தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோழியைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

இந்த உலகத்தில் எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. ஓர் அறிவு உயிரினம் தொடங்கி ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் இருக்கின்றன. ஆறாவது அறிவு இருந்துவிட்டால் அவன் மனிதனாகி விடுகின்றான். பெரும்பாலான உயிரினங்களுக்கு ஐந்தறிவு கொடுத்த இறைவன், ஏன் மனிதனைப் படைத்து ஆறாவது அறிவைக் கொடுத்தான். என்பதைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த ஆறாவது அறிவை “பகுத்தறியும் அறிவு” என்பார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த ஆறாவது அறிவை மற்ற உயிரினங்களோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் என்ன தொடர்பு என்பது விளங்கும். ஆறாவது அறிவின் மூலமாக மனிதன் கற்கிறான்... கற்கிறான்... கற்றுக் கொண்டே இருக்கிறான்.இந்தக் கற்றலுக்கு உதவுவது தான் ஆறாவது அறிவு. பள்ளிக் கூடங்கள் வைத்து இன்று பாடங்களைச் சொல்லித் தருகின்றோம். ஆனால் மனிதன் இன்றைக்கு உள்ள அறிவை ஒரு மனிதரிட மிருந்து பெற்றானா என்று பார்த்தால் கிடையாது. அவன் தன்னுடைய அறிவை, தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய பல்வேறு உயிரினங்களைக் கவனிப்பதன் மூலமாகப் பெற்றுக் கொண்டான். கல்வி என்பது நம்மைச் சுற்றியுள்ள விஷயத்தைக் கவனித்தலும் அதைக் குறித்துச் சிந்தித்தலும், சிந்தித்து ஒரு முடிவுக்கு வருதலும்தான். விவசாயத்தில் ஆரம்பித்து, வீடு கட்டுவது வரை அவன் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களின் மூலமாகத்தான். ஆகையினால், மற்ற உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஆசான்கள் என்று ஆன்மிகத்தில் சொல்லுவார்கள். ஒரு அழகான திரைப்படப் பாடலைப் பாருங்கள். கவிஞர் முதல் இரண்டு வரிகளில் சொல்லுகின்றார்.ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும்.உண்மைதான். ஒன்றாக இருந்தால் மனிதன் நன்றாக இருக்கலாம். ஆனால், உலகத்தில் உள்ள மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று புத்தகங்களில் சொல்வதும் மேடைகளில் பேசுவதுமாக இருக்கிறார்களே தவிர, ஏதாவது ஒரு ஊரிலே ஒன்றாக இருக்கிறார்களா என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றாக இல்லை. காரணம், அறிவின் தெளிவின்மையும் சுயநலமும்தான்.சரி, மேலே உள்ள திரைப்படப் பாடலுக்கு வருவோம். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் இதை யாரிடம் கற்றுக் கொள்வது?கவிஞர் இந்த இடத்தில் ஒரு அற்புதமான விஷயத்தைச் சொல்கின்றார். அதோ பாருங்கள். காக்கைகள் கூட்டமாக வருகின்றன. ஒற்றுமையாக வருகின்றன. தங்களுக்குள் கூடி வருகின்றன. அவைகள் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளாமல் வருகின்றன. இந்த ஒற்றுமையை அவைகள் எங்கே கற்றுக் கொண்டன என்று தெரியவில்லை. ஆனால், அவை களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ளலாம் என்கிறார்.விலங்குகள் பறவைகளிடம் இருந்து மனிதன் கற்கிறானா? நாம் அல்லவா கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.உண்மைதான். நாம் விளையாட்டுக்காகவோ இல்லை நம்முடைய வேறு விஷயங்களுக்காகவோ, நம்முடைய நன்மைக்காக விலங்குகளுக்கு பல பழக்கங்களைச் சொல்லித் தருகிறோம். ஒரு கூண்டிலே கிளியை வைத்து ஜோசியம் சொல்லுகின்றவருக்கு கிளிதான் உதவி செய்கிறது. கிளி 500 ரூபாய் சம்பாதித்து கொடுத்தால் இரண்டு ரூபாய்க்குத் தானியங்களை வாங்கிப் போட்டு, கூண்டில் அடைத்துவிடுகின்றான். தன்னுடைய சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ளுகின்ற மனிதன், கிளியின் சுதந்திரத்தைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அவனுக்கு வேறு வழி இல்லை. அதுதான் தொழில். ஆனால் உண்மை என்பது எது என்று யோசித்துப் பாருங்கள்.பல கண்டுபிடிப்புகள் கூட, உயிரினங்கள் தான் சொல்லித் தந்தன என்று ஒரு அருமையான பாடலைக் கவிஞர் கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.

