எல்லா கிரக தோஷங்களும் நிவர்த்தியாக தினசரி வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்?
?ஆலயங்களில் மூலவரைத்தவிர, பிராகாரங்களில் என்னென்ன தெய்வங்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? மூலவரை மட்டும் வழிபட்டால் போதுமா?
- கே. பிரபாவதி. மேலகிருஷ்ணன் புதூர்.
ஆலயங்களில் மூலவரைச் சுற்றி, அந்தந்தத் தெய்வங்களுக்கு உண்டான ஆகமங்களில் சொல்லப்பட்டபடி, சுற்றுப்புறத் தெய்வங்கள் - கோஷ்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். முதலில் இவர்களை எல்லாம் வலம்வந்து தரிசித்து, அதன் பிறகே மூலவரின் தரிசனம். நேரே மூலவர் சந்நதிக்குப் போய் வழிபாட்டை முடித்து, அப்படியே திரும்புவது மரபல்ல. கோஷ்ட - பிராகார தெய்வங்களையும் அததற்கு உரிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.
?எல்லா கிரக தோஷங்களும் நிவர்த்தியாக தினசரி வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்?
- சந்திரபிரகாஷ், திருத்துறைப்பூண்டி.
பொதுவாக கிரக தோஷங்கள் என்பது நம்முடைய வினையினால் வருவது. நாம் ஏதாவது ஒரு தேவையற்ற பொருளைச் சாப்பிட்டால் நம்முடைய வயிறு கெடுவதைப் போல, நாம் செய்த தீவினை நம்மை பாதிக்கிறது. அதைத்தான் கிரக தோஷங்கள் என்று சொல்லுகின்றோம். சாப்பிடக் கூடாத ஒரு பொருளைச் சாப்பிட்டு நமக்கு வயிறு வலி வருகிறது. மழையில் நனைந்து ஜலதோஷம், ஜுரம் வருகிறது. இப்போது என்ன செய்ய வேண்டும்? முதலில் மறுபடியும் நாம் மழையில் போகாமல் இருக்க வேண்டும் அல்லது தேவையற்ற பொருட்களைச் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இது முதல்படி. பிறகு வந்த வலிக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். வைத்தியம் பார்க்காமல் அப்படியே விட்டாலும், நாம் மேற்கொண்டு கெடுத்துக்கொள்ளவில்லை யென்றால் சரியாகிவிடும்.
அது போலவே ஏதோ ஒரு வினையினாலே நமக்கு கிரகதோஷங்கள் வந்து நம்மைப் பாடாய்ப்படுத்துகின்றது என்று சொன்னால், எக்காரணத்தை முன்னிட்டும் நாம் எந்த தீய செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இது மிக முக்கிய மானது. இரண்டாவதாக வழிபாடு. அதற்கு ஆன்றோர்கள் சில முறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக, நவகிரக காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம். இவற்றை சொல்வதால் தோஷங்கள் விலகும். நவகிரக காயத்ரி மந்திரங்கள் எல்லாப் பஞ்சாங்கங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பாராயணம் செய்வதன் மூலமாக பலன் பெறலாம். ஆனால், எந்த நவகிரக மந்திரங்களாக இருந்தாலும் பிரதான தெய்வத்தின் மந்திரம் முக்கியம். நமது இஷ்ட தெய்வம், குலதெய்வத்தின் மந்திரத்தைச் சொல்லித்தான் நவகிரக மந்திரம் சொல்ல வேண்டும். ஆலயங்களில் வழிபாடு செய்யும் பொழுதும் முதலில் நாம் பிரதான தெய்வத்தை வணங்கி விட்டுத்தான் நவகிரகங்களுக்கு வரவேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
?வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
- பாக்கியம், பட்டுக்கோட்டை.
இது பற்றிய குறிப்பு பிரஹத்சம்ஹிதா என்ற நூலில் காணப்படுகிறது. இந்த வாஸ்து புருஷ மண்டலம் என்பது இரண்டு முறைகளில் பிரிக்கப்படுகிறது. மனையின் மொத்த அளவினை ஒரு சதுரமாகக் கணக்கில் கொண்டு அதனை 8×8 = 64 பாகங்களாகவும் 9×9 = 81 பாகங்களாகவும் பிரித்துப் பார்க்கும் இரண்டு வெவ்வேறு கணிதங்கள் உண்டு. பெரும்பாலும் இரண்டாவதாக உள்ள 81 கட்டங்களாகப் பிரித்து அதன் அடிப்படையில் கட்டிடங்களை உருவாக்குகிறார்கள். இதனை கிராமப்புறத்தில் குழிக்கணக்கு என்று சொல்வார்கள். நீள அகலத்தினை ஒன்பது, ஒன்பது குழிகளாக பாவித்து மொத்தம் 81 குழிகளைக் கொண்டு ஒவ்வொரு குழிக்கும் ஒவ்வொரு விதமான தேவதைகளை நிர்மாணித்து இந்த பகுதியில் கழிப்பறை அமைய வேண்டும் இந்த பகுதியில் சமையலறை, இதில் பூஜை அறை போன்ற அமைப்புகளைத் தீர்மானிக்கிறார்கள். இந்த வாஸ்து புருஷ மண்டலத்தின் அடிப்படையில் கட்டப் படும் கட்டிடங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைகிறது.
