மதிப்பான வாழ்வைத் தரும் மணக்குள விநாயகர்
பிள்ளையார்பட்டி, ஈச்சனாரி, கணபதி அக்ரஹாரம் இப்படி பல பிள்ளையார் கோயில்கள் இருக்கின்றன, அந்த வரிசையில் புதுவைக்கு புகழ் சேர்க்கும் விநாயகர் ஆலயம் மணக்குள விநாயகர் ஆலயம்.
செல்லும் வழி
புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் கடற்கரை அருகே இந்த ஆலயம் இருக்கிறது. புதுவையில் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து, டெம்போ அல்லது ஆட்டோ மூலம் மிக எளிதாக ஆலயத்தை அடையலாம்.
கோயில் அமைப்பு
8,000 சதுர அடி பரப்பில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அழகான சிறிய ஆலயம். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் என்கிறார்கள். ராஜகோபுரம். உள்ளே பொன் முலாம் பூசப்பட்ட 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட துவஜஸ்தம்பம். இது இந்தக் கோயிலின் சிறப்புக்களில் ஒன்று. முன்னாள் சலவைக் கற்களால் இழைக்கப்பட்ட ஒரு மண்டபம். பிராகாரம் சுற்றிலும் விநாயகரின் உருவங்கள் மிக அழகாக காட்சி தருகின்றன. விநாயகர் வடிவில் தான் எத்தனை வேறுபாடுகள்? எத்தனை பெயர்கள்? பாலகணபதி, வீரசக்தி கணபதி, பிங்கள கணபதி, ஊர்த்துவ கணபதி, சயனகணபதி, சதுர்முக கணபதி, ஹேரம்ப கணபதி, பஞ்சமுக கணபதி. கணபதியின் பல வடிவங்கள் தவிர, சிவனை பூசித்தல், முருகன் வழிபடுதல், முருகர் விநாயகர் உடன் உமையம்மை, இப்படிப்பட்ட ஓவியங்களும் உண்டு. பிராகாரத்தில் விநாயகப் பெருமானுக்கு எழிலான பள்ளியறை ஒன்றும் உண்டு. கண்ணாடி பதிக்கப்பட்ட அறையில் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். பாலவிநாயகர், பாலசுப்பிரமணியர் சண்டேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனியாக சிறிய சந்நதிகள் உள்ளன. விநாயகர் சித்தி, புத்திகளுடன் கிழக்குப் பார்த்து அமர்ந்து இருக்கிறார்.
இதர செய்திகள்
விநாயகரின் திருவுருவம் பிரணவ ஸ்வரூபமாக இருக்கிறது. ஓம்கார மந்திரமே அவர் வடிவம் என்பர். ஐந்து கரங்களும் ஐந்து தொழில்களைக் குறிப்பதாகக் கொள்வர். பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் விநாயகர் குளத்தருகே ஒரு குளம் இருந்தது. மணற்பாங்கான அக்குளத்தில் ஊரெல்லாம் வறண்ட போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்குமாம். நீர் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் புதுவை மக்களுக்கு மட்டுமல்ல புதுவைக்கு வந்து போகும் கப்பல் பயணிகளுக்கும் இந் நீர் பயன்படும். மணக்குள நீர் மக்களுக்கு பயன்பட இவ்விநாயகர் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். இந்தப் பகுதி மணற் குளம் என்று வழங்கப்பட்டது. இந்த ஆலயமும் மணக்குள விநாயகர் ஆலயம் என்று பெயர் பெற்றது. தற்போது இவ்வாலயம் அருகில் எவ்வித மணற்குளமும் இல்லை. அக்காலத்தில் இக்கோயில் அருகாமையில் நெசவாளர் தெரு இருந்தது. காலை இவரை வணங்கி விட்டு தங்கள் தொழிலை துவங்குவார்கள்.
விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.பிரெஞ்சு அரசாங்கத்தின் அதிகாரிகளால் மற்ற ஆலயங்கள் சேதப் படுத்தப்பட்டது போல இவ்வாலயம் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டில் கவர்னராக இருந்த ஒரு பிரெஞ்சு அதிகாரி இவரை கடலில் தூக்கி எறியு மாறு உத்தரவிட்டார். அப்படியே தூக்கிக் கடலில் போட்டனர்.
