இந்த வார விசேஷங்கள்
15-11-2025 - சனிக்கிழமை மாயவரம் கௌரி மயூரநாதர் ஐப்பசி உற்சவம்
மயிலாடுதுறை தலத்தில், பார்வதி தேவி மயில் வடிவில் சிவனை வழிபட்டதால், இறைவன் ‘மயூரநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘கௌரி’ என்பது பார்வதி தேவியைக் குறிக்கிறது. இத்தலத்தில் நடராஜப் பெருமான் கௌரி தாண்டவ தோரணையில் அருள்பாலிக்கிறார். பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார். மாயவரம் மயூரநாதர் கோயிலில் ஐப்பசி மாத உற்சவம் ஐப்பசி முதல் தேதியன்று தொடங்கி, துலா உற்சவத்துடன் சிறப்பாக நடைபெறும். ஐப்பசி மாதத்தில் துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். இன்று திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
16-11-2025 - ஞாயிற்றுக்கிழமை ரமா ஏகாதசி
பகவான் விஷ்ணுவுக்கு உகந்த திதி ஏகாதசி. ஏகாதசி அன்று விரதமிருந்து, அவரை வழிபடும் பக்தர்களின் துயரைப் போக்குபவர். ரமா ஏகாதசி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருந்தால் அரசனைப் போல வாழ்வை இறைவன் நமக்கு அளிப்பார் என்கிறது ஏகாதசி மகாத்மியம். ஏகாதசி திதி அன்று, விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, துவாதசி அன்று பாரணை செய்து விரதம் முடிப்பது மிகவும் விசேஷமாகும். ஏகாதசி திதி அன்று இரவு கண்விழித்து நாம ஜபம் செய்பவர்களை பகவான் விஷ்ணு ஒரு கோட்டையைப் போல சுற்றியிருந்து பாதுகாப்பார். ஒவ்வோர் ஏகாதசியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவற்றின் மகிமைகளை ஏகாதசி மகாத்மியமும் பிரம்ம வைவர்த்த புராணமும் தெரிவிக்கின்றன.
16-11-2025, ஞாயிற்றுக்கிழமை கடைமுகம்
துலா மாதம் காவிரியில் நீராட ஏற்ற மாதம். வடக்கு திசை பக்கம் மட்டுமே தவழ்ந்து கொண்டிருந்த கங்கா தேவி, தென்திசையில் இருக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் பொருட்டு ஐப்பசி மாதத்தில் மட்டும் காவிரியின் துலா கட்டத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். கடைமுகம் என்பது ஐப்பசி மாதத்தின் கடைசி நாளைக் குறிக்கிறது, இது கடை முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில், துலா கட்டத்தில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மயிலாடுதுறையில் கடைமுகத் தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெறும்.
\16.11.2025 - ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹஸ்தம்
ஞாயிற்றுக் கிழமை அன்று ஹஸ்த நட்சத்திரம் வந்தால் ஆதித்ய ஹஸ்தம் என்று சொல்வார்கள். இது புனிதமான தினம். இன்று செய்யும் வழிபாடுகள், பூஜைகள் அதிக பலன் அளிக்கும். தாய் சந்திரன், ஹஸ்த நட்சத்திரத்திற்கு உரியவர். தந்தை சூரியன். ஞாயிறுக்கிழமைக்கு உரியவர். இருவரும் இணைந்த நாளில் பெற்றோர் ஆசிர்வாதம் பெறுவதும் சூரியனை வணங்குவதும் சிறப்பு.
17.11.2025 - திங்கட்கிழமை முடவன் முழுக்கு
கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் விலகும் என்று கூறப்படுகிறது. ஏழு புண்ணிய நதிகளில், காவிரி நதியில் மட்டுமே, ஐப்பசி மாதத்தில் மற்ற நதிகள் எல்லாம் எழுந்தருளி ஒன்றுகூடுகின்றன என்று கூறப்படுகிறது. ஐப்பசி கடைசி தின கடைமுழுக்குக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை நவம்பர் 17ம் தேதி, முடவன் முழுக்கு என்று கூறப்படுகிறது. இது கார்த்திகை முதல் நாள் அன்று அமைகிறது.