?ஞாயிற்றுக்கிழமை திருமணம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் ஞாயிற்றுக்கிழமை சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்கின்றார்களே?
- தேவராஜன், பம்பல் - சென்னை.
உலகியல் விஷயங்களுக்காகச் சொல்லப்படும் சாஸ்திரங்கள் எல்லாம் காலதேச வர்த்தமானத்திற்கு உட்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது. ஞாயிற்றுக்கிழமை என்பது எல்லோருக்கும் விடுமுறை நாளாக இருக்கிறது. அதனால் விசேஷத்தில் எல்லோரும் கலந்து கொள்ள முடியும். பொதுவாகவே ஒரு விஷயத்தை இரண்டு கோணத்தில் நாம் பார்க்க வேண்டும். சாஸ்திர ரீதியாகவும் பார்க்க வேண்டும். உலக வழக்கப்படி அல்லது அவரவர்கள் குடும்ப வழக்கப்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். சாஸ்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பது ஏற்புடையதாக இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் அனுஷ்டானத்தில் அது இருக்கிறது என்பதால் தவறில்லை. பல விஷயங்கள் இப்படித்தான் இருக்கின்றன. நாம் செவ்வாய்க்கிழமையை ‘செவ்வாயோ வெறும்வாயோ’’ என்று ஒதுக்கி வைப்போம். ஆனால் செவ்வாய்க்கிழமை ``மங்கள வாரம்’’ என்று சொல்லி சிலர் சுப காரியங்களை நடத்துவது உண்டு.
நாம் முற்பகலில் செய்யும் சில சடங்குகளை, பிற்பகலில் அல்லது மாலையில் செய்பவர்களும் உண்டு. ஆடி மாதம் முழுக்க சுபகாரியங்களை சிலர் விலக்குவார்கள். சிலர் ஆடி அமாவாசைக்கு பிறகு நல்ல நாளில் திருமணம் செய்வார்கள். காரணம் ஆடி அமாவாசைக்கு பிறகு சாந்திரமான முறைப்படி ஆவணி மாதம் பிறந்து விட்டதாக கணக்கு. (சில நேரங் களில் ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம் ஆடியில் வரும் அல்லவா..) அதைப் போலவே கரிநாள், தனிய நாள் இவற்றில் சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பார்கள். தமிழகத்தை தவிர இதர மாநிலங்களில் கரிநாள், தனிய நாள் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அன்று சுபகாரியங்களைச் செய்கின்றார்கள். ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாத அமாவாசைக்கு பிறகு சுபமுகூர்த்தங்கள் செய்கிறார்கள். அன்று வேறு தோஷங்கள் இல்லாமல் இருந்து, சுப திதி யாகவும், நட்சத்திரம் யோகம் நன்றாகவும் இருந்தால் சுபகாரியங்களைச் செய்யலாம்.
?13 என்ற எண் அதிர்ஷ்டமில்லாத எண் என்று கருதப்படுவது ஏன்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இது முற்றிலும் மூட நம்பிக்கையே. இதற்கு சாஸ்திர ரீதியாக எந்தவித ஆதாரமும் இல்லை. ஒன்றும் மூன்றும் இணைந்து வரும் நான்கு என்பது ராகுவின் எண் என்றும், இதனால் அந்த எண் அசுர சக்தியை உடையது என்றும் தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதுபோக, திரைப்படங்களின் வாயிலாகவும் சொல்லப்பட்ட கருத்துக்களின் மூலமாக அந்த எண்ணுடைய வீட்டில் அமானுஷ்ய சக்தி நடமாடும் என்ற மூட நம்பிக்கையும் பரப்பப்பட்டு உள்ளது. உண்மையில் எல்லா எண்களுமே நன்மையைச் செய்யக்கூடியதுதான். அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் அவரவர் செய்த பூர்வ ஜென்ம கர்மாவினைப் பொறுத்தே அமையும்.