கன்னிகாதானம்
திருமண வைபவம் எப்படிச் செய்வது என்பதை மேலே பார்க்கும் முன்னால் ஒரு கேள்வி எழுகின்றது. இப்பொழுது திருமணங்களை ஆலயங்களில் வைத்துக் கொள்ளுகின்றார்கள். குறிப்பாக கோயில்களில் செய்வது தான் சிறப்பு என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், ஆலயங்களில் ஸ்வாமிக்கு முன்னாலே லௌகீகமான அக்னி வளர்த்து, மந்திரங்களைச் சொல்லி செய்வதைவிட இல்லத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளைச் செய்வதே சிறப்பு.
வழிவழியாக அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. இட நெருக்கடி, பிராயச்சித்தம் என்று பல காரணங்களினால் இப்போது சிலர் ஆலயங்களில் இவ்வைபவத்தைச் செய்கின்றனர். ஆலயங்களுக்கு இதனால் வருமானமும் கிடைக்கின்றது. ஆலயங்களினுடைய வெளிப்புறம் தனி மண்டபம் கட்டி கல்யாணத்திற்கு அல்லது வேறு விசேஷத்திற்கென்று வாடகைக்கு விடுகிறார்கள். ஆனால், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் போன்ற உள் மண்டபங்களில் திருமணம் நடத்துவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல.
இல்லறம் ஏற்பதற்காகச் செய்யக்கூடிய திருமண சடங்கு. இல்லத்திலேயே நடப்பதுதான் சிறப்பு. அதைப்போலவே இன்னொன்றும் சொல்ல வேண்டும். சஷ்டியப்த பூர்த்தி என்று சொல்லப்படுகின்ற மணிவிழா வைபவம் கோயிலிலே அறுபதாம் கல்யாணம் என்று பெயரிட்டு நடத்தப்படுகின்றது. அறுபதாம் கல்யாணம், எழுபதாம் கல்யாணம் என்றெல்லாம் சாஸ்திரத்தில் கூறப்பட்டதாகத் தெரியவில்லை. பெரியோர்களும் அதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. சில கோயில்களில் இதனை எப்படிச்செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.
அறுபது வயது பூர்த்தி என்பது ஒரு சாந்தி பரிகாரமே தவிர அது ஒரு திருமணம் அல்ல. இருந்தாலும் பல்வேறு காரணங்களால் அதிலேயும் திருமாங்கல்ய தாரணம் முதலியவை நடக்கின்றன. திருமண மந்திரங்கள், சடங்குகளினுடைய நுட்பங்களையும், மந்திரங்களின் பொருள்களையும் தெரிந்து கொண்டால் எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து செய்ய வேண்டியது கன்னிகா தானம். பெண்ணின் தந்தை சங்கல்பம் ஒன்றினைச் செய்துகொண்டு தன்னுடைய பெண்ணைத் தானமாகத் தரவேண்டும்.
அடியேனிடம் அடிக்கடி ஒரு கேள்வி கேட்பதுண்டு. இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்கு செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையைப் பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகின்றான். இது சாஸ்திரத்தில் இருக்கிறது.
இதைச் சொல்லி பெண் பிள்ளை மட்டும் உள்ளவர்கள் புத் என்கிற நரக வாசத்தை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லையா என்று கேட்பதுண்டு. சாஸ்திரத்தை நேரடியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்து கொள்வதினால் வருகின்ற விளைவு இது.
அரைகுறை ஞானம் ஆபத்து என்பார்கள். அப்படியானால் பெண்ணைப் பெற்றவர்க்கு என்ன பெருமை? என்று பார்க்க வேண்டும். கன்னிகா தானத்தின் போது செய்கின்ற சங்கல்ப மந்திரத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டால் இந்தச் சந்தேகமே நமக்கு வராது.அது என்ன சங்கல்பம் என்றால்
``தஸாநாம் பூர்வேஷாம் தஸாநாம் பரேஷாம்
ஆத்ம நஞ்ச குலோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்த்ம்
கன்னிகா தானாக்ய மஹா தானம் கர்த்தும் யோக்யதா
ஸித்திம் அநுக்கிரகாண....’’- என்று அந்த மந்திரம் வருகிறது.
தஸாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள். தஸாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். ஆத்மநச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவதற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெரும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது. தானத்திலேயே மிகச்சிறந்த தானம் கன்னிகா தானம். ஒரு நல்ல பெண்ணைத் பெற்றெடுத்து அவளை தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்குத் திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை விருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கன்னிகா தானம் என்பது திருமண வைபவத்திலே மிக முக்கியமான நிகழ்வு. மணமகனை மகா விஷ்ணுவாக பாவித்து ஆசனம், கால் அலம்புதல். அர்க்கயம், மதுபர்க்கம், கோதானம், பூதானம், சாளக்ராம தானம் இவற்றையெல்லாம் கொடுத்து கன்னிகையையும் தானமாகத் தரவேண்டும். கிழக்கு முகமாக மணமகனை உட்கார வைத்து பெண்ணின் தந்தை தீர்த்தத்தால் மணமகனின் காலை அலம்புவார். அப்போது மணமகன் ஒரு மந்திரத்தைச்சொல்லுவதாக ஆசிரியர் சொல்லுவார்.
``ஆப: பாதா வநே ஜநீ: திவிஷந்தம் நாசயந்து மே
அஸ்மின் குலே ப்ரஹ்ம வர்ச்சஸீ அஸாநீ’’
என்பது அந்த மந்திரம். என்ன பொருள் என்றால் இப்போது என் காலில் சேர்க்கப்பட்ட இந்த நீரானது எனது பகைவர்களை அழிக்கட்டும்.
இந்த குலத்தில் நான் பிரம்ம ஒளியுடன் இருப்பேனாக. மணமகளின் தந்தை மணமகனை நோக்கி சொல்ல
வேண்டிய மந்திரம் ``மஹாவிஷ்ணு ஸ்வரூபஸ்ய வரஸ்ய இதம் ஆசனம்’’சாட்சாத் மஹாவிஷ்ணுவாக இருக்கக்கூடிய தங்களுக்கு இந்த ஆசனங்களைத் தருகின்றேன். அதற்குப் பிறகு, தயிர் தேன் கலந்து மதுபர்கத்தை அல்லது ஒரு வாழைப்பழத்தை சர்க்கரையில் நனைத்து பாலோடு மணமகனுக்குத் தரவேண்டும். இதற்கெல்லாம் தனித்தனி மந்திரத்தை அவகாசத்திற்கு ஏற்றார்போல் சொல்ல வேண்டும். இதே வேளையில் மணப்பெண்ணுக்கு மந்திரஸ்நானம் செய்விக்கப்பட வேண்டும். அவள் தலையிலே நுகத் தடியை வைத்து அதன் முனையிலே ஹிரண்யம் அதாவது பொற்காசு வைத்து சில மந்திரங்களைச் சொ ல்லி கூரைப்புடவையைக் கொடுத்து உடுத்தி வரச் சொல்ல வேண்டும்.
அதற்குப் பின், தர்பத்தினால் முறுக்கப் பட்ட கயிற்றை (மௌஞ்சிதாரணம்) மணமகளின் இடுப்பில் சுற்றி கட்ட வேண்டும். கன்யாதானம் செய்யும்போது கோத்ர ப்ரவரத்தைச் சொல்லி மஞ்சள் படுத்திய தேங்காய் வெற்றிலை பாக்கு அதில் நீர் வார்த்து மந்திரத்தைச் சொல்லி தானம் செய்ய வேண்டும். இதற்கான சங்கல்ப மந்திரங்கள் இருக்கின்றன.கன்னியாதான மந்திரத்தைச் சொல்வதற்கு முன்னால் ஊஞ்சல் பற்றி சில செய்திகள். ஊஞ்சல் என்பது எல்லா சம்பிரதாயத்திலும் பின்பற்றப்படுவது இல்லை. ஆனாலும், ஊஞ்சல் பலகையில் மணமக்களை உட்கார வைத்து ஆட வைப்பதற்கு அருமையான காரணங்கள் உண்டு.
