நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்கள்?
இரவு ஒன்பது மணி, தன் ஆறு வயது பையனைத் தூங்கவைத்துவிட்டு வீட்டிற்கு வெளியே நடந்து சென்றார். சிறிது நேரத்தில் பையன் விழித்துக் கொண்டு, தன் தகப்பனை காணாமல் கதவண்டைக்குச் சென்றான். கதவைத் திறந்தபோது பனி பெய்துகொண்டிருப்பதையும், தெருவிளக்கின் நடுவே மணலில் ஒருவரது கால்தடங்கள் பதிந்திருப்பதையும் கண்டான். தன் வீட்டிலிருந்து புறப்பட்ட கால் தடங்களை குறிவைத்த அச்சிறுவன், அச்சு மாறாமல் அந்த கால்தடங்களின் மேலேயே தன் கால்களை வைத்து நடக்கலானான். எங்கு வந்து சேர்ந்தான் தெரியுமா? அவ்வூரிலுள்ள மதுபானக் கடைக்கு! அங்கே அந்த தகப்பன் குடித்துக் கொண்டிருந்தான். இறைமக்களே, தாயை போலவே பிள்ளை.. நூலைப் போலவே சேலை என்று கூறுவார்கள்.
ஆம், உங்கள் பிள்ளைகள் நீங்கள் காண்பிக்கும் திசையில் அல்ல, நீங்கள் நடக்கும் திசையையே தொடருவார்கள். சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு போதனைகள் மூலம் நல்வழியை காண்பிப்பார்கள். ஆனால் தங்கள் வாழ்க்கையில் அவ்வழியை பின்பற்ற தவறிவிடுகின்றனர். உங்கள் வார்த்தைகளை அல்ல, உங்கள் வாழ்க்கையையே பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள். எனவே மிகுந்த கவனமுடையவர்களாக நாம் காணப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது.நாம் யாரைப் பின்பற்றுகிறோம்? நாம் யாரைப் பாராட்டுகிறோமோ அவர்களை பின்பற்றுகிறோம். ஒருவரை நாம் பின்பற்றும்போது அவர் எங்கே செல்கிறாரோ அங்குதான் நாமும் செல்கிறோம். பின்பற்றச் சிறந்தவர் இயேசு. அவரது அடிச்சுவடுகளில் நடப்பீர்களானால் நிச்சயம் மோட்சம் வந்து சேருவீர்கள். எப்படி அவரது அடிச்சுவடுகளில் நடக்கலாம்? வேதத்தைக் கிரமமாய் வாசித்து இயேசுவைப்போல் வாழ்வதன் மூலமாகத்தான். அப்படித்தான் இயேசுவின் அடிச் சுவடுகளில் நடக்கவேண்டும்.