தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வரலட்சுமி விரதமும்... கிருஷ்ணஜெயந்தியும்

வரலட்சுமி விரதம் -8-8-2025 | கிருஷ்ணஜெயந்தி-16-8-2025

1. முன்னுரை

நம்முடைய வீட்டில் மகாலட்சுமியின் அருளாட்சி இருக்க வேண்டும் என்று தானே எல்லோரும் நினைப்போம். அப்படி அருளாட்சி தருவதற்காக அவளே ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து, அன்று நம்முடைய இல்லத்திலே வந்து தங்கி, நம்முடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்கின்றாள். அந்த நாள்தான் ``வரலட்சுமி விரதநாள்’’. அந்த நாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி வருகிறது. மகாலட்சுமி வந்துவிட்டால் மகாலட்சுமியைத் தேடி கண்ணன் வந்து விடுவானல்லவா. அந்தக் கண்ணன் நம்முடைய வீட்டுக்கு வருகின்ற நாள்தான் ``கிருஷ்ண

ஜெயந்தி’’. கிருஷ்ணஜெயந்தி, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி, பெருமாளுக்குரிய சனிக் கிழமை வருகிறது. இந்த இரண்டு பண்டிகைகளின் பின்புலத்தை, கொண்டாடும் விதத்தை சிறப்புக்களை, இந்த இதழ் உங்கள் முன் முப்பது முத்துக்களாக வைக்கிறது.

2. சுக்கிரனும் சந்திரனும்

நம்முடைய சமய வழிபாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷமான நாள்கள் உண்டு. சிவனுக்கு சிவராத்திரி மற்றும் பிரதோஷம், கண்ணனுக்கு ஏகாதசி, அம்பாளுக்கு வெள்ளிக் கிழமையும் கௌரி விரதங்களும், பிள்ளையாருக்கு சதுர்த்தி, முருகனுக்கு சஷ்டி, நரசிம்மருக்கு சுவாதி, என ஒவ்வொரு தெய்வத்துக்கும் சிறப்பான நாள்கள் உண்டு, விழாக்கள் உண்டு, மகாலட்சுமிக்கு அப்படி வரிசையாக பல நாள்கள் கொடுத்திருக்கிறார்கள். இது தவிர ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மகாலட்சுமிக்கு உரிய நாள்தான். பெரும்பாலான கோயில்களில் வெள்ளிக் கிழமைகளில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்று உள் பிரகார புறப்பாடு நடைபெறும். சுக்ரவாரம் என்பது மகாலட்சுமிக்கு உரிய நாள். பொதுவாக கிரகங்களில் சந்திரனை அம்பாளுக்கும் சுக்கிரனை

மகாலட்சுமிக்கும் சொல்வார்கள்.

3. மகாலட்சுமிக்கு இத்தனை விரதங்களா?

ஒரு ஆண்டில் மகாலட்சுமிக்கு தனிப்பட்ட முறையில் உகந்த விரத நாள்கள் இருக்கின்றன. ஆனி மாதத்தில் அமிர்த லட்சுமி விரதம், ஆடியில் திருவாடிப்பூரம், வரலட்சுமி விரதம், ஆவணியில் கஜலட்சுமி விரதம், புரட்டாசியில் கௌமதி ஜாகர விரதம் மற்றும் ராதா ஜெயந்தி, ஐப்பசியில் லட்சுமி குபேர பூஜை மற்றும் துளசி விவாகம், கார்த்திகையில் லட்சுமி பிரபோதன தினம், தையில் வசந்த பஞ்சமி, பங்குனியில் ஸ்ரீ லட்சுமி பஞ்சமி மற்றும் பங்குனி உத்தரம் என வரிசையாகச் சொல்லலாம். இந்த நாள்களில் வீட்டில் கலசம் வைத்து லட்சுமி பூஜை செய்வார்கள் குறைந்தபட்சம் லட்சுமி படத்திற்கு முன் ஒரு விளக்கேற்றி வைப்பார்கள். பெண்கள் அமர்ந்து வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற லட்சுமி ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வார்கள்.

4. பதினாறு பேறுகளையும் பெறலாம்

இது தவிர, மகாலட்சுமிக்கு தொடர் பூஜை தினங்கள் என்று ஒரு வரிசை உண்டு. மகாலட்சுமி விரதம் என்ற விரதத்தை ஆவணி மாதம் 15 ஆம் தேதி ஆரம்பித்து, ஆவணி மாதம் 29-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 15 நாட்கள் செய்வார்கள். இந்த நாட்களில் மகாலட்சுமிக்கு கலசம் வைத்து பூஜை செய்து விரதமிருந்து பகலில் இனிப்புடன் அன்ன பிரசாதம் செய்து தினசரி ஒரு சுமங்கலிக்கு மங்கலப் பொருள்களோடு அன்னம் அளித்து சுமங்கலி பூஜை செய்வார்கள். இப்படிச் செய்வதால், 16 வகை செல்வங்களையும் மகாலட்சுமி அள்ளி அள்ளித் தருவாள். கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நெல், நன்மக்கள், பொன், நல்லூழ், அறிவு, அழகு, நுகர்ச்சி, வாழ்நாள், இளமை, பொறுமை, துணிவு, நோயின்மை ஆகிய 16 பேறுகளையும் இந்தப் பூஜையின் மூலம் குறைவில்லாமல் பெறலாம்.

