தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வில்வம் தந்த மோட்சம்

ஒரு முறை காஞ்சி மகாபெரியவா, ‘தக்ஷிண கயிலாயம்’ எனப்படும் ஸ்ரீ சைல க்ஷேத்திரத்துக்குப் பரிவாரங்களுடன் திவ்ய தரிசன யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை குண்டூர் அடைந்ததும், நகர எல்லையில் ஆச்சார்யாளுக்குப் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பஜனை மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட ஸ்வாமிகள், தனக்கு முன்பாகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் தெலுங்கில் உரை நிகழ்த்தி, அனைவருக்கும் ஆசியும்பிரசாதமும் வழங்கிவிட்டு, யாத்திரையைத் தொடர்ந்தார்.

குண்டூர் எல்லையைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும், தூறல் போட்ட வானம், பெருமழையாகப் பொழிய ஆரம்பித்தது. ஒதுங்க இடமில்லை. மடத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும், உடன் வந்து கொண்டிருந்த பல்லக்கில் ஏறி அமரும்படி ஸ்வாமிகளைப் பிரார்த்தித்தனர். ஆச்சார்யாள் உடன்படவில்லை.“நீங்க அத்தன பேரும் நனஞ்சுண்டே வரச்சே நா மாத்ரம் பல்லக்ல வரணுமா… வேண்டாம்… வேண்டாம். நானும் இப்படியே வரேன்!” என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் ஸ்வாமிகள். கூப்பிடும் தூரத்தில் சிவன் கோயிலொன்று தென்பட்டது. அனைவருடனும் அந்த ஆலயத்துக்கு விஜயம் செய்தார் ஸ்வாமிகள். பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நிகழ்ந்தது.

தரிசனம் முடிந்தபோது மழை முழுமையாகவிட்டது. யாத்திரை தொடர்ந்தது. சுமார் பத்து கிலோ மீட்டர் கடந்ததும், செழிப்பான ஒரு பெரிய கிராமம் தென்பட்டது.அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரிடம் ஊர் எல்லையில் பூர்ண கும்ப மரியாதையுடன் மகாஸ்வாமிகளை வரவேற்றனர். பின், அந்த ஊர் பண்ணையார் ஸ்வாமிகளிடம்;

“எங்க கிராமத்துலே ஸ்வாமிகள் திருப்பாதம் பட்டு, புனிதமாகணும். இங்கே சில நாள் தங்கியிருந்துட்டுப் போகணும். பூஜை புனஸ்காரங்கள் பண்றதுக்கு வசதியா பெரிய மண்டபம் ஒண்ணு இருக்கு. பக்கத்திலேயே சுத்தமான புஷ்கரணியும் இருக்கு.” என்று வேண்டினார். கிராம மக்களும், ஸ்வாமிகளை நமஸ்கரித்தது. அவர்களின் ஆத்மார்த்த பக்தியைப் பார்த்த ஆச்சார்யாள் நெகிழ்ந்தார். இருபத்தோரு நாட்கள் அங்கு தங்கப்போவதாக தெரிவித்தார். அடுத்த நாள் காலையில் அந்தக் கிராமமே மகிழ்ச்சியில் விழாக் கோலம் பூண்டிருந்தது. சத்திரத்தில் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்தன. ஆச்சார்யாள் ஸ்நானத்துக்காக அருகிலிருந்த புஷ்கரணிக்குச் சென்றிருந்தார். அப்போது ஸ்ரீ மடத்தின் அதிகாரி, பூஜை கைங்கர்யம் பண்ணுகின்ற இளைஞர்களிடம் கேட்டார்;

