தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜேஷ்டாபிஷேகம் என்றால் என்ன?

?ஜேஷ்டாபிஷேகம் என்றால் என்ன?

Advertisement

- பிரியா மோகன், மதுரை.

மாதங்களில் ஆனி மாதத்திற்கு ஜேஷ்ட மாதம் என்று பெயர். மாதங்களிலேயே பெரிய மாதம் இது. அதிக பகல் கொண்ட மாதம் இது. அதனால் சூரியன் இந்த மாதத்தைக் கடப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்கின்றது. இந்து காலக் கணிதத்தின்படி உத்தராயண காலத்தின் இறுதி மாதமாக ஆனி மாதம் வருகின்றது. இது தேவர்களுக்கு மாலை காலமாகும். எனவே இக்காலத்தில் செய்யப்படுகின்ற கோயில் விழாக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இந்த மாதத்தில் வைணவக் கோயில்களில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். ஜேஷ்ட நட்சத்திரம் என்றால் கேட்டை நட்சத்திரம்.ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகம் என்பதால் இதற்கு ஜேஷ்டாபிஷேகம் என்று பெயர். ரங்கத்தில் அன்றைய தினம் நம் பெருமாள் (உற்சவர்) கவசங்களை எல்லாம் களைந்து விட்டு ஏகாந்த திருமஞ்சனம் கண்டருள்வார். இதை சேவிப்பது மிக மிக விசேஷமாகும். யானை மீது தங்கக் குடத்தில் காவேரி தீர்த்தம் எடுத்து வருவார்கள். அன்று பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு சேர்ப்பது வழக்கம். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை பூர்ணமாக இந்த நாட்களில் சேவிக்க முடியாதபடி படித்திரை விட்டிருப்பார்கள். திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் பெரிய திருப்பாவாடை தளிகை நடக்கும். பெரிய பெருமாள் சந்நதியில் பிரசாதத்தை பரப்பி பலாச் சுளை தேங்காய் வாழைப் பழம் மாங்காய் நெய் என ஏராளமாக சேர்த்திருப்பார்கள். உப்பு சேர்த்திருப்பார்கள். பெருமாளுக்கு படைத்து விட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள். விசேஷமான உற்சவம் இது. இது ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. சில கோயில்களில் ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும். சில கோயில்களில் ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசியில் நடைபெறும்.திருமலையில் இந்த ஜேஷ்டாபிஷேகம் ஆனிமாதம் விசாக நட்சத்திரத்தில் தொடங்கி கேட்டை நட்சத்திரத்தில் நிறைவுபெறுகின்றது.

?பிறவியிலேயே மானிடப்பிறவி உயர்ந்தது என்கிறார்கள். ஆனால் யானை, சிலந்தி, கழுகு போன்றவைகூட இறைவனை பூஜித்து முக்தி அடைந்ததாக வரலாறு இருக்கிறது. இது எப்படி சரியாகும்?

- மீரா, டெல்லி.

‘உபபுக்த சேஷம்’ என்று சொல்லுவார்கள். முற்பிறவியில் பகவானின் சேவையில் ஈடுபட்டவர்கள், ஏதோ காரணத்தால் இவ்விதம் மிருக இனமாகவோ, பறவை இனமாகவோ அடுத்த பிறவி எடுக்கிறார்கள். முற்பிறவியின் தொடர்பானதால், அவர்களுக்குக் கடவுளை வழிபடும் மனப்பக்குவமும் ஏற்படுகிறது. அதனால் மனமுவந்து இறைவனைப் பூஜிக்க முடிகிறது. பூஜையின் பலனாகவும், முற்பிறவியில் நேர்ந்த தொடர்பின் பயனாகவும் முக்தி அடைகிறார்கள். நாம் வங்கியில் பணம் போடுகிறோம். அது முழுமையாகப் பலன் தரும் வேளையில் வட்டியுடன் எடுத்துக் கொள்கிறோம். அதேபோலப் ‘பிராரப்த கர்மா’ என்று முற்பிறவியில் போட்டு வைத்திருப்பதன் பலனை இந்த பிறவியில் அடைகிறோம். இந்தப் பிறவியின் உருவமோ, இனமோ மட்டும் அந்தப் பலனுக்குக் காரணமாக அமையாது.

?பகவானுடைய வாத்சல்ய குணம் என்பது என்ன?

- வெண்ணிலா, திருச்சி.

பகவானுக்கு எத்தனையோ குணங்கள் உண்டு. அதில் அற்புதமான குணம் வாத்சல்யம். இதற்கு குற்றங்களை நல்லதாக கொள்ளும் குணம் என்பார்கள். வடமொழியில் தோஷ போக்கியத்துவம் என்பார்கள். தாய் பசுவானது கன்றின் அழுக்கை தன் வாயால் நக்கி அதை சுத்தப்படுத்தும். அதற்காக அது சந்தோஷப்படும். அப்படித்தான் இறைவன் தன் அடியார்களுடைய குற்றங்களைக்கூட நல்லது தான் செய்தார் என்று மகிழ்வானாம். இதனை ஆழ்வாரும் “எம் அடியார் அது செய்யார் செய்தால் நன்றே செய்வர்” என்று பாடுகின்றார். பக்தர்களை கன்றாகவும் (வத்சல்) தன்னை தாய்ப்பசுவாகவும் கொண்டு கன்றின் அழுக்கை தாய் பசு நீக்குவது போல இறைவனும் பக்தர்களின் குற்றங்களை ஏற்றுக்கொண்டு அருள்கிறான் என்பதால் அவனை பக்தவச்சலன் என்று அழைத்தார்கள். 108 திவ்ய தேசங்களிலே இரண்டு திவ்ய தேசங்களில் பக்தவச்சலப் பெருமாள் அருள்கிறார். ஒன்று திருநின்றவூர். இரண்டாவது திருக்கண்ணமங்கை.

?பூமிக்கு என்ன பெருமை?

- மகேஷ் குமார், திருவாரூர்.

நம்முடைய பூமிக்கு கர்ம பூமி என்று பெயர். செயல்களைச் செய்வதும் அதன் விளைவுகளை அனுபவிப்பதும் இங்குதான். நீங்கள் புண்ணியம் செய்து சொர்க்கத்திற்குச் சென்றாலும், அந்தப் புண்ணிய பலன்களை அனுபவித்து விட்டு, மறுபடியும் பூமியில் தான் பிறக்க வேண்டும். நரகத்திற்குச் சென்றாலும் திரும்ப பூமியில் வந்து தான் பிறக்க வேண்டும் என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன. அதே நேரம் நம்முடைய புண்ணிய பாப பலன்களை அறுத்துத் தள்ளிவிட்டு பிறவா நிலையை அடைவதற்கும் இந்த பூமி தான் உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால் தேவர்களுக்கு ஒரு துன்பம் என்றாலும் அதற்குப் பிராயச்சித்தமாக அவர்கள் தேவலோகத்திலும் மற்ற லோகத்திலும் பிராயச்சித்தம் செய்ய முடியாது. பூமியில் வந்து தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதனால்தான் பல கோயில்கள் தேவர்களால் கட்டப்பட்டதாக பூமியில் இருக்கின்றன. சொர்க்கத்திலோ மற்ற உலகங்களிலோ கோயில்கள் இருப்பதாக புராணங்களில் இல்லை. எனவே மற்ற உலகங்களில் இருந்து ஒருவன் பிறவா நிலையை அடைய முடியாது பூமியில் இருந்து தான் பிறவா நிலையை அடைய முடியும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்று வள்ளுவர் இந்த பூமியில் உள்ளவர்களுக்குத்தான் சொல்லி இருக்கின்றார். நம்மாழ்வாரும் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று இந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் எம்பெருமானின் திருவருளைப் பெற்று வைகுந்தத்தில் போக முடியும் என்று பாடி இருக்கின்றார். வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, நவராத்திரி போன்ற உற்சவங்களும் இந்த பூமியில் தானே கொண்டாடப்படுகின்றன இந்தப் பெருமை பூமிக்கு மட்டும் தான் இருக்கிறது.

?மனம் என்று சொல்கிறோமே, அது நம் உடம்பில் எங்கே தான் இருக்கிறது?

- ரா. கோவர்த்தனன், திருவிடைமருதூர்.

எல்லோருக்கும் தெரியும், ஆனால், அடையாளம் காட்ட முடியாது & அதுதான் மனம். அழகிய காட்சி ஒன்றைக் காண்கிறோம், ரசிக்கிறோம். அந்த ரசிப்பில் மனம் இருக்கிறது. நல்ல விஷயத்தைக் கேட்கிறோம், சந்தோஷப்படுகிறோம். அந்த சந்தோஷத்தில் மனம் இருக்கிறது. நல்வாசனையை முகர்கிறோம், மகிழ்ச்சி கொள்கிறோம். அந்த மகிழ்ச்சியில் மனம் இருக்கிறது. சுவையான உணவை உட்கொள்கிறோம், ருசிக்கிறோம். இந்த ருசியில் மனம் இருக்கிறது. நீரில் குளிக்கிறோம், நம் உடல் குளிர்ச்சியை அனுபவிக்கிறது. இந்தக் குளிர்ச்சியில் மனம் இருக்கிறது. அதாவது, நம் ஐம்புலன்களிலும் நாமே அறியாமல் நம் மனம் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், தீயதைப்பார்க்கவும், தீயதைக் கேட்கவும், தீயதை நுகரவும், தீயதை சுவைக்கவும், தீயதைத் தழுவவும் அந்த மனம் பேராவல் கொண்டுவிடுவதுதான். நமக்குள்ளேயே இருக்கும், நாமே புரிந்துகொள்ள முடியாத ஒரு அம்சம், மனம். ஆனால், நம் முடைய எல்லாவித நடவடிக்கைக்கும் அடிப்படைக் காரணமே அந்த மனம்தான் என்பதுதான் விசித்திரம்!

Advertisement