?கோமுக நீர் என்றால் என்ன? கோமுக நீரை வீட்டில் தெளித்தால் நல்லது என்கிறார்களே?
- ஜெ. மணிகண்டன், வேலூர்.
சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்த லிங்கத்தின் மத்திம பாகத்தில் நீர் வெளியே வரும் பகுதிக்கு கோமுகம் என்று பெயர். அந்த வழியாக நீர் வெளியேறுகிறது என்றால் அது ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்த நீராகத்தானே இருக்க முடியும். அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் தலையில் தெளித்துக் கொள்வதுபோல் வீட்டிலும் தெளித்தால் தெய்வீக சக்தியின் அதிர்வலையானது வீட்டினில் நிறைந்திருக்கும் என்பதால் அப்படி சொல்கிறார்கள்.
?கர்மவினை என்றால் என்ன? அதற்கு பரிகாரம் உண்டா?
- பி. கனகராஜ், மதுரை.
அனுபவித்து தீர்ப்பதே பரிகாரம். கர்மவினை என்பது தீமையை மட்டும் தருவது அல்ல. நன்மையைத் தருவதும் கர்மவினையே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வதே கர்மவினைக்கான உண்மையான விளக்கம். நன்மையைச் செய்தவர்கள் நன்மையையும், தீமையைச் செய்தவர்கள் தண்டனையையும் பெறுகிறார்கள். இரண்டும் கலந்ததே மனித வாழ்க்கை. துன்பம் மட்டும் வேண்டாம் இன்பம் மட்டும் வேண்டும் என்று நினைப்பது சரியாகாது அல்லவா. அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்றவாறே அதற்குரிய பலன்களை அனுபவிக்கிறார்கள். நன்மையைச் செய்தவர்களுக்கு கர்மவினை என்பது நற்பலன்களைத் தருவதாகவே அமையும்.
?பகலில் கனவு வந்தால் பலிக்காது என்பது எந்த அளவிற்கு உண்மை ஐயா?
- கே.எம். ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.
நூறு சதவீதம் உண்மை. கனவு என்பது தன்னை மறந்து உறங்கும்போது வருவது. பகலில் உறங்குவதை கணக்கில் கொள்ள இயலாது. இரவில் தூங்குவதையே உறக்கம் என்கிறோம். பகலில் தூங்கும்போது காணும் கனவிற்கு நிச்சயமாக பலன் கிடையாது.
?எத்தனை நாளுக்கு ஒருமுறை மௌன விரதம் இருக்கலாம்?
- ஏ. ஜெரால்டு, வக்கம்பட்டி.
மௌன அங்காரக விரதம் அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதாவது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாளில் மௌன விரதம் இருந்தால் நல்லது என்பதே அதற்கான பொருள். கலக்கமான மனநிலையைக் கொண்டவர்கள் வாரம் ஒருமுறை அதாவது செவ்வாய்க்கிழமை நாளில் மௌன விரதத்தை மேற்கொள்ளும்போது கலக்கம் நீங்கி நன்மை
அடைவார்கள்.
?நான் எல்லா விஷயத்திலும் ஏமாறுகிறேன். இதில் ஆன்மிகம் கலந்து இருக்கிறதா?
- வண்ணை கணேசன், சென்னை.
அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு ஆன்மிகம் இன்றி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்பதும் உண்மை. எதிர்பார்ப்பு என்பது இருந்தால்தான் அங்கே ஏமாற்றம் என்பதும் வரும். எந்தவித எதிர்பார்ப்புமின்று கடமையை மட்டும் செய்து வருபவர்களுக்கு ஏமாற்றம் என்பதே கிடையாது. உங்கள் கடமையைச் செய்யுங்கள். நிச்சயமாக அதற்குரிய பலன் என்பது கிட்டும்.
?கோயில் பிரகாரத்தைச் சுற்றித்தான் ஆக வேண்டுமா?
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
பூமி ஏன் சூரியனைச் சுற்றுகிறது? நிலவு ஏன் பூமியைச் சுற்றி வருகிறது? இந்த உலகத்தில் எல்லாமே இயக்கம்தான். இயற்கையிலேயே தனக்கான ஆதார சக்தி எங்கிருந்து கிடைக்கிறதோ அந்த சக்தியைத்தான் எல்லாமே சுற்றி வருகிறது. நமக்கான ஆதார சக்தி என்பது அந்த இறைவனிடத்தில் கிடைப்பதால் அந்த இறைவன் குடியிருக்கும் ஆலய பிரகாரத்தைச் சுற்றி வருகிறோம். கண்டிப்பாக ஆலய பிரகாரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும்.