“ஏண்டாப்பா! பூஜைக்கு நிறையா புஷ்பம் ஏற்பாடுபண்ணி வெச்சிருக்கேள். ஆனா, ‘வில்வ’ பத்திரத்தையே காணுமே. இது இல்லாம ஸ்வாமிகள் எப்படி சஹஸ்ர நாமார்ச்சனை பண்ணுவா?” அந்த இளைஞர்கள் திகைத்து நின்றிருந்தனர். அதிகாரி விடவில்லை. “ஏண்டாப்பா. இப்படி பேசாம நின்னுட்டா வில்வ பத்ரம் வந்து சேர்ந்துடுமா? போங்கோ… வாசல்ல போய், கிராமத்து ஜனங்கள்ட்ட, பெரியவா பண்ற சந்திரமௌலீஸ்வர பூஜைக்கு வில்வ பத்திரம் வேணும்னு சொல்லி, மூணு தளத்தோடு பறிச்சு மூங்கில் குடைல போட்டுக் கொண்டுவரச் சொல்லுங்கோ. பெரியவா தங்கியிருக்கிற வரைக்கும் வில்வதளம் தேவைன்னும் சொல்லுங்கோ.

தெலுங்கு தெரிஞ்சவாள வெச்சுண்டு பேசுங்கோ. அப்படியும் தெரியலேன்னா, நம்மகிட்ட ஏற்கெனவே பெரியவா பூஜை பண்ணின வில்வம் இருக்குமே… அதக் கொண்டுபோய் காட்டி, பறிச்சுண்டுவரச் சொல்லுங்கோ!” என்று கூறினார். தெலுங்கு தெரிந்த ஒருவருடன், நிர்மால்ய வில்வ தளங்களுடன் வாசலுக்கு வந்தனர் இளைஞர்கள். அங்கு நின்றிருந்த ஊர் ஜனங்களிடம் நிர்மால்ய வில்வ தளங்களைக் காட்டிய அவர், விஷயத்தைச் சொல்லி, “இன்னும் அரைமணி நேரத்துக்குள் வில்வபத்திரம் வந்தாகணும். உதவிபண்ணுங்கோ!” என்றார்.

``இந்த மாதிரி ஒரு காம்புல மூணு இலையோடு உள்ள மரத்தை நாங்க பார்த்ததே இல்லை!’’ என ஊர்மக்கள் கூறினர். அந்த ஊர் வேத பண்டிதர்களும், ‘`இங்கே வில்வ மரமே கிடையாது’’ என்றனர். ஸ்வாமிகள், ஸ்நானம் முடிந்து வந்தார்கள். நடுக்கூடத்தில் பூஜா சாமான்களெல்லாம் தயாராக இருந்தன. அவற்றை பார்த்த மகா பெரியவா கேட்ட முதல் கேள்வி; “ஏண்டாப்பா! அர்ச்சனைக்கு வில்வம் ஏற்பாடு பண்ணி வெச்சுட்டேளா?” மடத்து அதிகாரி மென்று விழுங்கினார்.“ஏன்… என்ன விஷயம்? வில்வபத்ரம் கெடைக்கலியோ இந்த ஊர்ல…?” என்று கேட்டார் ஆச்சார்யாள். அதிகாரிமெதுவாக,

`‘ஆமாம் பெரியவா. இந்த ஊர்ல வில்வ மரமே இல்லைன்னுன்னு ஊர்க்காராளும், வேதப் பண்டிதாளும் சொல்றா” என்றார். அப்போது காலை மணி 10.30 இருக்கும். ஸ்வாமிகள் தனக்குள் சிரித்துக் கொண்டு வேகமாக சத்திரத்தின் கொல்லைப்புறத்தை நோக்கி நடந்தார். பசுமாட்டுத் தொழுவத்துக்குள் பிரவேசித்தார். அங்கிருந்த கருங்கல் பாறை ஒன்றில் ஏறி அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். ‘பூஜைக்கு வில்வபத்ரம் இல்லாததால இன்னிக்கு ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கும் பெரியவாளுக்கும் பிக்ஷாவந்தனம் நின்னு போயிடுமோ’ என்று கவலைப்பட்டனர், ஸ்ரீ மடத்து முக்கியஸ்தர்கள்.

