நாகாத்தம்மன் என்றால் என்ன பொருள்?
? நாகாத்தம்மன் என்றால் என்ன பொருள்?
- பெருமாள், திருமங்கலம்.
அஷ்ட காளிகளில் ஐந்தாவதாக பிறந்தவள். அரியநாச்சி என்று பெயர். இவளே நாகாத்தம்மன் ஆகவும் நாகவல்லியாகவும் அழைக்கப்படுகின்றாள். நாகத்தின் வயிற்றிலே பிறந்ததாலும், நாக உடலோடு மனித பெண் முகத்தோடு அருள்பாலிக்கும் தாய் என்பதால் நாகாத்தம்மன் என்று அழைக்கப்படுகின்றாள். திருமணத்தடை, புத்திரப் பேற்றுத் தடை முதலிய தோஷங்களைப் போக்குபவள்.நாகாத்தம்மனுக்கு பல இடங்களில் கோயில் உண்டு.
?முதலில் குருவை வணங்க வேண்டுமா? கடவுளை வணங்க வேண்டுமா?
- சத்தியநாராயணன், சென்னை.
இதற்கு கபீர்தாசர் அற்புதமான பதில் சொல்லுகின்றார். குருவும் இறைவனும் என் எதிரில் ஒரு சேர நின்றால், நான் முதலில் குருவைத்தான் வணங்குவேன். அவருடைய பாதங்களைத்தான் பற்றுவேன். காரணம், கடவுளை எனக்குக் காட்டி தந்தவர் என் குருநாதர் தானே! குரு கிருபை இல்லாமல் கடவுள் எப்படிக் காட்சி தருவார்? கடவுள் நமக்கு உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களையும் தருவார். ஆனால், அந்தச் செல்வங்களை எல்லாம் தருகின்ற கடவுளையே நமக்குக் காட்டித் தருபவர் குரு அல்லவா! எனவே முதல் மரியாதை குரு என்பதை வலியுறுத்தத்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவுக்குப் பிறகு தெய்வத்தை வரிசைப்படுத்திச் சொன்னார்கள் நம்முடைய சான்றோர்கள். அருணகிரிநாதரும், முருகனை “குருவாய் வருவாய் அருள்வாய்” என்றே அழைக்கிறார்.
?ஹோமங்களை மாலை நேரத்தில் செய்யலாமா?
- கிருஷ்ணகுமார், வேலூர்.
பொதுவாக ஹோமம் செய்வதற்கு தனி நேரம் இல்லை என்றாலும், சூரிய உதயத்திற்கு பின், அதாவது காலை 7 மணி முதல் 12 மணிக்குள் ஹோமத்தைத் தொடங்கிவிட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு முன்னால் நிறைவு செய்துவிடுவது நல்லது. விதிவிலக்காக சில ஹோமங்கள் தொடர்ந்து இரவிலும் நீட்டிப்பது உண்டு.
?ஒரே நேரத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்களுக்குத் திருமணத்தைச் செய்யலாமா?
- பிரியா, திண்டுக்கல்.
பெரும்பாலும் அப்படி யாரும் செய்வதில்லை. சில நேரங்களில் செலவைக் குறைப்பதற்காக அபூர்வமாக செய்வது உண்டு. ஆனால் இது குறித்து தர்மசாஸ்திரம் என்ன கூறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
1. ஒரு வயிற்றில் பிறந்த இரண்டு பிள்ளைகளுக்கு ஒரே வருடத்தில் திருமணம் செய்யக்கூடாது. அதுபோலவே, பெண்களுக்கும் பொருந்தும்.
2. இரண்டு சகோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது. அவசியமானால் ஆறு மாதங்களுக்குப் பிறகும், வருடம் மாறினால் உதாரணமாக பிரபவ வருடம், விபவ வருடம் என்று மாறினால் மூன்று மாதங்களுக்கு பின்னரும் செய்யலாம்.
3. இரட்டை பிள்ளைகளானால், ஒரே சமயத்தில் செய்யலாம் என்று சொல்கிறார்கள். இதை அந்தந்த குடும்பப் பெரியோர்கள், குருமார்கள் என இவர்களிடம் கேட்டு விளக்கங்களைப் பெறலாம். இது பொதுவான சாஸ்திரம்.
