லட்சுமி கடாட்சம் எவரிடம் இருக்கும்?
?லட்சுமி கடாட்சம் எவரிடம் இருக்கும்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
சுத்தம், சுகாதாரத்துடன் கூடிய ஆரோக்யமும், மனோ தைரியமும் எவரிடம் இருக்குமோ அவர்களிடத்தில் லட்சுமி கடாட்சம் என்பது மேம்பட்டிருக்கும்.
?பழைய வீட்டை வாங்கி குடி போனால் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டுமா?
- வண்ணை கணேசன், சென்னை.
நிச்சயமாக. பழைய வீடாக இருந்தாலும் அது நமக்கு சொந்தவீடாக அமைந்துவிடுகிறது அல்லவா! பழைய வீட்டினை வாங்கி குடிபோகும்போது ஆல்ட்ரேஷன் பணிகள், புதிதாக சுண்ணாம்பு அல்லது பெயிண்ட் அடித்தல், தேவைப்பட்டால் வாசக்கால் மாற்றுதல் போன்ற பணிகளைச் செய்து முடித்து அதனை நமது வீடாக ஏற்றுக் கொள்வதற்காக கோபூஜை, வாசக்கால் பூஜை ஆகியவற்றைச் செய்து அத்துடன் கிரகப்பிரவேசத்திற்கு உரிய தேவதா பூஜைகள், ஹோமங்கள் ஆகியவற்றையும் அவசியம் செய்ய வேண்டும்.கிரகப்பிரவேசம் என்றால், வீட்டிற்குள் நுழைதல் அதாவது சொந்தமாக வீடு வாங்கி அந்த வீட்டிற்குள் நுழைந்து பால் காய்ச்சி அன்று முதல் அதனை நமது சொந்த வீடாக அனுபவிக்கத் தொடங்க வேண்டும் என்பதே பொருள். பழைய வீடாக இருந்தாலும், அதனை நாம் விலை கொடுத்து சொந்த உபயோகத்திற்காக வாங்கும் பட்சத்தில், நிச்சயமாககிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.
?நிறங்களுக்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பு உண்டா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நிச்சயமாக. இந்த உலகில் நாம் காண்கின்ற அனைத்து விஷயங்களுமே ஆன்மிகத் தொடர்பு உடையவைதான். அனைத்து நிறங்களுக்கும் அடிப்படை வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்கள்தான். இந்த ஏழு நிறங்களைத்தான் சூரியனின் ஏழு குதிரைகளாகச் சொல்லி இருக்கிறார்கள். ஜோதிடவியல் ரீதியாக ராகு - கேது எனும் நிழற்கோள்களைத் தவிர உண்மைக் கோள்கள் ஆன சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன் மற்றும் சனியின் நிறங்களே இந்த ஏழும் என்று சொல்லப்படுவதும் உண்டு. இதில் அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. அதாவது கருமை மற்றும் வெண்மை என்று இரண்டு நிறங்கள் உண்மையில் கிடையாது. இந்த ஏழு நிறங்களுக்குமே கருமை மற்றும் வெண்மையுடன் தனித் தனியே தொடர்பு என்பது உண்டு. இந்த நிறங்கள் ஒவ்வொன்றினுடைய அதிகப்படியான அடர்த்தியே கருமை என்றும், அதிகப்படியான அடர்த்தியின்மையே வெண்மை என்றும் சொல்லப் படுகிறது. எந்த ஒரு பொருளின் மீதும் அதிகப்படியான பற்று வைத்தால், மனதில் கருமை எனும் இருட்டும், பற்றற்ற நிலை கொண்டிருந்தால் மனதில் வெள்ளை குணமும் அமைதியும் நிறைந்திருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள இயலும்.
?சிலர் கோயிலுக்குச் சென்றால் வேறொருவர் ஏற்றிய கற்பூரத்தை தொட்டு கும்பிட்டு வருகிறார்களே, இது சரியா?
- ஜெ.மணிகண்டன், வேலூர்.
சரியே. இதில் என்ன தவறு இருக்கிறது. வேறொருவர் சமைத்துக் கொண்டு வந்து நிவேதனம் செய்ததை பிரசாதம் என்ற பெயரில் வாங்கிச் சாப்பிடுகிறோம் அல்லவா, அதுபோலத்தான் இதுவும். வேறொருவர் ஏற்றியிருந்தாலும் அது இறைவனுக்கு ஏற்றப்பட்ட கற்பூரம் தானே. அதனை தொட்டுக் கும்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது? ஆலயம் என்பதும் அங்கே குடியிருக்கும் இறைவன் என்பதும் அனைவருக்கும் பொது என்பதால் கற்பூரத்தை யார் ஏற்றியிருந்தாலும் அதனைத் தொட்டு வணங்கலாம்.