அதிகாரிக்கு கண்களில் நீர் தளும்பியது. பண்ணையார் காதுக்கும் தகவல் எட்டியது. அவர், தன் ஆட்களை விட்டு வில்வபத்திரத்தை தேடச் சொன்னார். ஏமாற்றமே கிடைத்தது. மணி 11.30 ஆகிவிட்டது. அனைவரும் கவலையுடன் தொழுவத்தருகே நின்றிருந்தனர். பூரண மௌனம். கருங்கல் பாறையில் மகாஸ்வாமிகள், தியானத்தில் வீற்றிருந்த காட்சி, கயிலாய பர்வதத்தில் வீற்றிருக்கும்ஸ்ரீ பரமேஸ்வரனையே நினைவூட்டியது.

திடீரென வாசல்புறத்திலிருந்து, கையில் ஒரு பெரிய கூடையை தலையில் சுமந்து வந்தான் ஸ்ரீ மடத்தைச் சேர்ந்த பக்தன் ஒருவன். அவன் முகத்தில் ஏக சந்தோஷம். கூடையை கூடத்தில் இறக்கினான். என்ன ஆச்சரியம்… அந்தக் கூடை நிறைய வில்வபத்திரம்! அதைப் பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சி. அதே நேரம், தியானம் கலைந்து கீழே இறங்கினார் ஸ்வாமிகள். அதிகாரியை பார்த்து ஸ்வாமிகள் கேட்ட முதல் கேள்வி; “சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு வில்வம் வந்து சேந்துடுத்தோல்லியோ? பேஷ்… உள்ளே போவோம்!” கூடையிலிருந்த வில்வ தளங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்தார், ஸ்வாமிகள். பச்சைப் பசேலென மின்னின அவை. ஆச்சார்யாள்,அதிகாரியிடம்,

“துளிக்கூட இதழ்கள் பின்னமாகாம சிரத்தையா இப்டி யார் பறிச்சுண்டு வந்தா? ‘இந்தப் பிராந்தியத்லயே வில்வமரம் கிடையாதுனு சொன்னாளே… இத எங்கே பறிச்சதுனு கேட்டுத் தெரிஞ்சுண்டேலா?” என்று கேட்டார். காரியஸ்தர் வில்வம் கொண்டுவந்த இளைஞனைத் திரும்பிப் பார்த்தார். ஸ்வாமிகளிடம் அந்த இளைஞன், “பெரியவா… நா யதேச்சையா வாசல் பக்கம் போனேன். கீழண்ட கோடியில பந்தக்கால் கிட்ட இந்தக் கூடை இருந்தது. போய்ப் பார்த்தா முழுக்கமுழுக்க வில்வதளம் பெரியவா!” என்றான். உடனே

பெரியவா, “அது சரி. அங்கே, யார் கொண்டு வந்து வெச்சாறு கேட்டாயா நீ?” என்றுவினவினார்.

“கேட்டேன் பெரியவா. அங்கிருந்த அத்தன பேரும் தெரியாதுனுட்டா…”“அப்டீன்னா யார்தான் கொண்டு வந்து வெச்சிருப்பா?” என்று சிரித்தபடி வினவினார் ஆச்சார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. பூஜை பண்ண வேண்டிய இடத்தை நோக்கி நகர்ந்த ஆச்சார்யாள், புன்னகையோடு திரும்பி, “ஒருவேளை நம்ம சந்திரமௌலீஸ்வரரே கொண்டு வந்து வெச்சிருப்பாரோ?” என்றுகூறி பூஜைக்கு ஆயத்தமானார். பசுமையான அந்த வில்வதளங்களால் ஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு அர்ச்சனை செய்த காட்சி, அனைவரையும் பரவசப்படுத்தியது. பூஜை முடிந்ததும், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை நேரத்தில் தெலுங்கில் ஸ்ரீ மத் ராமாயண உபந்யாஸம் நிகழ்த்தினார் ஆச்சார்யாள். அந்தக் கிராமமே கேட்டு மகிழ்ந்தது. அடுத்த நாள், ஆச்சர்யாள், மடத்தைச் சேர்ந்த சிலருடன் புஷ்கரணிக்குச் சென்றார்.