பறவையைக் கண்டான்

விமானம் படைத்தான்

பாயும் நீரில் படகினைக் கண்டான்

எதிரொலி கேட்டான்

வானொலி படைத்தான்

- என வரிசையாக அடுக்குவார்.திரைப்படப் பாடல் என்று தள்ளி விடக்கூடாது. சிந்தனையைக் கூர்மையாக்கும் பாடல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.மனிதன் இத்தனை விஷயங்களைக் கற்றுக்கொள்ளுகிறானே அவருடைய நோக்கம் என்ன? இன்றைக்கு கற்றலின் நோக்கம் என்ன? தொழில் (profession, Job) பணம் (money)

நாம் வள்ளுவரை மிகவும் மதிக்கிறோம். தூக்கிக் கொண்டாடுகிறோம். ஆனால், அவர்தான் ஏன் கற்க வேண்டும் என்பதை ஒரு குறட்பாவில் அழகாகச் சொல்லுகின்றார்.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

1330 குறட்பாவில் இந்த குறளை மட்டும் ஒருவன் படித்துப் பின்பற்றினாலும் அவன் வள்ளுவர் காட்டிய மகத்தான மனிதனாக ஆகிவிடுவான். மனிதனாக ஆகிவிட்டால் புனிதனாகவும் ஆகிவிடுவான். புனிதனாக ஆகி இந்த வையகத்தில் வாழ்ந்தால் அவன் வானுலகத்தில் தெய்வத்துக்கு சமமானவனாக இருந்து விடுவான்.முதல் வரி. கற்க கசடற...கசடு என்றால் மாசு. அசுத்தம். குற்றம். பல பொருள்களைச் சொல்லலாம்.மனிதன் கற்றவன் என்றால் மாசு இல்லாதவனாக இருக்க வேண்டும். குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதற்காகவே கல்வி கற்க வேண்டும். குற்றம் எப்படிப் புரியலாம் என்பதற்காகக் கல்வி கற்கக் கூடாது. இது ஒரு கோணம். இன்னொரு கோணம் கற்பதில் கசடு இருக்கக் கூடாது. அதாவது தூய்மையான நூல்களைக் கற்க வேண்டும். சாரமான நூல்களைக் கற்க வேண்டும். ஒரு நூலில் குற்றமில்லாத விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். என்ன அழகாக வந்து விடுகிறது பாருங்கள். இப்படி நன்மையான விஷயங்களைக் கற்றவன் அதன்படி நடக்க வேண்டும் என்கிறார். ஒருவன் தன்னுடைய கல்வியில் கற்ற ஒழுக்கத்தை நடைமுறையில் பயன்படுத்தவில்லை என்று சொன்னால் அந்தக் கல்வியால் அவனுக்குக் கிடைத்த பலன் என்ன? பணம் கிடைத்திருக்கலாம் பதவி கிடைத்திருக்கலாம். ஆனால் என்ன ஆன்ம லாபம் கிடைத்தது?அதனால்தான் பாரதி பாடினார். படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான். நல்ல நூல்களில் சில விஷயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கும். நல்ல நூல்கள் அல்ல என்று சொல்லப்படும் நூல்களிலும் சில விஷயங்கள் எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.எந்த நூல்களிலும் சாரமான விஷயத்தை மட்டும் பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.வைணவத்தில் ஒரு நல்ல வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வார்த்தையைச் சொல்லுவார்கள். ‘‘கோழி போல இருக்க வேண்டும்’’ என்பார்கள்.அது என்ன கோழி? கொட்டி வைத்த குப்பைகளைக் கிளறுகின்ற கோழி, எத்தனைக் குப்பை இருந்தாலும் அதையெல்லாம் காலாலும் மூக்காலும் தள்ளிவிட்டு தனக்கு வேண்டிய சிறு தானியம் இருந்தால் அதை மட்டும் எடுத்துக்கொள்ளும்.கோழியிடம் மனிதன் கற்க வேண்டிய குணம் இதுதான்.அசாரங்களைத் தள்ளிவிட்டு சாரமான விஷயம் எதில் இருந்தாலும் எங்கிருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும். இந்த கல்வியைச் சொல்லித் தருவது கோழி.

தேஜஸ்வி