?எதை செய்யச் சொன்னாலும் இது உன்னால் முடியாது என்று சொல்வது சரியா?
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
தவறு. அப்படிச் சொல்லி குழந்தைகளை வளர்க்கக் கூடாது. எனவே, “உன்னால் முடியாது” என்று சொல்லாதீர்கள். ஒரு உதாரணம். ஆசிரியர் ஒரு பாடத்தை இது யாராலும் செய்ய முடியாது என்று கரும் பலகையில் எழுதிவிட்டுச் சென்றுவிட்டார். தாமதமாக வந்த மாணவன் அது ஏதோ வீட்டுப்பாடம் என்று நினைத்து அடுத்த நாள் மிகச் சரியாக விடையை கண்டுபிடித்து வந்தான்.
ஆசிரியர் கேட்டார்;
``இதை எப்படிச் செய்தாய்?’’ என்று மாணவன் சொன்னான்;
``நான் எனது வீட்டுப்பாடம் என்று நினைத்தேன். அது முடியாது என்று நீங்கள் சொன்னது எனக்குத் தெரியாது’’ முடியாது என்று மண்டையினுள் ஏற்றப்படாததால் முடிந்தது. இதை நினைவில் கொண்டு பிள்ளைகளை வளருங்கள்.
?சிலர் வியாழக்கிழமை பொது இடத்தில் கூட்டமாக வானத்தைப் பார்க்கின்றார்கள், ஏன்?
- பாலகுமாரன், புதுச்சேரி.
அவர்கள் கருட தரிசனம் பார்க்கின்றார்கள். வியாழக்கிழமை கருட தரிசனம் பார்ப்பது நம்முடைய தோஷங்களை நீக்கும் என்பது நம்பிக்கை. அதனால் பல ஊர்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாலை நேரத்தில் கருட தரிசனத்தைத் பார்ப்பதற்காக கூட்டம் கூடும். இதற்கென்று சில ஊர்களில் சங்கம்கூட வைத்திருக்கிறார்கள். கருடனைத் தரிசிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்: ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும்
திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.
செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.
புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
வியாழ கருட தரிசனம் - சகல நலங்களும் ஒருசேர தரும்
வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்
சனி கருட தரிசனம் - நற்கதி தரும் கருடனை தரிசிக்கும் போது கருட காயத்ரி சொல்லுங்கள்:
‘ஓம் தத்புருஷாய வித்மஹே,
ஸூவர்ண பட்சாய தீமஹி,
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’
?மருத்துவ அறிவு வேத காலத்தில் இருந்ததா?
- தாமோதரன், சின்ன சேலம்.
மருத்துவ அறிவு வேதகாலத்தில் அருமையாக இருந்தது. அக்காலத்தில் ஒளஷதங்கள் (மருந்துகள்) எனப்பட்டன. அதனை எந்த மூலிகையிலிருந்து பெறுவது, பயன்படுத்தும் காலம், பயன்படுத்தும் முறை, சொல்ல வேண்டிய மந்திரங்கள் என ஏராளமான விஷயங்கள் அதர்வண வேதத்தில் உண்டு.
?திரு ஆவினன் குடி எங்கு இருக்கிறது?
- அருள்பிரகாஷ், மதுரை.
பழனி மலையின் அடிவாரப் பகுதியை திரு ஆவினன்குடி என்று சொல்வார்கள். அந்த அடிவாரக் கோயிலில் உள்ள முருகனை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து முருகன் காட்சி தருகின்றார். இதை ஆதிகோயில் என்று சொல்வார்கள்.
?அன்பு எதை சாதிக்கும்?
- செந்தில்குமார், சென்னை.
அன்பு, சாதிக்காத விஷயம் என்று எதுவும் இல்லை. அது எல்லாவற்றையும் சாதிக்கும். முதலில் நம்முடைய மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆற்றின் அடிப்பகுதி எத்தனையோ மேடு பள்ளங்களோடு இருந்தாலும், ஆற்றின் மேல் பகுதி சமமாகவே இருக்கும். அதுபோல், தன் சொந்த சிக்கல்கள் எத்தனையோ இருந்தாலும் அன்பு செலுத்தும் மனிதன் தன்னுடைய மனதின்
மேற்பரப்பை சீராகவே வைத்துக் கொள்வான். இது ஒரு மிகப் பெரிய நன்மை அல்லவா.