புதிய வாகனம் வாங்கினால் எந்த கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும்?
?புதிய வாகனம் வாங்கினால் எந்த கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும்?
- த. சத்தியநாராயணன், அயன்புரம்.
இது அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்டது. தங்களுடைய இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்கு வாகனத்தை எடுத்துச் சென்று பூஜை செய்வது என்பது வழக்கத்தில் உள்ளது. ஆங்காங்கே பிள்ளையார் கோயில் என்பது பரவலாக இருப்பதால் பெரும்பாலும் விநாயகர் ஆலயத்திற்கு முதலில் வாகனத்தை எடுத்துச் செல்வார்கள். சிலர் சுப்ரமண்ய சுவாமி ஆலயத்திற்கும், சிலர் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கும் இன்னும் சிலர் கிராம தேவதைகளான ஐயனார், கருப்பண்ண சுவாமி, முனீஸ்வர ஸ்வாமி ஆலயத்திற்கும் வாகனத்தை எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள். அடியேனின் நண்பர் ஒருவர் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்துகிறார். அவர்தான் முதலில் எந்த ஒரு வாகனத்தை புதிதாக வாங்கினாலும் தனது பெற்றோரிடம் எடுத்துச் சென்று அவர்களுக்கு பாதபூஜை செய்து வணங்கி அவர்கள் கரங்களால் சாவியைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பின்புதான் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று பூஜை செய்வார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அவரது செயலும் போற்றுதலுக்குரியதுதானே.
?வீட்டில் கால் இடறி கீழே விழுந்து, கீழே வைத்திருந்த மீன்தொட்டியில் கால்பட்டு அதன் கண்ணாடி என் கால்களை கிழித்துவிட்டது. பெரிய காயம். ஏதேனும் அபசகுனமா? மனம் சஞ்சலம் இல்லாமல் இருக்க எந்த கடவுளை வழிபாடு செய்வது?
- ராம்குமார், சைதாப்பேட்டை.
இந்த நிகழ்வு உங்களது கவனக்குறைவையே காட்டுகிறது. கவனக்குறைவு உண்டாகிறது என்று சொன்னால் மனதிலே அமைதி இல்லை என்றுதானே பொருள். அலைபாயும் மனதோடு எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் முழுமையான வெற்றியைக் காண இயலாது. மனம் ஒருமுகப்பட்டு ஒரு செயலைச் செய்தால்தான் வெற்றி என்பது கிடைக்கும். மனச்சஞ்சலம் நீங்கி உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட ஆஞ்சநேய ஸ்வாமியை தினந்தோறும் வணங்கி வாருங்கள். வெற்றி பெறுவீர்கள்.
?எலுமிச்சம்பழம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
- த.நேரு, வெண்கரும்பூர்.
எலுமிச்சம்பழம் என்பது தெய்வக்கனி என்று அழைக்கப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்களை செயல்பட விடாமல் தடுக்கிறது. நேர்மறை சக்திகளை ஈர்த்து தான் இருக்கும் பகுதி முழுக்க பரவச் செய்கிறது. எலுமிச்சம்பழம் என்பது முழுக்க முழுக்க நேர்மறை ஆற்றலைத் தரும் கனியாக அமைந்திருப்பதால் திருஷ்டி தோஷம் உள்பட அனைத்துவிதமான தோஷங்களையும் போக்க அதனை பயன்படுத்துகிறார்கள்.
?நீசபங்க ராஜயோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசமாகியிருந்தாலும் அந்த கிரகம் நல்ல யோகத்தைத் தரும் என்பது சரியா?
- ஜெ. மணிகண்டன், வேலூர்.
நீசன் நின்ற ராசிநாதன் உச்சம் ஆட்சி ஆகிடில் நீசபங்கராஜயோகம் என்று சொல்வார்கள். அதாவது ஒரு கிரகம் எந்த ராசியில் நீசமாக அமைந்திருக்கிறதோ அந்த ராசிக்கு அதிபதி ஆகிய கிரகம் உச்ச பலமோ ஆட்சி பலமோ பெற்றிருந்தால் நீச பலம் என்பது குறைந்து அந்த கிரஹத்தின் தசாபுக்தி காலங்களில் ராஜயோகம் கிடைக்கும் என்பது அந்த சொற்றொடருக்கான விளக்கம். ஆனால் இந்த இரு கிரஹங்களும் எந்த பாவகத்தில் அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே பலன் என்பது அமையும். நல்ல பாவகங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன் என்பது கிட்டும்.