விநாயகப் பெருமான் ஊர் முக்கிய பிரமுகர்கள் சிலர் கனவில் தோன்றி, தாம் கடலில் இருக்கும் இடத்தை, குறிப்பால் உணர்த்த, மறுநாள் தேடிக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தனர். விநாயகரின் மகிமை யையும், ஊர் மக்கள் இந்த ஆலயத்தின் மீது கொண்ட பக்தியையும் எண்ணி ஐரோப்பியர்கள் மேற்கொண்டு தொந்தரவு தருவதை நிறுத்திக் கொண்டனராம். ஒருசில வெள்ளைக்காரர்களுக்கு இங்குள்ள மக்களைப் போலவே இந்த விநாயகரின் மீதும் அன்பு உண்டு. அவர்கள் இவ்விநாயகர் கோவிலுக்கு வந்து வழிபடவும் செய்தனர். வெள்ளைக் காரர்களையும் தன்பால் பக்தி செலுத்தச் செய்ததால் இவருக்கு வெள் ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் உண்டு.விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அருகே முரட்டாண்டி சித்தர் எனப்படும் தொல்லைகாது சித்தர் சமாதி அடைந்துள்ளார்.சுப்ரமணிய பாரதியார் இவ்விநாயகர் மீது பாடிய பக்தி பாடல் விநாயகர் நான்மணிமாலை என்று அழைக்கப்படுகிறது.
கற்பக விநாயகக் கடவுளே போற்றி
சிற்பர மோனத் தேவன் வாழ்க
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க
படைப்புக்கு இறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத்து ஒளிர்வான்
என்றெல்லாம் இந்த விநாயகர் தம்மைக் கவர்ந்த விதத்தை பாரதி யார் பாடுகிறார். புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் விநாயகரை போற்றிப் பாடாமல் இருந்ததேயில்லை அரவிந்தர், வ வே சு ஐயர் போன்ற தேச பக்தர்களும் இவ் விநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்திருக்கின்றனர். பாண்டிச்சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் ஊருக்கு போகிறார்கள்.தங்க தேர்மணக்குள விநாயகர் கோவில் தங்க தேர் 2006ஆம் ஆண்டு பக்தர்கள் தந்த நன்கொடையால் தங்கத் தேர் செய்யப்பட்டது. ரூபாய் 35 லட்சம் செலவில் சுமார் 7.5 கிலோ தங்கத்தில் தேர் செய்யப்பட்டது. தேரின் உயரம் 10 அடி அகலம் 6 அடி ஆகும்.
ஒவ்வொருஆண்டும் விஜய தசமி அன்று, இந்தத் தங்க தேர் பவனி மேள தாளங்களுடன் நடக்கும். மணக்குள விநாயகர் வீதியில் ஆரம்பித்து நேரு வீதி வழியாக வந்து ராஜா சினிமா தியேட்டர் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் வழியாக வந்து கொசகடை வீதி சென்று அங்கு இருந்து கோவிலை வந்து அடைகிறது.புதுவை நெல்லித்தோப்பு ராமானுஜ செட்டியார் அவர்கள் “மணக்குள விநாயகர் பதிகம்” எழுதி நூலாக வெளியிட்டார்.இவ்விநாயகர் மீது ஏக நம்பிக்கை. எல்லா பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம் வேண்டுவோர், குழந்தை வரம் வேண்டுவோர், வேலை வேண்டுவோர், பரீட்சையில் வெற்றி வேண்டு வோர், இங்கு வந்து வணங்கி செல்கின்றனர்.ஆண்டரங்கம் பிள்ளை. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி போன்ற விழாக்கள் நடைபெறும். ஆவணி - 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் - 10 நாட்கள் திருவிழா இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். சித்திரை மாதத்தில் சிறப்பான திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள்.
தரிசன நேரம்
காலை 5.45 முதல் 12.30 மணி வரை.
மாலை 4.00 முதல் 09.30 மணி வரை.
நேரம் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாற்ற உட்பட்டவை.