கொல்லைப்புறத்தில் ஏதோ வேலையில் இருந்த அதிகாரி, முந்தின தினம் வில்வக் கூடையைச் சுமந்து வந்த ஸ்ரீ மடத்து இளைஞனிடம் கேட்டார்; “ஏண்டாப்பா... இன்னிக்கும் நெறய வில்வம் வேணுமே! நீ கைராசிக்காரனா இருக்கே! இன்னிக்கும் பந்தக்கால்கிட்ட யாராவது வில்வம் கொண்டு வந்து வெச்சுட்டுப் போயிருக்காளானு பாரேன்!” உடனே வாசலுக்கு ஓடினான் இளைஞன். என்ன ஆச்சரியம்! முந்தைய நாள் போலவே ஒரு பெரிய ஓலைக் கூடை நிறைய வில்வதளம்! இளைஞனுக்கு சந்தோஷம்.

கூடையுடன் கூடத்துக்கு வந்தவன், அதை இறக்கிவைத்துவிட்டு அதிகாரியிடம், “இன்னிக்கும் அதே எடத்ல கூடை நிறைய வில்வம்! யாரு, எப்போ வெச்சுட்டுப் போனானு தெரியலே!” அதிகாரிக்கு வியப்பு. ‘ஏன் இப்டி ஒருத்தருக்கும் தெரியாம ரகசியமா வந்து வெச்சுட்டுப் போறா’ என எண்ணிக் குழம்பினார். ஆச்சார்யாள் திரும்பினார். கூட்டத்தில் பூஜைக்கு தயாராக வில்வம். அவற்றை நோட்டம் விட்ட ஸ்வாமிகள், பின்புறம் திரும்பி அர்த்தபுஷ்டியுடன் அதிகாரியை பார்த்தார்.

“ஆமாம் பெரியவா… இன்னிக்கும் வாசல்ல அதே இடத்தில் வில்வக் கூடை வெச்சிருந்தது! ஒருத்தருமே தெரியாதுங்கறா!’’ என்றுகூறி ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தார்.

சந்திரமௌலீஸ்வர பூஜையைப் பூர்த்தி செய்தார் ஸ்வாமிகள். பிக்ஷையை முடித்துக் கொண்டு ஏகாந்தமாக அமர்ந்திருந்தபோது, ஸ்ரீ கார்யத்தை அழைத்தார். அவரிடம்,

“நாளக்கி கார்த்தால சுருக்க ஏந்திருந்து நீ ஒரு கார்யம் பண்ணும். கூட இன்னும் யாராயாவது அழைச்சுண்டு வாசப் பக்கம் போ. ஒத்தருக்கும் தெரியாம நின்னு கவனி.

யாரு வில்வக் கூடய வெச்சுட்டுப் போறானு கண்டுபிடி. எங்கிட்ட அழச்சுண்டு வந்துடு… நீ ஒண்ணும் கேக்க வேண்டாம். என்ன புரிஞ்சுதா?” என்று சிரித்தபடி கூறினார். ஸ்ரீ கார்யம், நமஸ்கரித்து விட்டு நகர்ந்தார்.அன்று மாலையும் வழக்கம்போல் ஸ்வாமிகளின் ஸ்ரீ மத் ராமாயண உபந்யாசம் நடந்தது. மொத்த கிராமமுமே திரண்டு வந்து, கேட்டு மகிழ்ந்தது. மூன்றாவது நாள் விடியக்காலை நேரம். அதிகாரி இரண்டு நபர்களுடன் வாசல் பந்தலை ஒட்டியிருந்த ஒரு பெரிய ஆலமரத்து மறைவில் நின்று உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தார்.