5. அகண்ட தீப பூஜை

கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை லட்சுமி விரதம் என்று இருப்பார்கள். இதுவும் தொடர் விரதம்தான். தினசரி லட்சுமி பூஜையை காலையிலும் மாலையிலும் செய்ய இழந்த செல்வமும் இழந்த பொருள்களும் இழந்த பதவிகளும் வாழ்க்கையும் திரும்ப கிடைக்கும் என்பார்கள். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் பழையபடி அந்தத் தொழில் முன்னேற்றமாக நடக்க இந்த விரதத்தைக் கடைப் பிடிப்பார்கள். இது தவிர, ஐப்பசி மாதம் ஐந்தாம் தேதி ஆரம்பித்து கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி வரை தொடர்ச்சியாக 29 நாட்கள் அணையா தீபம் வைத்து அகண்ட தீப பூஜை செய்வதும் உண்டு. இதனால் லட்சுமியின் அருள் பெற்ற குபேரனின் அருள் கிடைத்து நிறைந்த செல்வம் பெறலாம்.

6. மதன துவாதசி விரதம்

புரட்டாசி மாதம் 18-ஆம் தேதி ஆரம்பித்து ஐப்பசி மாதம் 16 ஆம் தேதி வரை 30 நாட்கள் மதன துவாதசி விரதம் என்று இருப்பார்கள். இதுவும் மகாலட்சுமிக்கு உரிய விரதம் தான். இதில் தினசரி துளசி லட்சுமியையும் கிருஷ்ண பகவானையும் சேர்த்து வழிபட வேண்டும். இதனால் பாவங்கள் நீங்கும். பெண்களுக்குத் திருமணத் தடை விலகும். தீர்க்க சுமங்கலியாக மகிழ்ச்சியாக

வாழ்வார்கள்.

7. எப்படி நாள் நிர்ணயம் செய்வது?

மகாலட்சுமிக்கு உரிய விரதங்கள் இத்தனை இருந்தாலும், தலையாய விரதம் வரலட்சுமி விரதம். வரலட்சுமி என்ற திருநாமமே ``வரம் தரும் லட்சுமி’’ என்று பொருளாகிறது. அவள் நம்முடைய இல்லத்திற்கு நாம் அழைக்க வந்து வரம் தருகிறாள் என்பதுதான் இந்தப் பண்டிகையின் சூட்சுமமான விஷயம். வரலட்சுமி விரதத்தை பண்டிகை என்று சொல்லலாமா என்றால் சொல்லலாம். காரணம், இது குடும்பத்தோடு குதூகலமாகக் கொண்டாடும் பண்டிகை. மகாலட்சுமி நம் வீட்டுக்கு வந்து தங்குகிறாள் என்றால் மகிழ்ச்சி தங்குகிறது என்று பொருள்.

மகிழ்ச்சி என்பது பண்டிகை, கொண்டாட்டம் தானே. பொதுவாக ஆடி மாத அமாவாசை முடிந்தவுடன் ஆவணி மாதம் பிறந்து விட்டதாகப் பொருள். இதற்கு சாந்திரமான முறை என்று கணக்கு. சாந்திரமான முறையில் ஆவணி மாதத்திற்கு சிரவண மாதம் என்பார்கள். இந்த ஆவணி மாதத்தின் பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம்.

8. ஆணவம் தரும் செல்வம்

இந்த விரதம் எப்படித் தோன்றியது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி சௌராஷ்ட்ர நாடு என்று ஒரு நாடு உண்டு. அந்த நாட்டின் ராணி சுசந்திர தேவி. அவள் பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் அளவற்ற செல்வத்தைப் பெற்று இருந்தாள். இப்படிப் பிறக்கும்போதே உழைப்பில்லாமல் அளவற்ற செல்வம் பெறுகின்ற பொழுது மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். காரணம் அந்த செல்வம் புண்ணியத்தினால் வந்தது.

ஆனால், அதை மகாலட்சுமியின் பிரசாதம், பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் வந்தது என்று நினைக்காமல், தவறாகப் பயன்படுத்தினால், அந்த செல்வம் ஆணவத்தைத் தரும், ஆணவம் வந்துவிட்டால் தகாத காரியத்தைச் செய்ய வைக்கும். தகாத காரியம் செய்தால், பாவம் மூட்டைகள் போல் சேரும். பாவம் மூட்டைகள் போல் சேர்ந்துவிட்டால், ஜென்ம சாபல்யம் இல்லாமல் படுகுழியில் விழுந்துவிட நேரும்.

9. செல்வமும் நெருப்பும்

செல்வம் நெருப்பு போல. அது அடுப்பையும் எரிக்கும். வீட்டையும் எரிக்கும். அதைக் கையாள்வதில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும். அதை முறையாகப் பயன்படுத்தினால் அதைவிட புண்ணியம் வேறு இல்லை. இதை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் சொல்லுகின்றார். ஏய்ந்த பெரும் செல்வந்தரால் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே என்கிறார். அப்படி இல்லாது தாறுமாறாகச் செல்வத்தைப் பயன்படுத்தினால் செல்வமே பெரு நெருப்பாய் என்று இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் பாடுவதைப் போல அழித்துவிடும்.

இதை முக்கியமாக உணர வேண்டும். ஆனால், ராணி உணரவில்லை. தன்னுடைய செல்வம் இறையருளால் வந்ததல்ல என்ற கர்வம் அவளுக்கு இருந்தது. அதனால் அடாதன செய்தாள். இதனால் பூர்வ புண்ணிய பலன் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து முற்றிலுமாக நீங்கியது. பூர்வ புண்ணியம் நீங்கிய போது அதன் காரணமாக வந்த செல்வமும் நீங்கியது. அவள் மிக மிக ஏழையானாள்.

10. மகாலட்சுமி மகளுக்குச் சொன்ன அறிவுரை

சுசந்திர தேவிக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு சாருமதி என்று பெயர். அவள் மகாலட்சுமியின் மிகச் சிறந்த பக்தை. வீட்டில் விளக்கு ஏற்றாமல் எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டாள். சதா சர்வ காலமும் மகாலட்சுமியின் ஸ்தோத்திரம் அவளுடைய நாவில் நடமாடிக் கொண்டே இருக்கும். அவள் தன் தாயின் நிலையை நினைத்து வருந்தினாள். மகாலட்சுமியிடம் பிராத்தனை செய்தாள்.

அவள் கனவில் தோன்றிய மகாலட்சுமி, வரலட்சுமி விரத நோன்பு இருந்தால், இந்த தோஷங்கள் தீரும் என்று சொல்லி, வரலட்சுமி நோன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், எடுத்துரைத்தாள். தன்னுடைய தாய்க்காக சாருமதி மிக மிக சிரத்தையோடு வரலட்சுமி விரதம் இருந்ததைக் கண்டு, தாயும் மனம் திருந்தி, மகளோடு சேர்ந்து வரலட்சுமி நோன்பை கடை பிடித்தாள். கருணைக் கடலான மகாலட்சுமித் தாயார் அவளுடைய நோன்புக்கு இரங்கி, அவள் செய்த தவறுகளை மன்னித்து, பழையபடி அவளை மிகப்பெரிய செல்வ சீமாட்டியாக மாற்றினாள்.

11. சித்திரநேமி இருந்த விரதம்

சித்திரநேமி என்பவள் தேவர்கள் உலகத்தில் வசித்தவள். தேவர்களுக்கு நீதி வழங்கும் தேவதையாக இருந்ததாக புராணங்களில் உண்டு. அவள் ஒரு முறை பராசக்தியின் கோபத்திற்கு ஆளானாள். அந்த சாபத்தால் அவளை குஷ்டரோகம் அண்டியது. படாத கஷ்டம் பட்டாள். காட்டில் திரிந்த அவள் தனக்கு எப்பொழுது சாப விமோசனம் கிடைக்கும் என்று காத்திருந்தாள். அப்பொழுது தேவகன்னியர்கள் சிலர் வரலட்சுமி விரதத்திற்குத் தயாரானதைக் கண்டு விசாரித்தாள்.

வரலட்சுமி விரதத்தின் மகிமையை அவர்கள் எடுத்துரைத்தார்கள். அவர்கள் விரதம் இருக்கும் பொழுது சித்திரநேமியும் சேர்ந்து அவர்களுக்கு உதவி, அந்த விரதத்தில் கலந்துகொண்டாள். நோன்பு சரடு அணிந்து கொண்டாள். நோன்பு சரடு கட்டிய மறுகணமே அவனுடைய குஷ்ட ரோகம் நீங்கியது. அவள் தன்னுடைய கௌரவத்தை அடைந்தாள். செல்வத்தையும் கௌரவத்தையும் அளிப்பதோடு, எத்தகைய தோஷத்தையும் நீக்குவது வரலட்சுமி விரதம் என்பது விளங்குகின்றது. வரலட்சுமி விரத பலனாக தீராத சாபமும் நோயும் தீர்ந்து பூரண ஆரோக்கியமும் செல்வமும் சேரும்.

12. எப்படி விரதம் இருப்பது?

வரலட்சுமி விரதம் மிக எளிய விரதம். முதல் நாள் அதாவது வியாழக்கிழமை (வெள்ளி அன்று வீட்டை துடைப்பதோ, விளக்கு முதலிய பூஜை பொருட்களைத் துலக்குவதோ கிடையாது) வீட்டை நன்றாகக் கழுவித் துடைத்து, தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். நிலை வாசல் தொடங்கி, எல்லா வாசல் கதவு நிலைகளிலும், மஞ்சளும் குங்குமமும் வைக்க வேண்டும். பூஜை அறையை பளிங்கு போல் சுத்தப்படுத்த வேண்டும். சுவாமி படங்களையும் நன்கு துடைக்க வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்கள் சாற்றி அழகு படுத்த வேண்டும். பூஜைக்கான இடத்தை பசுஞ் சாணத்தால் (அன்று ஒரு நாள் மட்டுமாவது) மெழுக வேண்டும். அப்படிச் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாகத் தூய்மை செய்யலாம். ஆனால், எங்கும் குப்பை

கூளங்கள் இருக்கக் கூடாது.

13. கலசத்தில் மகாலட்சுமி

கலசம், குத்து விளக்கு வைப்பதற்கு தனித் தனி பலகைகளைத் தயார் செய்யுங்கள். குத்து விளக்கை எக்காரணத்தை முன்னிட்டு வெறும் தரையில் வைக்கக் கூடாது. குத்து விளக்குக்கு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூச்சரம் சுற்றி அழகு படுத்தவும். நல்லெண்ணையை நன்கு ஊற்றி பஞ்சு திரியைப் போடவும். வரலட்சுமி பூஜை அன்று குத்துவிளக்கின் ஐந்து முகத்தையும் ஏற்றுவதோடு ஒரு தனி அகல் விளக்கில் பசு நெய்விட்டு ஏற்றி வைப்பது மிகச் சிறந்தது. விளக்கு ஏற்றி விட்டாலே மங்கலகரமான மகாலட்சுமி அந்த இடத்தில் தோன்றிவிட்டாள் என்று பொருள். தீபத்தில் மகாலட்சுமி நித்யவாசம் செய்கிறாள் என்று பாகதேய வீட்டின் எந்த அறையிலும் அன்று இருள் இருக்கக் கூடாது. எல்லா விதமான ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.

14. துளசி மாடம்

துளசி மாடம் இருந்தால், வரலட்சுமி பூஜை தினத்தன்று துளசி மாடத்தையும் தூய்மையாகத் துடைக்க வேண்டும். பழைய பூக்களை எல்லாம் எடுத்துவிட்டு, மாடத்தில் படிந்து இருக்கும் எண்ணெய்க் கறைகளைத் துடைத்து, சுத்தப்படுத்தவும். அங்கும் கோலம் போட வேண்டும். துளசி மாடம் என்பது பகவான் கண்ணனுக்கு விருப்பமான இடம். எங்கே துளசியின் நறுமணம் வந்தாலும் அங்கே பகவான் கண்ணன் இருப்பான். கண்ணன் துளசி மாடத்தைத் தேடி வருவதால், அந்த பகவானோடு மகாலட்சுமித் தாயாரும் வந்து விடுவாள் என்பதால் துளசி மாட பூஜை என்பது வரலட்சுமி பூஜை அங்கமாகச் செய்ய வேண்டும்.

15. விஷ்ணுவையும் பூஜிக்க வேண்டும்?

மகாலட்சுமி பூஜை என்பது மகாவிஷ்ணுவின் பூஜையும் சேர்ந்ததுதான். பகவானும் தாயாரும் பிரிக்க முடியாதபடி இருக்கிறவர்கள். எந்த ஸ்தோத்திரத்திலும் பகவானுடைய திருநாமத்தோடு தாயாரின் திருநாமம் வந்துவிடும். நாம் பெற்றோரை வணங்கும்போது, தாய் தந்தையை தனித் தனியாக வணங்குவது கிடையாது, இருவரையும் சேர்த்து நிற்க வைத்துத்தான் வணங்குகின்றோம். அதுதான் சிறப்பு. பெற்றோர் என்கிற பதமே தனியாக அப்பாவையோ அம்மாவையோ குறிப்பிடாது. இருவரையும் இணைத்துத்தான் குறிப்பிடும். அதுபோல், என்றென்றும் நமக்கு மாதா பிதாக்களாக மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் இருப்பதால், இருவரையும் இணைத்துத்தான் பூஜை செய்ய வேண்டும்.

16. தீர்த்தத்தில் மஹாலட்சுமி

ஒரு தூய்மையான கலசத்தில் (வெள்ளி, செம்பு, பித்தளை) தூய்மையான நீரை நிரப்பி, அதில் வாசனைப் பொருட்களைப் போட்டுத் தயார் செய்யவும். நீரை நிரப்பி ஆவாஹனம் செய்யும் பொழுது மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும், ‘‘இருவராய் வந்தார்; என் முன்னே நின்றார்’’ என்பது போல வந்து அமர்ந்து விடுவார்கள். கலசத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து, பூச்சரத்தைச் சுற்றி அல்லது நூலைச் சுற்றி, அலங்கரித்து, மாவிலை வைத்து அதில், தேங்காயை வைக்க வேண்டும். மனைப்பலகையில், ஒரு இலையில் நெல்லை பரப்பி, அதன் மேல் இன்னொரு இலை வைத்து பச்சரிசியைப் பரப்பி, ஓம் அல்லது ஸ்ரீ: என்ற அட்சரத்தை, வலது கை சுட்டு விரலால் எழுதி, கலசத்தை வைக்கலாம். நெல் மணிகள் இல்லை என்று சொன்னால், நுனி வாழை இலையில் பச்சரிசியை மட்டும் பரப்பி, கலசத்தை வைத்தால் போதுமானது.

17. தேங்காயில் மகாலட்சுமி முகம்

சிலர் தேங்காயில் முன் மட்டையை எடுத்து, அதனை நன்கு வழு வழுவாக்கி, மஞ்சளைத் தடவி, அதில் திருமகளின் முகத்தை வரைந்து, கிரீடம் சூட்டி, (கிரீடத்தை மலர்களாலும் சூட்டலாம்) ஆபரணங்களை அணிவித்து, கலசத்தின் கழுத்தில் இருந்து புதுப்பட்டுப் பாவாடை அல்லது புடவையை, கொசுவம் வைத்து அணிவித்து, அலங்கரிப்பார்கள். இதைச் செய்யும் போது மகாலட்சுமியின் ஸ்தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். இப்படி அலங்கரிப்பதற்கென்று அலங்காரப் பொருட்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. மலிவாகவும் கிடைக்கின்றன. இதில் கை நுணுக்கமும் ஆர்வமும்தான் முக்கியம்.

18. திருமகள் ஆவாஹனம்

தாயாரின் முகத்தை வரைவதற்குப் பதிலாக, வெள்ளியிலும், தங்கமுலாம் பூசப்பட்டும் கடைகளில் கிடைக்கும் தாயாரின் முகங்களை வைத்து அலங்கரிப்பார்கள். அதற்கு உபகரணமாக அழகான கிரீடங்கள், மாலைகள், அணிகலன்கள் விதம்விதமாகக் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் போது, தனிக்கலசம் வைத்து நீர் நிரப்பி, திருமகளை ஆவாகனம் செய்ய வேண்டும். நீரில் இருந்து அதாவது கும்பத்திலிருந்து பிம்பத்திற்கு மாற்றி, பூஜை முடிந்தவுடன் பிம்பத்தில் இருந்து கும்பத்திற்கு மாற்றி புனர்பூஜை எனப்படும் பூஜை செய்து யதாஸ்தானம் செய்ய வேண்டும்.

19. முதல் நாள் மகாலட்சுமியை வரவேற்றல்

மகாலட்சுமி, தாயாரை சிலர் வீட்டிற்கு வரவழைக்கும் பாவனையில் கலசத்தையோ, அலங்கரிக்கப்பட்ட மகாலட்சுமியையோ, வீட்டின் நிலைவாசலுக்கு வெளியே வைத்து, முதல் நாளோ அல்லது வரலட்சுமி விரத நாளிலோ, நல்ல நேரம் பார்த்து (புதன், சுக்கிரன், குரு எனும் சுப ஹோரையில்) ஒரு பூஜையைப் போட்டு வீட்டுக்குள் வரவழைப்பார்கள். திருமகள் காலடி எடுத்து வைத்து ஒருநாள் முழுக்க தங்கி, உபசாரங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள்.

இது அவரவர்கள் குடும்ப வசதி, வழக்கப்படி செய்ய வேண்டும். பூஜை என்பது நான்கு காலம் அல்லது ஐந்து காலம் அல்லது ஆறு காலம் என வசதிக்கேற்ப செய்யலாம். நம் சக்தி, ஆர்வம், பக்திதான் இதற்கு எல்லை. முதல் நாள் வியாழக்கிழமை மாலை விளக்கு வைக்கும் பிரதோஷ வேளையில், திருமகளை அழைத்து பூஜை அறையில் எழுந்தருளச் செய்தால், உடனே ஒரு பாயசமோ அல்லது சர்க்கரை கல்கண்டு, பழங்கள் வைத்து நிவேதிக்கலாம். இரவு திருக்காப்பு செய்வதற்கு முன் அவசியம் பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

20. பூக்களால் அர்ச்சனை

அடுத்த நாள் காலை மதியம் விசேஷமான நிவேதனங்கள் செய்து பூஜிக்க வேண்டும். பூஜைக்கு எல்லா வகையான வாசனைப் பூக்களையும் பயன்படுத்தலாம். மகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகும். பிங்க் நிற தாமரை, நாட்டு ரோஜா, வில்வ பழம் போன்றவற்றை கொண்டு அர்ச்சிக்கலாம். சாமலி பூக்கள், துளசி மாலை அணிவிக்கலாம். மல்லிகைப்பூ, வில்வ இலைகள், அத்தி மர இலைகள் போன்றவற்றைப் படைக்கலாம்.