?இறைவனைத் தொழும்போது அழுது அரற்ற வேண்டுமா, அல்லது மனமகிழ்ச்சியோடு இறைவனை வணங்க வேண்டுமா?
- கே. பிரபாவதி, சேலம்.
முழுமையான மனமகிழ்ச்சியோடுதான் இறைவனைத் தொழ வேண்டும். எனக்கு எது சரியானதாக இருக்குமோ அதைத்தான் நீ எனக்கு தந்து கொண்டிருக்கிறாய், நான் உன் முன்னால் நல்லபடியாக நிற்பதற்கு நீயே காரணம் என்ற எண்ணத்தினை இறைவனுக்கு முன்னால் வணங்கும்போது மனதிற்குள் கொண்டிருக்க வேண்டும். அதுவும் ஒரு திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது எப்படி நம்மை அலங்கரித்துக் கொண்டு செல்கிறோமோ அதுபோல முழுமையான மனமகிழ்ச்சியுடனும் சர்வ அலங்காரத்துடனும் இறைவனை வணங்க வேண்டும். தனது பிள்ளைகள் தன் கண் முன்னால் ஆனந்தமாய் இருப்பதைக் கண்டால்தானே பெற்றவர்களின் மனம் நிறையும். அதுபோலத்தான் நாம் அனைவருமே இறைவனின் குழந்தைகள். ஆண்டவன் சந்நதிக்கு சென்று பிரார்த்தனை செய்யும்போது முழுமையான மன மகிழ்ச்சியுடன் தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நற்பலன்கள் என்பது தொடர்ந்து கொண்டிருக்கும்.
?நல்லவர்கள் அதிகமாக துன்பப்படக் காரணம் என்ன?
- த.நேரு, வெண்கரும்பூர்.
பட்டை தீட்ட தீட்டத்தானே தங்கமும் வைரமும் பளபளவென்று மின்னும். திரி தன்னை எரித்துக் கொண்டால்தானே ஒளி என்பது வீசும். அதுபோலத்தான் இதுவும். நல்லவர்கள் சோதனைக்கு உட்பட்டாலும் அதையும் தாண்டி சாதிக்கும்போதுதான் உயர்வு பெறுகிறார்கள். தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பது போல் நல்லவர்கள் ஆரம்பத்தில் துன்பப்பட நேர்ந்தாலும் இறுதியில் அளப்பறிய நன்மையைப் பெறுகிறார்கள். இந்த உண்மையைத்தான் நமக்கு இதிகாசங்களும் புராணங்களும் விளக்குகின்றன.
?மூலம் நட்சத்திரம் உள்ள ஆண் அல்லது பெண்ணிற்கு அதே மூல நட்சத்திரம் கொண்டவரைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்றும் அப்படி வேறு நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களை மணம் முடித்தால் மாமனாருக்கு ஆகாது என்று சொல்லப்படுவது உண்மையா?
- எம். சிவசுப்ரமணியன்,திருக்கோகர்ணம்.
இதுபோன்ற கருத்துக்கள் அனைத்தும் மூடநம்பிக்கையே. இதில் எள்ளளவும் உண்மை என்பது இல்லை. இதுபோன்ற கருத்துக்களுக்கு ஆதாரமும் எந்த ஜோதிட நூல்களிலும் இல்லை.
?மறுஜென்மம், பூர்வ ஜென்மம் என்றால் என்ன?
- ஜெயசீலிராணி, புதுக்கோட்டை.
இந்த ஜென்மாவிலே நாம் அனுபவிக்கும் நன்மை தீமைகளை முன் ஜென்மம் என்றழைக்கப்படும் பூர்வ ஜென்மம் என்பது தீர்மானிக்கிறது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டு இந்த ஜென்மாவில் தொடர்ந்து நற்செயல்களையே செய்து வரும்போது அடுத்த பிறவி என்றழைக்கப்படும் மறு ஜென்மம் என்பது சிறப்பானதாக அமைகிறது. மறுஜென்மம், பூர்வ ஜென்மம் பற்றியெல்லாம் பெரியவர்கள் வலியுறுத்துவது எதைத் தெரியுமா, நல்லதையே நினை, நல்லதையே பேசு, நல்லதையே செய் என்பதற்காகத்தான். மனம், வாக்கு, செய்யும் செயல் இந்த மூன்றும் நல்லது என்கிற ஒரே புள்ளியில் இணைந்திருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே இறைவனின்
திருவடிகளில் சென்று சேர இயலும்.
திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா