தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செழுமையான வாழ்வருளும் செங்காளியம்மன்

ஊர் தோறும் எல்லையில் நின்று, மக்களைக் காப்பாற்றும் பெண் தேவதையே காளியாவாள். அவளே, குடும்பத்தின் குலதெய்வமாக வழி நடத்துவாள். தன் மக்கள் எந்த ஊருக்குச் சென்றாலும், அந்நிய நாட்டுக்கு வேலை நிமித்தமாக சென்றவர்களுக்கும் பாதுகாவலாக, அரனாக துணை நிற்பவள்.

Advertisement

சங்கில் இருந்து தோன்றியது யார்?

பாற்கடலில் இருந்து 16 வகையானப் பொருட்கள் தோன்றின. அவற்றில் ஒன்று சங்கு. இச்சங்கு மகாவிஷ்ணுவின் இடது கையில் இடம் பெற்றுள்ளது. இதனை மங்களப் பொருளாகக் கருதப்படுகிறது. சங்கு இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள். இறை வழிபாட்டிற்கும், சடங்குகளுக்கும் சங்கு பிரதான இடத்தை வகிக்கிறது. தீவினைகள் ஒழிக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே, வலம்புரிச் சங்கை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர் இல்லத்தில்; செல்வ செழிப்பு அதிகரிக்கும். புராணக் காலத்தில் மகாவிஷ்ணுவின் இடது கரத்தில் உள்ள சங்கில் இருந்து ஒரு தேவதை தோன்றினாள். அவளை ``சங்காத்தம்மன்’’ எனப் பெயரிட்டு ஊர் எல்லையைக் காக்கும் தெய்வமாக இருக்கும் படி திருமால் கட்டளையிட்டார்.

செம்புலி வனம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ள கிராமம் செம்புலிவன ஊராகும். ``செம்புலி’’ என்றால் செம்மை உடைய புலிகள் என்பது பொருள். மேலும், செம்புலி மரங்களும் அடர்ந்து கிடந்தன. காளிக்கு வாகனம் புலி. இவ்வனத்தில் வீரமுடைய புலிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. இங்கு, சங்காத்தம்மன் அழகிய பாறையில் சுயம்பு வடிவில் தோன்றினாள்.

சோழ மன்னனுக்கு காட்சி அளித்தல்

முற்காலத்தில் சோழ மன்னன் ஒருவன், வட நாட்டின் மீது படை எடுத்து செல்லும் போது செம்புலி வனக் காட்டைக் கடந்து செல்ல வேண்டும். இரவு ஆனது. தனது படைவீரர்களுடன் அங்கே தங்கினார். அப்பொழுது சொப்பனத்தில் ஒரு அசரீரி தோன்றியது.“மன்னா செம்புலிகள் வாழும் ஆபத்தான இடத்தில் வந்திருக்கிறீர்கள். உங்களைக் காப்பாற்றுவது என்னுடைய கடமையாகும்” என்றுகூறி ஒரு மரத்தின் அடியில் அந்தப் பிரகாசமான ஒளி தோன்றி மறைந்தது. திடுக்கிட்டு எழுந்த மன்னன், ஒளி தோன்றிய மரத்தைத் தேடினார். அரசமரம் ஒன்று தென்பட்டது. அம்மரத்தின் அடியில் விஷ்ணுவின் சங்கு காணப்பட்டது. அக்காட்சியைக் கண்டு வியந்த மன்னன்; தன் படை வீரர்களும் சேர்ந்து காணுகின்ற பொழுது தங்களைச் சுற்றிலும் புலிகள் சூழ்ந்து இருப்பதை அறிந்தனர்.

“தாயே.. சங்காத்தம்மா.. எங்களைக் காப்பாற்று, உனக்கு நான் இங்கே கோயிலைக் கட்டித் தருகிறேன். கருணை காட்டு தாயே..” என்று கதறி அழுதார். அடுத்த நொடி அங்கிருந்த செம்புலிகள் மறைந்தன. நிம்மதியுடன் மன்னன் வடநாட்டுக்குச் சென்று போர்ப் புரிந்து வெற்றி வாகைச் சூடி திரும்பினார். தேவ சிற்பிக்கு இணையான வரைத் தேடி, கனவில் கண்ட செம்புலிவன சங்காத்தம்மனை செதுக்கக் கட்டளையிட்டார். சிற்பியும், தேவியின் அருளால் அஷ்டபுஜங்களுடன் கூடிய எழில் மிகு வடிவத்தில் ஓர் அற்புதமான சிலையைச் செதுக்கினார்.பின்பு சோழமன்னர், சங்காத்தம்மனுக்கு சிறிய கோயிலைக் கட்டி சிலையைப் பிரதிஷ்டைச் செய்தார். சோழ மன்னன் கோயில் கட்டியதால் இப்பகுதிக்கு “சோழ வரம்” எனப் பெயர் பெற்றது.

சங்காத்தம்மனை கடத்திச் சென்றது ஏன்?

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, செம்புலிவனத்தில் அருளாட்சி புரிந்து வந்த சங்காத்தம்மனை கிராமத்து மக்கள் வணங்கி வந்தனர். அருகே இருந்த மற்ற கிராமத்து மக்களும், அன்னையின் அழகையும் அருளையும் கண்டு அவர்கள் மனம் மெய்மறந்து கிறுகிறுத்தனர். அந்த நேரத்தில், அக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு பெருவாரியாக அம்மை நோயால் பீடிக்கப்பட்டு கலக்க முற்றனர். அம்மனுக்கு பூஜை செய்வதற்கும் வழிபாடு நடத்துவதற்கும் விக்ரகம் இல்லாமல் தடுமாறினர்.

தங்கள் ஊருக்கு ஒரு தெய்வம் வேண்டும் என ஊர் தலைவர்கள் கூடிப் பேசினார். அப்பொழுது ஒரு பெரியவர் எழுந்து நின்று செம்புலிவனத்தில் இருக்கும் சங்காத்தம்மனை நம் எல்லைக்கு கொண்டு வந்தால், நம் கிராம மக்கள் துயரங்கள் நீங்கிவிடும். நாம் அவளுக்கு நித்தியம் பூஜைகள் செய்யலாம். பொங்கல் வைக்கலாம். எனவே நாம் அனைவரும் ஒன்றுகூடி அவளை கடத்திக் கொண்டு வரலாம் எனத் திட்டமிட்டனர்.

நித்திரையில் தோன்றியவள்

ஒரு நாள் இரவு நடுநிசியில், கிராமத்து மக்கள் 151 மாட்டு வண்டிகள் பூட்டிக் கொண்டு செம்புலி வனத்திற்குள் நுழைந்தனர். அன்னை விழித்திருந்து எல்லையைக் காக்கும் நேரத்திலே, மாட்டு வண்டிகளில் வந்த அத்தனை பேரும் தீப்பந்தத்துடன் நின்றனர். சிலர் அன்னையின் அருகே நெருங்கினர். அன்னையின் திருநாமத்தை உச்சரித்தவாரே பக்குவமாக அவளை தூக்கி ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி வைத்து, மிக மகிழ்ச்சியாக மக்கள் ஊர் திரும்பினர்.

சங்காத்தம்மன் மனம் வலித்தது. தன் எல்லையைவிட்டு தன் மக்களைவிட்டு வெளியே செல்லப் போகிறோமே என்ற வருத்தத்தில் என்ன செய்வது எனச் சிந்தித்தாள் போலும், சோழ மன்னனுக்கு உறக்கத்தில் அசரீரியாக தோன்றியது போலவே, அவ்வூர் தலைவரின் நித்திரையில் சென்று,``நான் உங்களை எல்லாம் விட்டு எல்லையைக் கடந்து செல்ல போகிறேன். இது, எதுவும் அறியாமல் நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் காப்பாற்று.

நான் 51வது மாட்டு வண்டியில் உள்ளேன். என்னைமீட்டெடு’’ எனக் கட்டளை இட்டாள். பதறி எழுந்த தலைவர் தன் இல்லத்தை விட்டு மண் மேட்டை ஏறி நின்று பார்த்தார். அன்னை கூறியது போல மாட்டு வண்டிகள் தீப்பந்தத்துடன் செல்வதைக் கண்டார். உடனே நித்திரையில் இருந்த ஊர் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டிக் கொண்டு மாட்டு வண்டிகள் முன்நின்றனர்.

அவர்கள் தந்திரமாக; “தாங்கள் கிராம தேவதையை தரிசித்து வருகிறோம்” எனக் கூறினர். செம்புலிவன மக்கள், பக்கத்து ஊரார் கூறியதைச் செவி சாய்க்காமல் 51வது எண்ணில் உள்ள மாட்டு வண்டியை மட்டும் அனைவரும் சூழ்ந்து நின்றனர். அதில் உள்ள சங்காத்தம்மனை மீட்டெடுத்து மீண்டும் தங்கள் கோயிலில் வைத்தனர். களவாட வந்த கிராமத்து மக்களிடம்;“உங்கள் கிராமத்து மக்கள் குறைகளை அம்மன் கோயிலில் வந்து வணங்கி நேர்த்திக் கடன் செலுத்தலாம். நீங்கள் கடத்தி எடுத்துச் செல்வதை அன்னை நித்திரையில் வந்து கூறியதால், நாங்கள் மீட்டெடுக்க வந்தோம். அவள் அருளை அறிந்து கொள்ளுங்கள்” என அறிவுரைகூறி அனுப்பி வைத்தனர்.

சங்காத்தம்மன் திருவடிவம்

சோழன் மன்னன் வடநாட்டுக்கு சென்று போர்ப் புரிந்து திரும்பிய போது, மன்னனுக்கு மீண்டும் அம்மன் காட்சி கொடுத்தாள். எவ்வாறு எனில், உக்கிரமான தோற்றத்திலும், சாந்தமான முகத்திலும், கோரை பற்கள் கொண்டு, தலையில் நெருப்பு ஜ்வாலையுடன், இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து இருப்பது போன்று தரிசனம் தந்தாள். இத்தோற்றம் வேறு எங்கும் காண இயலாது.

புஜங்கள்

``அஷ்டம்’’ என்றால் எட்டு என்பதாகும். இவள் எட்டு திக்கு திசையிலும் மக்களைக் காக்கும் சக்தியானவள். வலபுறம் மேற்கரங்கள்: மேல் உயர்ந்த கரமும், கத்தி உடனும்,கீழ்கரங்கள்: பிரம்பு, மணி ஆகியவற்றை வைத்திருக்கிறாள்.இடப்புற மேற்கரங்கள்: மேல் உயர்ந்த கரம் கேடயம்.

கீழ் புறகரங்கள்: தீக்கிண்ணம் மனித கபாலம். மற்றும் சூலாயுதம் தாங்கி இருக்கிறாள்.

விசித்திர சம்ஹார கோலம்

எங்குமே, அன்னை இடது கால் மடித்து வலது கால் அசுரன் மீது பதித்திருப்பது வழக்கம். ஆனால், சங்காத்தம்மன் இரண்டு கால்களும் அசுரனின் மீது வைத்து இருப்பாள். வலது கால் அசுரனின் தலைமீதும், இடது கால் அசுரனின் பாதத்தின் மீதும் வைத்திருப்பது அபூர்வமான காட்சியாகும். இத்தகைய அரிய காட்சியை ``சம்ஹார கோலம்’’ என்று கூறுவர்.

பரிவார தெய்வங்கள்

ராஜ கோபுரத்தின் வழியாக கோயிலுக்குள் நுழைந்தால், சங்காத்தம்மாள் நேரே காட்சி தருவாள். அவருக்கு வலது புறத்தில் விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். அவருக்கு இடது புறத்தில் வள்ளி தெய்வயானையுடன் முத்து குமாரசுவாமி காட்சி தருகிறார். அன்னையை சுற்றிலும் சாமுண்டீஸ்வரி, புவனேஸ்வரி, பிரம்மேஸ்வரி, நாராயணி, துர்க்கை அம்மன் முதலிய பரிவார தெய்வங்களும் அமர்ந்து அருளாட்சி தருகின்றனர்.

செங்காளியம்மன்

‘சங்காத்தம்மன்’ என்ற பெயர் காலப் போக்கில் மருவி ``செம்புலிவன செங்காளியம்மன்’’ என்று அழைத்தார்.

வாகனங்களைக் காப்பவள்

சோழவரச் சாலையில் செல்லும் வண்டிகள் எதுவாக இருந்தாலும், இக்கோயிலில் எழுந்தருளிய அன்னையை வணங்கி வேண்டிய பின்னரே வாகனங்களை ஓட்டிச் செல்வார்கள் இதனால் அவர்களுக்கு வரும் ஆபத்தைத் தடுத்து, விபத்து ஏற்படாமல் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் உண்டு. உண்டியல் காணிக்கையும் செலுத்துவர். புதியதாக வாகனம் வாங்குபவர்களும் ஆலயத்திற்கு வந்து பூஜை செய்த பின்னரே வாகனத்தை ஓட்டுவார்.

ஒன்பது வார எலுமிச்சை கனி

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், உடல் ரீதியான நோய்கள், திருமணத் தடை, தொழில் அபிவிருத்தி, வீடு கட்டுவதற்கு, அன்னையிடம் வேண்டிச் சென்றால் நிச்சயம் கைக்கூடும். மாங்காட்டு அம்மன் கோயிலில் கனியை மாற்றுவது போல, இங்கும் செங்காளியம்மனை வணங்கி அரளிப் பூக்களோடு 9 வாரங்கள் தொடர்ச்சியாக எலுமிச்சை கனியை மாற்றினால், எண்ணியது திண்ணியமாக முடியும் என்பது ஆன்றோர்கள் நம்பிக்கை. மன உறுதியோடும் வழிபாடு செய்ய வேண்டும். பரணி நட்சத்திரத்திற்கு உகந்த ஆலயம்.

திருவிழாக்கள்

இந்த ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி தினம் அன்று திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெறும். பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளாசி பெறுவர். சித்திரை வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம், நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

ஆடிகூழ்

ஆடி மாதத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் கூழ் வார்த்தல் சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் அன்போடு கூழை வாங்கி குடிப்பார்கள். பக்தர்கள் பொங்கல் வைப்பதற்குரிய அடுப்புகள், தண்ணீர் வசதிகள் இங்கு உள்ளது.

நடைதிறந்திருக்கும் நேரம்: காலை 7.00 மணியில் இருந்து நண்பகல் 12.00 மணி வரையும், மாலை 4:30 மணியில் இருந்து 8.00 மணி வரை பக்தர்கள் அன்னையை தரிசனம் செய்யலாம்.

வழித்தடம்: சென்னை கோயம்பேடு பாரிமுனை செங்குன்றம் பேருந்துகள் சோழவரம் செல்லும். அனைத்து பேருந்துகளும் செங்காளம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும்.

பொன்முகரியன்

 

Advertisement

Related News