அது என்ன முடவன் முழுக்கு? ஒரு சமயம் நடக்கமுடியாத சிவபக்தர் ஒருவர், காவிரி துலா கட்டத்தில் நீராட தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால், அவர் வந்து சேர்வதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து, கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டது. தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்திய அவர், மயூர நாதரை நினைத்து தியானித்தாராம். அப்பொழுது அங்கு ஒரு அசரீரி கேட்டதாம். ‘‘நீ காலம் தாழ்த்தி வந்ததற்காக வருத்தப்பட வேண்டாம். இன்றே இந்தக் காவிரி கட்டத்தில் நீராடு. உன்னுடைய பாவங்கள் விலகும். உனக்கும் முக்தி கிடைக்கும்’’ என்கிற வார்த்தைகளைக் கேட்டவுடன், அவருக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானதாம். சிவபெருமானுக்கும், கங்கா தேவிக்கும் நன்றியைக் கூறிவிட்டு, அன்றைய தினம் காவிரி துலா கட்டத்தில் நீராடி, தனது ஆவலைப் பூர்த்தி செய்து கொண்டாராம்.
17-11-2025 - திங்கட்கிழமை சபரிமலை விரதம் மாலை அணிதல்
சபரிமலை விரதத்தின்போது, கார்த்திகை மாதம் முதல் நாளிலோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ மாலை அணிந்து விரதம் தொடங்க வேண்டும். 54 அல்லது 108 மணிகள் கொண்ட மாலையை, ஐயப்பன் டாலருடன், ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜை செய்து அல்லது குருசாமியின் கைகளால் அணிந்து கொள்ளலாம்.விரதம் குறைந்தபட்சம் 41 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும். கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்தால் நாள் பார்க்கத் தேவையில்லை; அதற்குப் பிறகு அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து அணிய வேண்டும் என்று சொல்வார்கள். விரதத்தின்போது அன்பு, பொறுமை, தியாகம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனை களில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.
17-11-2025 - திங்கட்கிழமை சிவாலயங்களில் 1008 சங்காபிஷேகம்
திங்கட்கிழமை என்பது ‘‘சோமவாரம்’’ என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது. இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள்கிழமையிலிருந்து ஆரம்பித்து, கார்த்திகை மாதம் வரும் திங்கள் கிழமை அனைத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள் புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு
‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார்.
சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப் பிடிக்கின்றனர்.இந்த நாட்களில் சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். சந்திர சேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டு கின்றனர். இன்று திருவெண்காடு திருக்கழுக்குன்றம் திருக் கடையூர் போன்ற சிவாலயங்களில் ஆயிரம் சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங் களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும். குறிப்பாக இறைவன் சிவனார், சந்திரனின் பெயரை ஏற்று அருள் பாலிக்கும் தலங்களைத்
தரிசிப்பது விசேஷம்.
17-11-2025 - திங்கட்கிழமை திரு இந்தளூர் தீர்த்தவாரி
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களுள் 26வது திருத்தலம். ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். மாதப்பிறப்பு, அமாவாசை ஆகிய இரண்டு தினங்களில் கருடசேவை நடைபெறும் இத்தலத்தில் ஐப்பசியில் துலா பிரம்மோத்சவம் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இன்று தீர்த்தவாரி நடைபெறும்.
18-11-2025 - செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி அம்பாள் ஊஞ்சல்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை ஒட்டி, அம்பாள் ஊஞ்சல் விழா நடை பெறுகிறது. ஊஞ்சல் மண்டபத்தில் இந்த விழா நடைபெறும். இந்த விழாவின் முடிவில், அம்பாள் மற்றும் சுவாமி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.
