தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமய உலகில் நாய்க்கு என்ன சிறப்பு?

திருமங்கை ஆழ்வார் திருமலை திருத்தலத்திற்காகப் பாடும் பாசுரத்தில் ஒரு வரி வரும். முதலில் பாசுரத்தைப் பார்ப்போம்.

Advertisement

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்

நோயே பட்டொழிந்தேன் நுனைக் காண்பதோராசையினால்

வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் பொழில் வேங்கடவா

நாயேய் வந்தடைந்தேன் நல்கி ஆள் எனைக் கொண்டருளே

திருமலை அப்பனிடம் ஆழ்வார் தன்னுடைய தாழ்மையைச் சொல்லுகின்ற பொழுது நாயேன் என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.இந்தப் பாசுரத்தில் மட்டுமல்ல, வேறு பாசுரங்களிலும் ஆழ்வார் இந்த பிரயோகங் களைச் செய்கின்றார். உதாரணமாக, திருநெடும்தாண்டகத்தில் ‘‘நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே’’ என்று குறிப்பிடுகிறார்.ஆச்சாரியார்களும் உரை நூல்களில் நாயேன் என்கின்ற சொல்லை பல இடங்களில் பேசுகின்றார்கள்.சைவத்திலும் இந்தப் பிரயோகம் பல இடங்களில் இருக்கிறது. மணிவாசகப் பெருமான் தன்னுடைய திருவாசகத்தில், ‘‘நாயினும் கடையேன்’’ என்கிறார். இன்னொரு இடத்தில் நாயடியேன் என்று சொல்லாட்சியைப் பயன்படுத்து கின்றார்.

சுந்தரர் தேவாரத்தில் தன்னை நாயேன் என்ற தொடரால் குறிப்பிட்டுக் கொள்கின்றார். திருவெண்ணெய்நல்லூர் திருக்கோயிலில் வீற்றிருக்கும் இறைவனைப் பற்றி இந்தப் பாடல் பேசுகிறது.

நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை

பேயாய்த் திரிந்து எய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன்

வேயார் பெண்ணைத் தென்பால்

வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

ஏன் இந்த வார்த்தையை நம்முடைய அருளாளர்கள் பயன்படுத்துகின்றார்கள்? பிறரைச் சொல்லும்போது இந்த வார்த்தையை தவறிக்கூட அவர்கள் பயன்படுத்துவது கிடையாது. தங்கள் நிலைமையைச் சொல்லும்போது மட்டும் அத்தனை பெருமையும் பக்தியுமுள்ள பெரியவர்கள் மிக மிகத் தாழ்ச்சியோடு இந்த சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் இறைவனிடத்திலே விண்ணப்பிக்கும் பொழுது இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும்.சமய மரபில் நாய்க்குரிய சில சிறப்புகளையும், குறியீடுகளையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த

நிகழ்வுகள் பயன்படும்.

நிகழ்வு ஒன்று

63 நாயன்மார்களில் பூந்தோட்டம் அருகே, அம்பல்(அம்பர்) என்ற ஊரில் அவதரித்த நாயன்மார் இவர். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் சிவபெருமானை வழிபட்டதால் இவருக்கு சோமாசிமாற நாயனார் என்று திருநாமம். உமையொரு பாகனாகிய சிவபெருமானையே முதல்வன் எனக்கொண்டு போற்றும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தார்.சிவன் அஞ்செழுத்தும் சித்தந் தெளிய ஓதும் நித்த நியமம் உடைய இந்நாயனார் சீரும், திருவும் பொலியும் திருவாரூரினை அடைந்து தம்பிரான் தோழராகிய வன்றொண்டர்க்கு அன்பினால் நெருங்கிய நண்பரானார்; ஒருநாள் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் சோமாசிமாற நாயனார், தான் நடத்தும் சோம யாகத்திற்கு சிவபெருமான் நேரில் வந்து அவிர்பாகம் பெற வேண்டும் என்ற மனதில் உள்ள நீண்டநாள் ஆசையை தெரிவித்தார். அதை ஏற்ற சுந்தரமூர்த்தி நாயனாரும் திருவாரூர் தியாகேசனிடம் சோமாசி நாயனாரின் ஆசையைப்பற்றி முறையிட்டார்.தியாகேசன் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் “நாளை நாம் யாகத்திற்கு எழுந்தருள்வோம். ஆனால், எந்த உருவத்தில் என்று கூற முடியாது, சோமாசிமாற நாயனார் எம்மை சரியாக அடையாளம் கண்டு அவிர்பாகம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதை சுந்தரர் சோமாசிமாற நாயனாரிடம் கூற, யாகம் மிகச் சிறப்பாக நடைபெறத் தொடங்கியது. தியாகேசனே நேரடியாக வருவதால் நாட்டின் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் யாகம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக கையில் பிடித்தபடி மகன்கள் இருவரும், மனைவியானவள் இடையிலே கள் நிறைந்த குடத்தை சுமந்தபடியும், தம்பட்டம் அடித்த வண்ணம், இறந்த கன்று ஒன்றை தோளில் சுமந்து கொண்டு வேடர் உருவில் சிவ பெருமான்

