமாக சற்று மாறுபாடாகத்தான் இருக்கும். ஆனாலும், பொருந்தி விடுகிறது. அதுபோல் 800 கோடி பேர்களுக்கும் 12 கட்டங்களில் ஜாதகம் அடங்கி விடுகிறது. ஆனால், அந்த நுட்பமான வேறுபாடுகளின் அடிப்படையில் தான் அவரவர்களுக்கான ஜாதக பலன்கள் சொல்லப்படுகின்றன.
? ஸப்தாஹம் என்றால் என்ன?
- கேசவபெருமாள், புதுச்சேரி.
சில இடங்களில் ஏழு நாட்கள் தொடர்ந்து இதிகாச புராணங்களை மூலநூல் வைத்து பாராயணம் செய்வார்கள். இது ஒரு யக்ஞத்தைப்போல பலம் தரும். இதற்கான சங்கல்பம் செய்து கொண்டு முறையாகப் பாராயணம் செய்வார்கள். இப்படி ஏழு நாட்கள் பாராயணம் செய்வதை ஸப்தாக முறை என்பார்கள். பெரும் பாலும் ஸ்ரீபத் பாகவதத்தை சப்தாகமாகப் பாராயணம் செய்வது உண்டு. ஸ்ரீ ராமநவமியின் போது ராமாயணத்தை ஒன்பது நாட்கள் மூலநூல் பாராயணம் செய்வது கொண்டு அதற்கு நவாகம் என்று பெயர்.
?ஒவ்வொரு மாதத்திலும் எட்டாவது ராசியில் இரண்டரை நாட்கள் சந்திரன் இருப்பதால் இரண்டரை நாட்களும் சந்திராஷ்டமம்தானா?
- இளையமாறன், நங்கநல்லூர் - திருச்சி.
ஒரு ராசிக்குள் இரண்டேகால் நட்சத்திரம் அமர்ந்திருக்கும். காரணமாக நீங்கள் கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் பிறந்தால் மேஷ ராசி, 2. கார்த்திகை இரண்டு மூன்று நான்காம் பாதங்களில் பிறந்தால் ரிஷப ராசி.. கார்த்திகை நட்சத்திரம் இரண்டு ராசிகளிலும் இருப்பதால் எட்டாவது ராசியான விருச்சிக ராசியிலும் தனுசு ராசியிலும் பிரவேசிக்கும் காலங்களில் சந்திராஷ்டமம் வந்துவிடும்.
ஆனால், தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு 17ஆம் நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் காலம் சந்திராஷ்டம காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அசுவினி என்றால் அனுஷ நட்சத்திரநாள் சந்திராஷ்டம நாள் இரண்டு நாள் அனுஷம் இருந்தால் இரண்டு நாளும் சந்திராஷ்டமம். அதுதான் துல்லியமாக வரும். சந்திராஷ்டமம் வீரியமாக செயல்படும் காலம் அது.
?சுந்தரகாண்டம் பாராயணம் செய்யும் பொழுது அவசியம் பட்டாபிஷேகத்தைப் படிக்க வேண்டும்
என்கிறார்களே?
- வித்யா பாலமுருகன், திருச்சி.
உண்மைதான். சுந்தரகாண்டம் என்பது அனுமன் சீதையைக் கண்ட பிறகு இலங்கையை தீயிட்ட பின் ராமன் இருக்கும் இடத்தை அடைந்ததைச் சொல்லுகிறது. அதற்குப் பிறகுதான் ராமாயண பட்டாபிஷேகம் நடக்கிறது. எனவே, சுந்தர காண்டம் பாராயணம் முடித்த பிறகு பட்டாபிஷேகத்தையும் பாராயணம் செய்து பலச் சுருதியையும் சொல்ல வேண்டும். அதுதான் முறை.
?பிரதோஷ வேளை என்பது சிவ பெருமானுக்கு மட்டும்தானா? சிவாலயங்களில் அன்று கூட்டம் அதிகமாக இருக்கிறது.
- எஸ்.பாலதேவி, கரூர்.
உண்மைதான். பிரதோஷகால பூஜை என்பது சிவாலயங்களில் இப்பொழுது மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. கூட்டமும் அதிகமாக இருக்கிறது. பிரதோஷ பலன் என்பது அற்புதமானது. வைணவர்களுக்கு இந்த பிரதோஷ வேளை என்பது நரசிம்ம பூஜைக்கு ஜபத்துக்கும் உரிய காலம். இந்த பிரதோஷ வேலையில்தான் பிரகலாதனை காப்பாற்றுவதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்பதால் வைணவர்களுக்கும் பிரதோஷ வேளை சிறந்தது.