?கோயில் தூண்களில் ஆண், பெண் சேர்க்கை போல, பல சிற்பங்கள் உள்ளனவே எதற்காக?
- சு.ஆறுமுகம், கழுகுமலை.
ஆண் - பெண் சேர்க்கை என்பது ஆபாசம் அல்ல, அது இறையருளால் நிகழக்கூடிய ஆன்மிகம் சார்ந்த நிகழ்வு என்பதை உணர்த்துவதற்காக. இந்த உலகில் உள்ள ஜீவராசிகளின் சிருஷ்டி என்பது பிரம்மாவின் பணி. முறையான ஆண் - பெண் உறவில் சிவசக்தி ஐக்கியம் உண்டாவதாக ஆன்மிகம் அறிந்த பெரியவர்கள் சொல்வார்கள். ஆபாசம் கலவாமல் உண்மையான அன்புடன் உண்டாகும் இந்த உறவின் மேன்மையைப் புரிந்துகொள்வதற்காகத் தான், இதுபோன்ற சிற்பங்களை ஆலயத் தூண்களிலும், சுற்றுப்புற பிரகாரங்களிலும் அமைத்திருக்கிறார்கள்.
?நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?
- என். இளங்கோவன், மயிலாடுதுறை.
வழிபடலாம். அது பஞ்சலோகச் சிலையாக இருந்தாலும், கற்சிலையாக இருந்தாலும், அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அங்குஷ்டமாத்ரம் என்று அதற்கான அளவினை சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அதாவது நம்முடைய கட்டை விரல் அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பெரிய சிலையாக இருந்தால், ஆலயம் போன்று தினசரி அபிஷேக அலங்கார நிவேதன உபச்சார பூஜைகளை தினமும் மேற்கொள்ள வேண்டும். மரத்தால் ஆன சிலைக்கு எந்த விதிகளும் இல்லை என்பதால், அதனை பெரிய அளவில் வைத்துக்கூட நீங்கள் வழிபட்டு வரலாம்.
?துர்தேவதை என்று சிலர் கூறுகிறார்களே, அது என்ன?
- சுபாராவ், வத்திராயிருப்பு.
இந்த உலகில் உள்ள சக்திகள் அனைத்திற்கும், அதற்கு இணையான எதிர்சக்திகள் என்பதுவும் உண்டு. இயற்பியலில் ஆற்றல் மாறாக் கோட்பாடு என்ற விதியையும் நியூட்டனின் மூன்றாம் விதியையும் படித்திருப்போம். அந்த விதிகளை இங்கே பொருத்திப் பாருங்கள். நமக்கு பிரச்னைகளைத் தரக்கூடிய எதிர்மறை சக்திகளை துர்தேவதைகள் என்றும், அந்தப் பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்கின்ற நேர்மறை சக்திகளை தெய்வங்கள் என்றும் போற்றுகிறோம் என்பதே உங்களுக்கான நேரடியான பதில்.
?ஏகாதசி அன்று சாளக்ராம பூஜை செய்யக் கூடாது என்கிறார்களே, அன்று நிவேதனம் உண்டா?
- ஸ்ரீநிவாஸன், ஸ்ரீரங்கம்.
திருவரங்கத்தில் வாழும் தாங்களே இப்படிக் கேட்கலாமா? ஏகாதசி அன்று சாளக்ராம பூஜை செய்து வழிபடுவது என்பது மிகவும் விசேஷமான பலனைத் தரும். சாளக்ராமம் என்பது இயற்கையாகவே பெருமாளின் சாந்நித்யம் நிறைந்திருக்கக் கூடிய கல். தெய்வீகத்தன்மை பொருந்திய இந்த கல்லை எல்லா நாட்களிலும் பூஜித்து வணங்கலாம். மற்ற நாட்களில் முடியவில்லை என்றால்கூட கண்டிப்பாக ஏகாதசி நாளில் பூஜித்து வணங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் நீங்கள் விரதம் இருக்கப் போகிறீர்கள் என்றால், இரண்டு பேரீச்சம்பழம் மட்டும் நிவேதனம் செய்தால் போதுமானது. அல்லது துளசியுடன் கலந்த தீர்த்தத்தையும், நிவேதனம் செய்யலாம். ஏகாதசி நாளில் துளசியைத்தான் பறிக்கக் கூடாது என்று சொல்வார்கள். தாராளமாக சாளக்ராம பூஜையை மேற்கொள்ளலாம்.
?ஊர் காவல் தெய்வங்களை கட்டாயம் வழிபட வேண்டுமா?
- கௌசல்யா, ஈரோடு.
கட்டாயம் வழிபட வேண்டும். காவல் தெய்வங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நம்மையும் நாம் வசிக்கும் பகுதியையும் காக்கும் அவர்களை வழிபட வேண்டாமா? கட்டாயம் வழிபட வேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி..? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.