ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செலுத்தும் நாமங்கள்
நிம்மதி எப்போது வரும்?
மனிதர்கள் பிறந்தது முதல் இறப்பது வரை உள்ள நிலைகளை நான்காக வகுத்து வைத்தார்கள். இவைகளை வாழ்வின் படிநிலைகள் (Stages) என்று சொல்லலாம். கல்வி கற்கும் இளம் பருவம் பிரம்மச்சரியம் என்றும், திருமணம் செய்து கொண்டு சம்பாதித்து, பெற்றோர்களையும், பிள்ளைகளையும், உறவுகளையும், காக்கும் பொறுப்பில் இருப்பதை இல்லறம் என்றும், ஒரு கட்டத்திற்குப் பிறகு, சந்ததிகளுக்குப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்ளும் கட்டத்தை, வானப் பிரஸ்தம் என்றும், முழுமையாக தன்னை விடுவித்துக் கொள்வதை சன்னியாசம் என்றும் வகுத்து வைத்தார்கள்.ஒரு மனிதன் முறையாக இந்த படிநிலைகளில் பயணம் செய்ய வேண்டும்.
இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அற்புதமாகச் சொல்லுவார். ‘‘ஒரு கையில் இல்லற தர்மத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். கடமைகளைச் செய் யுங்கள். இன்னொரு கையால் கடவுளைப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு கட்டத்தில், இல்லறக் கடமையைப் பற்றிக் கொண்டிருக்கும் கையை விடுவித்துக்கொண்டு இரண்டு கைகளாலும் பகவானைப் பற்றி கொண்டு கரை ஏறுங்கள்” என்பார்.இந்தக் கரையேறுதல் தான் வாழ்வின் நிறைவு நிலை என்பதால் அந்நிலையை துறவு நிலை என்றார்கள்.
துறவு என்பது சாதாரண விஷயம் அல்ல. காவி கட்டி விட்டால் துறவு நிலை வந்துவிடும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இல்லறத்தின் கடுமையான பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தம்மை விடுவித்துக் கொண்டு, தம்மைப் படைத்த பரமாத்மாவைப் பிடித்துக் கொள்வதைத்தான் துறவு என்பார்கள்.
இல்லறத்தின் கடமையில் இருந்து விலகுவது கள்ளத் துறவு. அது தப்பித்தல் (escapism). கடமையைப் புறக்கணித்தல். (ignorance) கட்டிய மனைவியையோ பிள்ளைகளையோ நிர்க்கதியாக புறக்கணித்து விட்டு, தான் மட்டும் நிம்மதியாக இருந்தால் போதும் என்ற சுயநலமான மனநிலையில், செல்வதல்ல துறவு. ஒரு கதை பார்ப்போம். ‘‘வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பொழுது விடிந்து பொழுது போனால் தொல்லை... தொல்லை ... தொல்லைதான்.... என்ன சுகம் வேண்டிக் கிடக்குது? பேசாமல் சந்நியாசம் கொள்ளப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த ஒருவர் குடும்பத்தை விட்டு விலகினார். காவியுடை தரித்தார். வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தார். பிரசங்கங்கள் செய்ய அவை பயன்பட்டனவே தவிர, உண்மையில் தேடிய உள்ளத் தெளிவோ, சந்தோஷமோ, ஆத்ம திருப் தியோ கிடைக்கவேயில்லை.
காசிக்குப் போனார்.பின், வடஇந்திய யாத்திரிகர்களோடு சேர்ந்து இமயமலை ஏறினார்.வழியிலிருந்த பல்வேறு இடங்களில், அமைதியாக உட்கார்ந்து தவம் புரிந்து கொண்டிருந்த சந்நியாசிகளைப் பார்த்தபோது அவருக்குப் பொறாமையாக இருந்தது. லௌகீக வாழ்வை வெறுத்து, துறவறம் மேற்கொண்ட பிறகும் அடுத்தவரைப் பார்த்துப் பொறாமைப்படும் புத்தி மட்டும் போகவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டார்.அந்த சந்நியாசிகளுடன் இருந்து தவம் புரிந்து பார்த்தார்.எத்தனையோ நாள் கள் பட்டினி கிடந்து நோன்பிருந்து பார்த்தார். மயக்கம் வந்ததே தவிர, உண்மையான மெய்யறிவு கிட்டவில்லை. மனத்தை அடக்கவோ, புலன்களை அடக்கவோ
அவரால் முடியவில்லை.