18-11-2025 - செவ்வாய்க்கிழமை யம தர்ப்பணம்
கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று கால தேவனை வணங்கி தர்ப்பணம் முதலிய பூஜைகளைச் செய்ய வேண்டும். ஆயுள் காரகனாகவும், நீதி தேவதையாகவும், சர்வபூத சாட்சியாகவும் விளங்கும் அவரை இன்றைய தினம் தர்ப்பண பூஜை செய்ய வேண்டும். எல்லோரும் இதை செய்யலாம். அமாவாசை தர்ப்பணம் வேறு. யம தர்ப்பணம் வேறு.
19-11-2025 - புதன்கிழமை லட்சுமி பிரபோ தின விரதம்
இன்றைய நாளில் மகாலட்சுமிக்கு உரிய விசேஷமான பூஜைகளைச் செய்யலாம். கார்த்திகை மாதம் என்பது சிவனுக்குரிய மாதம் போலவே மகாலட்சுமிக்கும் உரிய மாதம். கார்த்திகை மாதத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அக்காலத்தில் லட்சுமி என்று பெயரிடும் வழக்கம் உண்டு. குறைந்தபட்சம் அன்றைய மாலை, விசேஷமாக ஒரு விளக்கை, தூய்மைப்படுத்தி ஏற்றி, மகாலட்சுமியை ஸ்தோத்திரங்கள், பாடல்களைச் சொல்லி, ஒரு இனிப்பு பலகாரத்தை நிவேதனமாகப் படைத்து பூஜை செய் யலாம். செல்வ விருத்திக்கும் இழந்த செல்வத்தைப் பெறவும், வியாபார விருத்திக்கும், உயர்பதவிகள் கிடைக்கவும் ஏற்ற பூஜை இந்தப் பூஜை.
19-11-2025 - புதன்கிழமை சர்வ அமாவாசை
சந்திரன் நீசம் அடைந்து விருச்சிக ராசியில் சூரியனோடு இணையும் புனித நாள் அமாவாசை. இன்றைய தினம் முன்னோர்களை நினைத்து நீர்க்கடன் செய்வது ஏற்றது. நீத்தாரைக் காக்கும் விஷ்ணுவின் புதன்கிழமையில் குருவினுடைய விசாக நட்சத்திரத்தில் இந்த தினம் அமைந்திருக்கிறது. முறையாக நீர்க்கடன் செய்பவர்கள் செய்யலாம். அப்படி பழக்கம் இல்லாதவர்கள் குறைந்தபட்சம் தம்முடைய முன்னோர்களை நினைத்து மதியம் இலைபோட்டு பலவிதமான காய்கறிகளோடு உணவு படைத்து அதனை காகத்திற்கு வைத்துவிட்டு உண்ணலாம். பசு (கோ) தரிசனம் செய்து, பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப் பழங்கள் முதலியவற்றை அளிக்கலாம்.
19-11-2025 - புதன்கிழமை திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள்
கார்த்திகை அமாவாசை என்றாலே திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் நினைவுக்கு வந்து விடுவார். ஸ்ரீதர ஐயாவாள் மிகச் சிறந்த சிவபக்தர். மைசூர் சமஸ்தானத்தில் மிக உயர்ந்த அரசாங்க பதவியில் இருந்தவர். சிவபூஜைக்கும் சிவ சிந்தைக்கும் அரசாங்க காரியங்களும், பதவிகளும், தடையாக இருப்பதை அறிந்தவர், ஒரு கட்டத்தில் தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு கும்பகோணம் காவிரிக்கரையில், திருவிடை மருதூர் அருகே உள்ள திருவிசநல்லூர் என்கின்ற இடத்தில் வந்து தங்கினார்.கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தில் ஸ்ரீதர ஐயாவாள் தந்தையாரின் நினைவு நாளில் இவர் வீட்டு கிணற்றில் கங்கையே பிரவாகமாக வந்தது. கங்கையில் நீராடி ஸ்ரீதர ஐயாவாளின் தந்தையின் சிராத்தத்தை முறையாக நிறைவேற்றினர். 300 வருடங்கள் கழித்தும், கங்கை பொங்கி வந்த கார்த்திகை அமாவாசை தினத்தில் இன்றைக்கும் திருவிசநல்லூர் சென்று கிணற்றில் ஊறிவரும் கங்கையில் சகல மக்களும் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.