?பௌர்ணமி பூஜை எப்பொழுது செய்ய வேண்டும்?
- செல்லதுரை, நாகப்பட்டினம்.
கேள்வியிலேயே பதில் இருக்கிறது. நிலவு உதித்த பிறகு பௌர்ணமி பூஜையைச் செய்ய வேண்டும். சிலர் இந்த நேரத்தில் சத்யநாராயண பூஜை செய்வார்கள். தொடர்ந்து பௌர்ணமியில் சத்யநாராயண பூஜை செய்வது சாலச் சிறந்த பலனை அளிக்கும். எத்தனையோ குடும்பங்கள் சத்திய நாராயண பூஜையின் மூலம் மிகச் சிறந்த பலனை அடைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் சந்ததியும் நன்றாக இருக்கிறது.
?இராவணன் சீதையை தூக்கிச் செல்லும் பொழுது தன்னைக் காப்பாற்றும்படி“ஏ... ராமா...” என்று பகவந் நாமாவைச் சொல்லிக் கதறியும் காப்பாற்றப்படவில்லையே, என்ன காரணம்?
- பாக்கிய முத்து, குணசீலம்.
பகவன் நாமாவின் பெருமையை ஸ்ரீ ஸ்ரீ அண்ணா உபதேசித்த போது ஒரு கருத்தைக் கூறினார். சீதை ராவணனால் அபகரிக்கப்படும் முன் பரம பாகவதனான லட்சுமணனை கடுமையாக நிந்தித்திருந்தாள். அந்த நிந்தனையின் பலம் உடனடியாக காப்பாற்ற முடியாதபடி தடை செய்துவிட்டது. எனவே, நாம சங்கீர்த்தனம் செய்பவர்கள் அதனுடைய பலனை முழுமையாகப் பெறவேண்டும் என்று சொன்னால் சாதுக்களையும் பாகவதர்களையும் அலட்சியப்படுத்தக் கூடாது. அவமதிக்க கூடாது.
?பூமி பூஜையை ஏன் வடகிழக்கில் செய்கிறார்கள்?
- ஜே.வாசுதேவன், சென்னை.
வடகிழக்கு என்பது ஈசான்ய திசை. புனிதமான திசை வட கிழக்கு திசை. வீடு கட்டும் பொழுது அந்த இடத்தில் முதல் முதலில் பள்ளம் தோண்டி வாஸ்து பூஜை செய்வது வழக்கம். வாஸ்து தேவன் பூமியின் மீது தலை வைத்திருக்கும் பாகம் வடகிழக்கு திசை என்பதால் அங்கே பூமி பூஜையைச் செய்கிறார்கள். வடகிழக்கு சற்று பள்ளமானதாக இருக்க வேண்டும். வெளிச்சம் உள்ளதாக இருக்க வேண்டும். ஈசானிய திசையை எப்பொழுதும் அடைக்கக் கூடாது. அது நமக்கு வருகின்ற நன்மையைத் தடுத்து விடும். அதே நேரத்தில் அதற்கு நேர் இதை எதிர் திசையான தென்மேற்கு மூலையை அடைத்து விடலாம். இதற்கு கன்னி மூலை என்று பெயர்.
?திருவாசகம், தேவாரம், பாராயணம் செய்ய காலம் இருக்கிறதா?
- சரண்யாகுமரன், தாம்பரம்.
எப்பொழுதெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் பாராயணம் செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் பாராயணம் செய்வது என்பது நல்லதுதான். அது எல்லோருக்கும் வாய்க்காது.பாராயணம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகின்ற பொழுது பாராயணம் செய்யுங்கள். காரணம் அந்த நினைப்பு வந்த நேரம் எந்த நேரமாக இருந்தாலும் அது நல்ல நேரம்தான்.
? சதுர்வேதி, திரிவேதி என்ற வார்த்தைகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன?
- பிரசன்னா, காஞ்சிபுரம்.
நான்கு வேதங்களையும் கற்றவர்களை சதுர்வேதி என்ற சொல்லாலும், மூன்று வேதங்களைக் கற்றவர்களை திரிவேதி என்ற சொல்லாலும் குறிப்பிடுகின்றோம். நான்கு வேதம் படித்தவர்களுக்கு ஒரு காலத்தில் அரசர்களால் வாழ்விடங்கள் தரப்பட்டன. அந்த வாழ்விடங்களை சதுர்வேதி மங்கலம் என்று அழைத்தார்கள்.
தேஜஸ்வி