?யானை முடி மோதிரம் சிலர் அணிகிறார்களே, ஏன்?
- சுந்தரவடிவு, சென்னை.
தோஷங்கள் எதுவும் தன்னைத் தாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அணிகிறார்கள். யானை முடி மோதிரம் அணிவதால் எதிரி, கடன், வியாதி போன்ற பிரச்னைகளும் பில்லி, சூனியம், ஏவல் மற்றும் திருஷ்டி தோஷங்களும் தடைகளும் விலகுவதாக நம்புகிறார்கள்.
?மருதாணி வழிபாடு என்ற ஒன்று உள்ளதா?
- ரமேஷ், பட்டுக்கோட்டை.
ஸ்ரீராமநவமி நாளுக்கு முதல் நாள் அசோகாஷ்டமி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்திருப்பார்கள். அந்த நாளில் மருதாணி செடியை பூஜித்து வணங்குவார்கள். அசோகவனத்தில் சீதை சிறைப்பட்டிருக்கும்போது அவரது சோகத்தை போக்கும் விதமாக அங்கிருந்த மருதாணிச் செடிகள் அவருக்கு ஆறுதலாக அமைந்தனவாம். சோகத்தை நீக்கியதால் அந்த மருதாணி செடிகள் அசோகம் என்ற பெயரைப் பெற்றன. அதனால்தான் அந்தச் செடிகள் நிரம்பிய அந்த பகுதி அசோகவனம் என்றே பெயர் பெற்றது. அசோகாஷ்டமி நாளில் மருதாணிச் செடியை பூஜித்து வணங்குவதை வட இந்தியப் பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
?பிறந்த நேரம், நடப்பு திசை ஜாதக பலனுக்கு எது அவசியம்?
- ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
பிறந்த நேரம் என்பது இருந்தால்தான் ஜாதகத்தையே கணிக்க முடியும். அதன் அடிப்படையில்தான் நடப்பு திசை என்ன என்பதையும் அறிய இயலும். பிறந்த நேரத்தைக் கொண்டு கணிக்கப்படும் ஜாதகமே அடிப்படை. அதனைக் கொண்டு நடப்பு திசை என்ன என்பதை கணக்கிட்டு அந்த திசையை நடத்தும் கிரகங்கள் பிறந்த நேரத்தில் எந்த பாவகங்களில் சஞ்சரித்தார்கள் என்பதை வைத்துத்தான் பலன் சொல்கிறார்கள். ஆக பிறந்த நேரம் என்பதுதான் அஸ்திவாரம். நடப்பு திசை என்பது அதன் மேலே எழுப்பப்படும் கட்டிடம் போன்றது.
?விநாயகர் கோயில்களில் முடி காணிக்கை கொடுக்கலாமா?
- வ. மீனாட்சிசுந்தரம், சிவகங்கை.
இது அவரவர் சம்பிரதாயத்திற்கு உட்பட்டது. திருப்பதி, திருவந்திபுரம், உப்பிலியப்பன் கோயில், கலியுகப் பெருமாள் கோயில் போன்ற ஒரு சில ஸ்தலங்களைத் தவிர அனைத்து பெருமாள் கோயில்களிலும் முடிகாணிக்கை செலுத்துவதில்லை. அறுபடை வீடு உட்பட ஒரு சில முருகப்பெருமானின் ஆலயங்களைத் தவிர அனைத்து கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்துவதில்லை. திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திலும் முடிகாணிக்கை செலுத்தும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. தர்மசாஸ்தா, கருப்பண்ண சுவாமி, அங்காளம்மன், பச்சையம்மன் என தங்கள் குலதெய்வத்திற்கு முடி காணிக்கை செலுத்துவது போல தங்கள் இஷ்ட தெய்வத்தின் ஆலயத்திலும் முடிகாணிக்கையை செலுத்துகிறார்கள். விநாயகப்பெருமான் தான் தனக்கு சகலமும் என்று நம்புபவர்கள் அவருடைய ஆலயத்தில் முடிகாணிக்கை செலுத்துகிறார்கள். இது அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்டது. இதில் குற்றம் காண வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.