தவித்துப் போனார். இப்படிப் பொறுப்புகளிலிருந்து விலகி, இல்லறத்திலும் இருக்க முடியாமல், துறவியாகவும் ஆக முடியாமல், தவிப்பதால், குற்ற மனப்பான்மைதான் (guilty feeling) வருமே தவிர, சந்தோஷமோ நிம்மதியோ கிடைக்காது என்பதற்கு இவர் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.அது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், முறையான இல்லறத்திற்குப் பின், “கொஞ்ச காலம் வானப்பிரஸ்த நிலையில் இருந்து, துறவு நிலைக்கு வா” என்று வகையாக எடுத்துரைத்தார்கள்.எங்கேயோ பிறந்து, எங்கெல்லாமோ வளைந்து, நெளிந்து, பாறைகளில் மோதி, உணர்ச்சி வேகத்தில் உருண்டு வருகின்ற ஆறு கடலை அடைந் தவுடன் அமைதி ஆகிவிடும்.அதுபோல் இல்லறத்தில் பல்வேறு பணி களைச் செய்து, அனுபவங்களைப் பெற்று, ஒரு கட்டத்தில் அதை அடுத்து வருபவர்களிடம் முறையாக ஒப்படைத்துவிட்டு, துறவு நிலையை மேற் கொள்ளுகின்ற பொழுது, வாழ்வின் நோக்கம் பூரணத்துவம் பெற்று அமைதி கிடைக்கும்.
இந்தப் படிநிலை மாறக்கூடாது.இதை ராமாயணத்தில் தசரதன் மூலம் மிக அழகாக எடுத்துக் காட்டுவார் கம்பன்.இராமனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தான் வீடுபேறு பெறுவதற்கான முயற்சியைச் செய்யப் போவதாக தெரிவிக்கின்றான் தசரதன். அப்படித்தான் தம்முடைய முன்னோர்களும் செய்தனர் என்றும் சொல்லுகின்றான்.
நம் குலக் குரவர்கள், நவையின் நீங்கினார்
தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய்,
வெங் குலப் புலன் கெட, வீடு நண்ணினார்;
எங்கு உலப்புறுவர், என்று எண்ணி, நோக்குகேன்.
நம் குலக் குரவர்கள், தம் குலத்துப் புதல்வர்களிடம் உலகை ஆளும் பொறுப்பினைத் தந்து விட்டு இனிதே வீடுபேறு எய்தினர் என்பது இந்தப் பாட்டின் சாரம். இன்னொரு பாட்டும் உண்டு.இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்,மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்றுண்டோ ?துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ? மிக அற்புதமான பாட்டு. என்றைக்கும் வாழ்ந்து விடலாம் என்பது பொய். ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கை முடியப் போகிறது என்பது மெய். இந்த விஷயத்தை மறந்துவிடுவதைப்போல தீமை வேறு எதுவும் இலை.
இந்த உண்மையை உணர்ந்து, ஒரு கட்டத்தில், எல்லாவற்றையும் விட்டு விட்டு, துறவு என்னும் தெப்பத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, பிறவி என்னும் கடலைக் கடக்க வேண்டும் என்று சொல்லும் அபாரமான பாட்டு இது.அறநூல்களும் மெய்ஞ்ஞான நூல்களும் சொல்லும் உண்மை இது. வாழ்க்கைக் கடமையைச் செய்ய வேண்டாம் என்று எந்த நூலும் கூற வில்லை. எடுத்த எடுப்பிலேயே துறவு கொள்ள வேண்டும் என்று போதிக்கவில்லை. “கடமையைச் செய். அடுத்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பயிற்சியைத் தா. ஒப்படைத்து விட்டு விலகி, உன்னுடைய ஆன்ம முன்னேற் றத்திற்கான வழியைப் பார்” என்பதுதான் நம் முன்னோர்கள் காட்டிய உன்னத வழி.நம்முடைய பெரும்பாலான துன்பங்கள், இந்த உண்மை புரியாததாலும் , அப்படிப் புரியாததால் நாமாக நம் செயல்களால் வருவித்துக் கொள்வ தாலும் வருவன. இந்தப் படிநிலைகளில் முறையான பயிற்சி பெற்றால், எத்தகைய வாழ் விலும் மகிழ்ச்சியைக் காணலாம். அமைதியைக் காணலாம். அற்புதத்தை அனுபவிக்கலாம்.இதை எந்த நேரத்திலும் பிரிக்கக் கூடிய தற்காலிக பற்று நிலை(detached attachment) என்பார்கள். நம்முடைய பணமோ பட்டமா உறவோ எதுவாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நம்மிடமிருந்து கழன்றுவிடும். அது தானாகக் கழலுவதற்கு முன், சரியான காலத்தில், அதற்கும் தொல்லையில்லாமல், நமக்கும் கஷ்டம் இல்லாமல், கழன்று கொள்ளும் நுட்பத்தைத் தான், துறவு நிலை என்று சொன்னார்கள்.மறுபடியும் சொல்லுகின்றேன். இல்லறத்தில் இருந்து விலகி ஓடுதல் துறவு அல்ல. இல்லறத்தில் அறத்தொடு வாழ்ந்து, பக்குவப்பட்டு, இது இவ்வளவுதான் என்று புரிந்துகொண்டு, இவைகளெல்லாம் நமக்கு கடைசிவரை துணை வராது என்பதையும் உணர்ந்துகொண்டு, அவற்றில் இருந்து படிப்படியாக விலகுவது தான் துறவு.இது குறிப்பிட்டவருக்கு மட்டும் சொல்லப்பட்ட நிலை அல்ல. எல்லோருக்குமான நிலைதான்.
தேஜஸ்வி