முக்கியமாக துளசியைப் பயன்படுத்த வேண்டும். மாலை ஏதேனும் ஒரு சுண்டல் வைத்து நிவேதனம் செய்யலாம். இரவு குங்குமப்பூ ஏலக்காய் போட்ட பால் நிவேதனம் செய்ய வேண்டும். மறுநாள் காலை யதாஸ்தான புனர்பூஜைக்கு ஏதேனும் சாத்துக்குடி, மாதுளம், கொய்யா முதலிய வகைகள் வைத்து பூஜை செய்யலாம். ஒரே நாள் பூஜை என்று சொன்னால் காலையில் ஒரு பூஜை, மத்தியானம் பிரதான பூஜை, மாலையில் புனர்பூஜை செய்து, யதா ஸ்தானம் செய்துவிடலாம் மஞ்சள் நோன்புக்கயிறு பூஜையின் போது கலசத்தில் வைத்து பூஜை நிறைவில் கையில் அணிய வேண்டும்.

21. கிருஷ்ணஜெயந்தி

மகாலட்சுமித் தாயாரை வரவேற்று விட்டோம். திரு வந்தாலே பின்னால் திருவைத் தேடி மால் வந்துவிடுவார். ‘‘மாலே செய்து மயக்கும் மணாளன்’’ என்று ஆழ்வார் கண்ணனைக் கொண்டாடுகிறார். வரலட்சுமி விரதம் முடிந்தவுடன் ஆடி மாதம் 31-ஆம் தேதி சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நாடெங்கும் கிருஷ்ணஜெயந்தி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. சனிக்கிழமை ஸ்திர வாரம். பெருமாளுக்கு உரிய தினம். இன்று கிருஷ்ணஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படுவது சாலச் சிறந்தது. அன்று காலை 11:00 மணி வரை அஷ்டமி இருக்கிறது. பரணி நட்சத்திரம் காலை 8:15 மணி வரை இருக்கிறது. பின் ரோகிணி வந்துவிடுகிறது. சனிக்கிழமை இரவு கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படும் நேரத்தில் ரோகிணி வந்துவிடுகிறது. ரோகிணிதான் கண்ணனின் திருநட்சத்திரம். எனவே அன்று மாலை கிருஷ்ணஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

22. ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி

வைணவ சம்பிரதாயத்தில் வேறுவிதமாக கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ வைகானச ஆகமம் பின்பற்றும் கோயில்களில் ஆவணி மாதம் 29-ஆம் தேதி (செப்டம்பர் 14-ஆம் தேதி) ஸ்ரீ ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படுகிறது. முனித்திரைய ஜெயந்தி என்றும் சொல்வார்கள். அதற்கு அடுத்த நாள் ஆவணி மாதம் 30-ஆம் தேதி (செப்டம்பர் 15 ஆம் தேதி) பாஞ்சராத்ர ஆகமம் பின்பற்றும் கோயில்களில் பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடப் படுகிறது. இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாற்றங்கள் நிகழ்வதை நாம் பார்க்கலாம். இதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

23. ஜெயந்தி என்றால் என்ன?

அதற்கு முன்னால் ஸ்ரீ ஜெயந்தி அல்லது ஜெயந்தி என்பது கிருஷ்ண ஜெயந்தியை மட்டும்தான் குறிக்கும். மற்ற தேவதைகளுக்கோ, மஹான்களுக்கோ ஜெயந்தி என்ற பெயருடன் அவதார தினமாகக் கொண்டாடப்படுவது என்பது உபச்சாரக் கிரமத்தில்தான். ஆனால், வைணவத்தில் ஜயந்தி என்கிற வார்த்தையோடு மற்ற அவதார தினங்களை இணைக்க மாட்டார்கள்.  ராம ஜெயந்தி என்று கொண்டாடுவது கிடையாது.

ஸ்ரீ ராம நவமிதான். அதைப்போல ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி, நம்மாழ்வார் ஜெயந்தி, ஆண்டாள் ஜெயந்தி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டாடுவதில்லை. ஆண்டாள் ஆடிப்பூரம் என்றும், ராமானுஜர் சித்திரை திருவாதிரை என்றும், அவதாரத் திருநட்சத்திர தினம் என்றுதான் கொண்டாடுவார்கள். காரணம் அஷ்டமி திதியோடு ரோகிணி நட்சத்திரம் இணைந்து வரும் நாளுக்குத்தான் ஜெயந்தி என்ற பெயர். அந்த நாளில் கண்ணன் அவதரித்ததால் ஸ்ரீ ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள். ஜெயந்தி என்றால் வெற்றி தரும் நாள் என்று பொருள்.