குடும்பத்தினருடன் எழுந்தருளினார்.இவர்களைக் கண்ட அந்தணர்கள் எல்லாம் பயந்து ஓட, சோமாசி மாற நாயனாரும் அவர் மனைவியும் சரியாக இவர்களை அடையாளம் கண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுத்தார்கள். அப்போது, தியாகேசன் கமலாம்பாளோடு காட்சி கொடுத்து அருளினார். இங்கே நான்கு நாய்கள் நான்கு வேதங்களுக்கு குறியீடுகளாயின.

நிகழ்வு இரண்டு

ஆதிசங்கர பகவத் பாதர் ஒருமுறை கங்கைக்கு நீராடுவதற்காக தம்முடைய சீடர்களோடு சென்றுகொண்டிருக்கிறார்.அப்பொழுது எதிரே ஒரு வேட்டைக்காரர் அழுக்கான உடைகளை அணிந்து கொண்டு, கையில் நான்கு நாய்களைப் பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் மிகவும் அசூயையுடன் ‘‘விலகிப்போ’’ என்றார். அதற்கு வேட்டைக்காரன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப் போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார்.ஆதிசங்கரருக்கு வந்திருப்பவர் சாதாரணமான வேட்டைக்காரர் அல்ல; சாட்சாத் அந்த சிவபெருமானே இந்த வடிவத்தில் வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கின்றார்.

அப்போது “மனீஷா பஞ்சகம்” என்று போற்றப்படும் ஐந்து ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக வேட்டைக்காரன் காலில் விழுந்தார்.  உடனே, வேட்டைக்காரன் மறைந்து போய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வ நாதர் நான்கு வேதங்களுடன் அவருக்குத் தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறிவிட்டு மறைந்தார். இங்கேயும் நான்கு வேதங்களின் குறியீடாக நான்கு நாய்கள்.

மூன்றாவது நிகழ்வு

இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்துக் கொடுத்த நாதமுனிகளின் சீடர்களில் ஒருவர் திருக்கண்ணமங்கை ஆண்டான்.

ஒருநாள் ஒரு நாயை ஒருவன் அடித்ததைப் பார்த்தார். இதைப் பார்த்த அந்த நாயின் சொந்தக்காரர் மிகவும் கோபமடைந்து அதை அடித்தவருடன் சண்டையிட்டார். இருவரும் தங்களுடைய கத்தியை வெளியே எடுத்துச் சண்டையிட்டார்கள். அது மட்டுமல்லாமல் ஒருவரையொருவர் கொல்லவும் தயாரானார்கள். இதைப் பார்த்தவுடன் மிகச் சிறந்ததோர் எண்ணம் திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு உதயமானது. “ஒரு சாதாரண மனிதன் தனக்குச் சொந்தமான ஒரு நாயை அடித்ததற்காக கோபப்பட்டு, கேவலம் அந்த வஸ்து தனக்கு சொந்தமானது என்பதற்காக அடித்தவரைக் கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு செல்வானேயானால், ஒருவன், “எல்லோரையும் காக்கும் எம்பெருமானிடம் நாம் சரணாகதி பண்ணி விட்டு, அவனே நம்மை காப்பாற்றுவான் என்றிருந்தால் தேவர்க்கெல்லாம் தேவனான மந் நாராயணன் காக்க மாட்டானோ?” என்று சிந்தித்தார். இதைச் சிந்தித்த உடனேயே, தான் அனைவர் மீதும் வைத்திருந்த பற்றை விட்டு, தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும், கவலையும் இல்லாமல் கோயிலுக்குச் சென்று அங்கேயே இருந்தார். இங்கே, எதுவும் செய்யாமல் அனைத்துச் செயல் களையும் விட்டார் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதற்கு என்ன அர்த்தமென்றால், அவர் எம்பெருமானுக்கு பண்ணும் கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார், ஆனால், தன்னைக் காத்துக் கொள்ளும் முயற்சியைக் கைவிட்டார் என்பதே இதன் பொருள். இங்கே நாயை ஜீவாத்மாகவும், நாயைக் காக்கும் எஜமானனை இறைவனாகவும் உருவகப்படுத்துகிறார்கள்.

தேஜஸ்வி

Advertisement

Related News