ஊஞ்சல் சங்கிலிகள் அழகான பூச்சரங்களால் சுற்றப்பட்டு அலங்காரமாக இருக்கும்.
காசி யாத்திரை முடிந்தவுடன் மணமகனிடம் தன் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி ஊஞ்சலுக்கு மணமகனை அழைத்து வருவார்கள். மணமகன் தந்தைக்குப் பதிலாக பெண்ணின் சகோதரர் அழைத்து வருவதும் உண்டு. மணப்பெண்ணை கன்னிக்கூறை உடுத்திவரச் சொல்வார்கள். இந்த கூறைப் புடவைத் தரும்பொழுது ஒரு மந்திரம் உண்டு. வேத மந்திரங்களைச் சொல்லி கூறைப் புடைவையை ஆசிர்வாதம் செய்து தருவார்கள். அப்பொழுது சொல்லப்படும் மந்திரம். அற்புதமான அர்த்தம் உள்ள மந்திரம்.
``பரித் வாஹிர்வனோ கிர இமாபவந்து விஸ்வத:
வ்ருத்தாயு மனு வ்ருத்தயோ ஜுஷ்டாப வந்து ஜூஷ்டய:’’
இந்திரனைக் குறித்த மந்திரம் இது. இந்த கூறைப் புடவை எப்படிப் பெண்ணைச் சுற்றி இருக்கிறதோ அதேபோல் இந்திரனே உன்னைச் சுற்றி இந்தப் பிரார்த்தனைகள் நிற்பதாகுக.
பெரியோர்களை கௌரவிப்பதில் ஆர்வமுள்ள உனக்கு என்னுடைய இந்த மங்கல துதி ஏற்றவையாக இருக்கட்டும் என்பது மந்திரம்.மந்திரக் கோடியுடுத்தி என்ற நாச்சியார் திருமொழிப்பாசுரத்தை இங்கே அனுசந்தானம் செய்ய வேண்டும். கூறைப் புடவை உடுத்திக்கொண்டு மணமகளின் தோழியர்கள் சூழ மணமகளும் ஊஞ்சலுக்கு வர வேண்டும். இரு தரப்பிலே இருக்கக்கூடிய மாமன்மார்கள் இருவர் கழுத்திலும் மாலைகளை எடுத்துக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு புடவை வேஷ்டி பதில் மரியாதை செய்யப்படுகிறது. பட்டுப்பாய் விரித்த ஊஞ்சலில் உட்கார வைத்து சில பாடல்களைப் பாடி அவர்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர்.
1. ஊஞ்சல் என்பது முன்னும் பின்னும் போய் வருவது. மேலே போகும், கீழே இறங்கும். வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கையில் ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டு.
2. ஊஞ்சல் ஒரே நிலையில் நிற்காதது. வாழ்க்கையும் அப்படித்தான். ஒரே நிலையில் நிற்காதது.
3. ஊஞ்சல் ஆடும்பொழுது நாம் சந்தோஷப்படுகிறோம். வாழ்க்கையிலும் நாம் சந்தோஷப்பட
வேண்டும்.
4. என்ன ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ஊஞ்சலில் இருவருமாக அமர்ந்து கொண்டு அதனை அனுபவிக்கிறோம். வாழ்க்கையில் எத்தனை இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் அதனை இருவரும் ஒருவருக்குத் துணையா ஒருவர் அனுசரித்து வாழவேண்டும்.
5. ஊஞ்சல் மற்றவர்களால் ஆட்டப்படுகிறது. வாழ்க்கையும் மற்ற சூழ்நிலைகளாலும், ஏற்கனவே நமக்கு விதிக்கப்பட்ட பிராரத்த கர்மாக்களினாலும் ஆட்டுவிக்கப்படுகிறது.இப்படி ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட வைப்பதன் மூலம் வாழ்க்கையின் தத்துவங்கள் புரிய வைக்கப்படுகின்றன.
நாம் அதனை புரிந்து கொள்கிறோமா என்பது வேறு விஷயம். ஊஞ்சலின் தத்துவன் இதுதான்.
(மீதம் அடுத்த இதழில்...)