24. ஸ்ரீ வைகானச ஜெயந்தி

ஸ்ரீ வைகானச ஜெயந்தி முனித்திரைய ஜெயந்தி என்பது ஆவணி மாதத்தில் சூரிய உதயம் தொடங்கி இரவுவரை தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்து இருக்க வேண்டும். அல்லது சந்திரன் உதிக்கின்ற மாலை வேளையில் அதாவது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வேளையில் ரோகிணியும் அஷ்டமியும் இணைந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அந்த நாளில் பகலிலோ இரவிலோ சிறு அளவாவது அஷ்டமியும் ரோகிணியும் இணைந்திருந்தால், அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியைக் கொண்டாடுவார்கள். அந்த அடிப்படையில் ஆவணி மாதம் 29-ஆம் தேதி காலை ரோகிணி இருக்கிறது தேய்பிறை அஷ்டமியும் இணைகிறது. எனவே அந்த நாளை ஸ்ரீ ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.

25. பாஞ்சராத்ர ஜெயந்தி

பாஞ்சராத்ர ஆகமத்தில் இது கொஞ்சம் மாறும் ஆவணி மாதம் காலை சூரிய உதய வேளையில் தேய்பிறை அஷ்டமி ரோகிணி இணைய வேண்டும் அல்லது தேய்பிறை நவமி ரோகிணி நட்சத்திரம் இணையலாம் அப்படியும் வழி இல்லாவிட்டால் தேய்பிறை நவமி அல்லது தசமியுடன் இணைந்த மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் நாளில் கொண்டாடலாம். இதில் எந்த விதியைப் பின்பற்றினாலும் அன்றைய தினம் சந்திரன் ரிஷப ராசியில்தான் இருப்பார்.

ரிஷப ராசி சந்திரனின் உச்ச ராசி. பொதுவானவர்கள் கோகுலாஷ்டமியை எப்படிக் கொண்டாடு கிறார்கள் என்றால் சிரவண மாத தேய்பிறை அஷ்டமி தினத்தை கணக்கில் எடுத்துக் கொண்டாடுகிறார்கள். சாந்திரமான முறைப்படி ஆடி அமாவாசை முடிந்துவிட்டால் சிரவண மாதம் துவங்கிவிடும். அடுத்து வரும் ஆவணி அமாவாசைக்கு முன்னால் வரும் அஷ்டமி தினம் கோகுலாஷ்டமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மக்கள் கோகுலாஷ்டமி தினத்தை ஆடி மாதம் 31-ஆம் தேதிதான் கொண்டாடுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

26. உற்சாகமே முக்கியம்

கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமான திருவிழா. ஒரு குழந்தையின் உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் விழா. எனவே அன்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இருக்க வேண்டும். இவைகள் எல்லாம் இல்லாமல் வெறும் பக்தியோடு இருக்கிறோம் என்று சடங்காகச் செய்து விடக்கூடாது. நாம் உற்சாகம் பெறுவதற்காகத்தான் இதைப்போன்ற விழாக்கள் வருகின்றன. நமக்கு இந்த விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை பத்து பாசுரங்கள் பெரியாழ்வார் பிள்ளைத்தமிழில் பாடி வைத்திருக்கிறார். அந்த 10 பாசுரங்களை கிருஷ்ண ஜெயந்தி அன்று அவசியம் சேவிக்க வேண்டும். அதுதான் கண்ணனின் அவதார தினத்தைக் கொண்டாடிய இலக்கணம். அதில் ஒரு பாசுரத்தில் அவர் சொல்வதை கவனியுங்கள்.

27. அடடா, இதல்லவோ கொண்டாட்டம்

திருவாய்ப் பாடி மக்களெல்லாம் கண்ணனின் அவதார தினத்தைக் கொண்டாடுகிறோம் என்று உற்சாகத்தோடு பரபரப்போடு அங்குமிங்கும் ஓடுவார்களாம். வீதி முழுக்க ஒருவருக்கொருவர் மங்கலப் பொருள்களை வாரி வீசி இருப்பதால் வீதி முழுக்க சேறாகி அதிலே வழுக்கி விழுவார்களாம் ‘‘ஐயோ விழுந்து விட்டோமே’’ என்று நினைக்க மாட்டார்களாம். எழுந்து சிரிப்பார்களாம். காரணம் கண்ணனுடைய அவதார தினத்தைக் கொண்டாடும் மகிழ்ச்சி.