மணி 8.30. கீழண்டைப்புறம் சத்திரத்தையொட்டிய மாந்தோப்பிலிருந்து தயங்கியபடி வெளிப்பட்டான் ஒரு சிறுவன், அவன் தலையில் பெரிய காய்ந்த ஓலைக் கூடை. தலையில் கட்டுக் குடுமி. அழுக்கடைந்த வேஷ்டியை மூலக் கச்சமாகக் கட்டியிருந்தான். அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு, ஒரு பந்தக்கால் அருகே கூடையை மெதுவாக இறக்கி வைத்துவிட்டு, மெதுவாக வந்த வழியே திரும்ப முற்பட்டான். ஓடிப்போய் அவன் முன் நின்றார், அதிகாரி. அவரைப் பார்த்ததும் அவனுக்குக் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன. உடனே ஸ்ரீ கார்யத்தின் கால்களில் விழுந்து வணங்கினான், அவன். அவர் கேட்டார்: “இரண்டு நாளா நீதான் இந்த வில்வ கூடைய ஒருத்தருக்கும் தெரியாம வெச்சுட்டுப் போறயா?”`‘ஆமாம்’’ என்றான். உடனே அதிகாரி அவனிடம்;“சரி… சரி… நீ போய் நன்னா குளிச்சுப்டு, நெத்தியிலே என்ன இட்டுப்பியோ அத இட்டுண்டு, மத்யானத்துக்கு மேல பளிச்ன்னு இங்க வா! ஒன்ன பெரிய சாமிகிட்ட (ஆச்சார்யாள்) அழச்சிண்டு போறேன். ஆசீர்வாதம் வாங்கிக்கலாம். என்ன புரியறதா?” என்றார்.

`‘புரிகிறது’’ என்ற பாவனையில் தலையை ஆட்டிவிட்டு ஓடிவிட்டான். ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததை விவரித்தார் அதிகாரி. சந்தோஷத்துடன், “பேஷ்…பேஷ்… அவன் இரண்டு மூணு நாளா பெரிய உபகாரம்னா பண்ணிண்டு வரான். வரட்டும். ஆசீர்வாதம் பண்ணி பிரசாதம் கொடுப்போம்!” என்று கூறிவிட்டு ஸ்நானத்துக்குக் கிளம்பினார். மதியம் 3.00 மணி. அந்தச் சிறுவன் சொன்னபடி வந்து சேர்ந்தான். தயங்கியபடியே முற்றத்துச் சுவர் ஓரம் நின்றிருந்த அவனைக் காட்டி, ஸ்வாமிகளிடம் கூறினார் அதிகாரி. அவனை கிட்டே வரும்படி ஸ்வாமிகள் அழைத்தார். அருகே வந்தவன், சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு, கை கட்டி நின்றான்.

அவனது தோற்றத்தைப் பார்த்த ஆச்சார்யாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. எண்ணெய் தடவி வாரி முடிந்த கட்டுக் குடுமி. மூலக் கச்சமாக வெள்ளை வேஷ்டி கட்டி இருந்தான். நெற்றி, உடம்பில் விபூதிப்பட்டை, பளிச்சென்றிருந்தான். அவனை முற்றத்தில்அமரும்படி சைகை காட்டிச் சொன்னார் ஸ்வாமிகள். அவன் அமரவில்லை.“பேரு என்ன?” என்று ஸ்வாமிகள் தெலுங்கில் கேட்டார். அவன், ``பண்டரிவிட்டலன்” என்று நன்றாக தமிழில் பதில் சொன்னான். உடனே ஆச்சார்யாள் ஆச்சர்யத்தோடு, “பேஷ்… நன்னா தமிழ் பேசறியே நீ!” என்று கேட்டுவிட்டு, “என்ன… என்ன பேரு சொன்னே?” என்று மீண்டும் கேட்டார்.

“பண்டரிவிட்டலன்!” என்று நிறுத்தி நிதானமாகக் கூறினான் சிறுவன்.“தமிழ்ல பேசறியே நீ?” என்று புருவங்களை உயர்த்தினார் ஆச்சார்யாள்.“என் கதையை நீங்க கேளுங்க சாமி…” என்றான்.“பேஷா… சொல்லு… சொல்லு…” என்று அவனை உற்சாகப்படுத்தினார் ஸ்வாமிகள். பண்டரிவிட்டலனும் சொல்ல

ஆரம்பித்தான்...

(மகிமை தொடரும்...)

ரமணி அண்ணா

Related News