அன்று கண்ணனுக்குப் பரிசு பொருள் தரவேண்டுமே! எனவே ‘‘எங்கே கண்ணன்? எங்கே கண்ணன்?’’ என்று கண்ணனைத் தேடுவார்களாம். இங்கேதான் இத்தனை நேரம் இருந்தான் என்ற பதிலைக் கேட்டு மறுபடியும் தேடுவார்களாம் அதோ ஒரே கூட்டமாக இருக்கிறது ஒருவேளை கண்ணன் அங்கே இருக்கலாம் என்று சொன்னால் அந்த கூட்டத்தை நோக்கி ஓடுவார்களாம்.

28. ஆட்டமும் பாட்டமும்

ஓடிப்போய் அங்கே பார்த்தாலும் ஏமாற்றம். இவர்கள் போய்ச் சேர்வதற்குள் கண்ணனைக் கொஞ்சுவதற்கு இன்னொரு கூட்டம் இவர்களிடமிருந்து கண்ணனைப் பறித்துக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று இருப்பார்களாம். இப்படி எங்கே கண்ணன்? எங்கே கண்ணன்? என்று அவனைத் தேடுவதிலேயே பாதி நேரம் கழிந்துவிடுமாம். இதற்கிடையே கண்ணனின் அவதார தினத்தைக் கொண்டாடும் விதமாக, ஊர் முழுக்க மங்கல வாத்தியங்கள் (மங்கலப் பறை) ஒலித்துக் கொண்டிருக்குமாம். அந்த இசைக்குத் தகுந்தவாறு தங்களை மறந்து மக்கள் நடனம் ஆடுவார்களாம் கண்ணனுடைய அவதார தினத்தை இத்தனை உற்சாகத்தோடு கொண்டாட வேண்டும் என்பதைத்தான்பெரியாழ்வார் ஒரு பாசுரமாகப் பாடியிருக்கிறார்.

``ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்

நாடுவார் நம்பிரான் எங்குற்றானென்பார்?

பாடுவார்களும் பல்பறை கொட்டநின்று

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே’’

29. அன்று என்ன செய்ய வேண்டும்?

வழக்கம் போல வீடு முழுக்க நன்கு சுத்தப்படுத்தி வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் மாக்கோலம் போட வேண்டும். மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும். வீடு முழுக்கக் குழந்தைக் கண்ணனை வரவேற்பது போல் பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் வரைந்து வரவேற்க வேண்டும். வீட்டுக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேஷம் போட்டு, பூஜையில் பங்கெடுக்கச் செய்யலாம். எளிமையான ஸ்தோத்திரங்களையும் கண்ணன் பாடல்களையும் பாடலாம்.

கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தைகள் அதிகம் சாப்பிடும் பட்சணங்களை படைக்கவேண்டும். பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம், வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம். அவசியம் நாவல் பழமும் வெண்ணெயும் வைக்க வேண்டும்.சுத்தமாக நீராடி, பூஜை செய்து முடித்து விட்டு, நிவேதித்த பிரசாதங்களை அருகில் இருக்கக்கூடிய சிறுவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும்.

30. பலன் என்ன?

சந்தான கோபால ஹோமம் செய்வது ரொம்ப விசேஷம். குழந்தையில்லாதவர்கள் இந்த ஹோமத்தைச் செய்தால் கண்டிப்பாக கிருஷ்ணரே வந்து பிறப்பார் என்பது நம்பிக்கை. சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திர மாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.

முதல் மந்திரம்

``ஓம் தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே

தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:’’

பொருள்: தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம்

பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.

இரண்டாவது மந்திரம்

``தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ

தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்வினம்’’

பொருள்: தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு!

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினால்,

1. ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நாசமடையும்.

2. அஸ்வமேத யாக பலன் கிடைக்கும். எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ, அது கிருஷ்ண ஜெயந்தி விரதத்தால் கிடைத்துவிடும்.

3. ஆயிரம் காராம் பசுக்கள், ஆயிரக் கணக்கான குதிரைகள், யானைகள் தானம் செய்த பலன் கிடைக்கும்.

4. அளவற்ற ஆபரணங்களை குருஷேத்திரத்தில் தானம் கொடுத்த பலனும், கோடி கோ தானம் செய்த பலனும் கிடைக்கும். நமது எல்லாக் கோரிக்கைகளும் நிறைவேறும். மூன்றே முக்கால் நாழிகை கிருஷ்ணனை நினைத்து பூஜை செய்ய, பாவங்களெல்லாம் விலகும். அறம் பொருள் இன்பம் வீடுபேறு எனும் நான்கு வித பலன்கள் கை கூடிவரும்.

பிறகென்ன, வரலட்சுமி விரதத்தையும் கிருஷ்ணஜெயந்தி பண்டிகையையும் கொண்டாடத் தயாராகி விட்டீர்கள் தானே. வாருங்கள், உற்சாகமாகக் கொண்டாடுவோம்.

எஸ். கோகுலாச்சாரி

 

Related News