வாழ்வின் உன்னத நிலையை தரும் உதயபானு யோகம்
வாழ்வில் மேம்படும் வழிகளை உருவாக்கி கொடுக்கும் அமைப்பை தரும் ஒரு யோகம்தான் உதயபானு யோகம். லக்னத்தின் உயிர் நாடியையும். ராசியின் உயிர் நாடியையும் இயக்குவது என்பது ஒரு சிறப்பான அமைப்பாக உள்ளது.
இந்த யோகமானது எல்லா வழிகளிலும் மேம்பட்ட ஒரு நிலையை அடைவது மட்டுமின்றி தான்மட்டும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்காமல் சுற்றத்தையும் நண்பர்களையும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வைக்கும் அமைப்பாகும். எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் முன்னேற்றம் சீராக இவர்களுக்கு உண்டு.
இந்த உதயபானு யோகம் உள்ளவர் நற்பண்பு உள்ளவராக இருப்பர். எப்பொழுதும் குறிக்கோள் மாறாமல் மேம்பட்ட நிலையில் பயணித்துக் கொண்டே இருப்பார். இந்த யோகம் நிரம்பப் பெற்றவர் உயர்நிலையை நோக்கி பயணிக்கக்கூடிய அமைப்பாக உள்ளது; அப்படிப்பட்ட உதயபானு யோகத்தை காண்போம்.
உதயபானு யோகத்திற்கான கிரக அமைப்பும் விதியும் என்ன?
லக்னாதிபதியும் ராசி அதிபதியும் ஒன்றாக இணைந்து அதில், ஏதேனும் ஒரு கிரகம் உச்சம் பெறுவது உதயபானு யோகம்; லக்னாதிபதி அல்லது ராசியின் அதிபதி இருவரும் உச்சம் பெறுவதும் உதயபானு யோகமாகும்; லக்னாதிபதியும் ராசியின் அதிபதியும் இணைந்து அதில், ஒருவர் உச்சம் பெற்று. அதில் உச்சம் பெற்ற கிரகம் ராசியின் அதிபதியை பார்வை செய்தாலும் உதயபானு யோகம்தான்.
லக்னாதிபதியும் ராசியின் அதிபதி என்ற இரு கிரகங்களும் ராசிக் கட்டத்தில் உச்சம் பெறாமல் நவாம்ச கட்டத்தில் உச்சம் பெற்றாலும் அதுவும் உதயபானு யோகத்தை தருவிக்கிறது.
லக்னத்தின் அதிபதியோ ராசியின் அதிபதியோ பரிவர்த்தனை பெற்று நீசமாகி. நீசமான இரு கிரகங்களும் ஒருவரை ஒருவர் சப்தமமாக பார்வை ஏற்பட்டாலும் அதுவும் உதயபானு யோகத்தின் அமைப்புதான்.
உதயபானு என்பது சூரியனின் பயணத்தில் உதயமாகும் லக்னத்தை அடிப்படையாகக்கொண்டு. அந்த லக்னத்தின் அதிபதியான கிரகம் உச்சம் பெற்று அமைவதை குறிக்கும். இதில் லக்னாதிபதியே சூரியனாக இருந்து உச்சம் பெறுவது யோகத்தின் உச்ச நிலை என்ற அமைப்பினைச் சொல்லலாம்.
உதயபானு யோகத்தின் சிறப்புகள்
லக்னத்தின் அதிபதி என்பது உயிரினையும் ஜாதகரைக் குறிக்கும். ராசி அதிபதி உடலின் அதிபதி, மற்றும் மனம் இருக்கும் இடத்தின் அதிபதி ஆகும். இருவரில் ஒருவர் உச்ச தன்மை உடையதாக இருக்கும் பொழுது நல் வாழ்வினை நோக்கிப் பயணிக்கும் நற் பண்பு உடையவராய் இருப்பார்.
சிம்ம லக்னம், சிம்ம ராசியாக இருக்கும் பொழுது இருவரில் சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்றால் சிறந்த நற்பண்புகளையும் செயற்கரிய சாதனைகளைச் செய்யத் தகுந்த ஒருவராக ஜாதகர் இருப்பார் என்பதில் ஐயம் வேண்டாம்.
கிரகங்கள் உச்சம் பெற்று இருந்து உயர் நிலை ஆற்றலை பெற்றிருப்பதால், அந்த கிரகத்திற்கான காரங்கள் வழியாகவும் பாவகம் வழியாகவும் நற்பலன்களை செய்யும்.
சந்திரனின் வீட்டின் அதிபதி உச்சம் பெறுவதால் சந்திரன் நல்வலிமையோடு பயணிக்கும். லக்னத்தின் அதிபதி உச்சம் பெறுவதால் எங்கும் பாதுகாப்போடு எச்சரிக்கையோடு பயணிப்பார்.
ஏக லக்னம் ராசியின் வழியே உதயபானு யோகம்...
*மேஷம் & விருச்சிகம் லக்னம் மற்றும் மேஷம் & விருச்சிகம் ராசியாக அமையப் பெற்றவருக்கு செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவது உதயபானு யோகம்தான்.
*ரிஷபம் & துலாம் லக்னம் மற்றும் ரிஷபம் & துலாம் ராசியாக அமையப் பெற்றவருக்கு சுக்ரன் மீனத்தில் பதினொராம் உச்சம் அடைவது உதயபானு யோகமே.
*மிதுனம் & கன்னி லக்னம் மற்றும் மிதுனம் & கன்னி ராசியாக அமையப் பெற்று புதன் கன்னியில் உச்சம் அடைவது உதயபானு யோகம்தான்.
*கடக லக்னம் மற்றும் ராசியாக அமையப் பெற்றவருக்கு சந்திரன் பதினொராம் (11ம்) பாவகத்தில் இருப்பது உதயபானு யோகமாகும்.
*சிம்ம லக்னம் மற்றும் ராசியாக அமையப் பெற்றவருக்கு சூரியன் ஒன்பதாம் (9ம்) பாவகத்தில் உச்சம் பெறுவது உதயபானு யோகத்தின் முழுமையான அமைப்பாகும்.
*தனுசு & மீனம் லக்னம் மற்றும் தனுசு & மீனம் ராசிக்கு வியாழன் கடகத்தில் உச்சம் அடைந்திருந்தால் அதுவும் உதயபானு யோகமே.
*மகரம் & கும்பம் லக்னம் மற்றும் மகரம் & கும்பம் ராசிக்கு சனி துலாத்தில் உச்சம் அடைவதும் உதயபானு யோகமே.
உதயபானு யோகப் பலன்கள்...
*ஜாதகர் மேம்பட்ட நிலையை உடையவராகவும் அவரை ஏதோ ஒரு ஆத்ம சக்தி அவருக்குள் இருந்து அவருக்கு வழிகாட்டி கொண்டே இருக்கும்.
*ஜாதகரின் செயற்கரிய செயல்களால் ஜாதகரை நட்புக் கூட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
*நற்பண்புகள் உள்ளவராகவும் சுற்றுபுறச் சூழ்நிலைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் திறன் படைத்தவராக ஜாதகர் திகழ்வார்.
*உயரிய நோக்கத்திற்காக வாழ்நாள் முழுதும் பயணித்துக் கொண்டே இருப்பார்; வெற்றியும் அடைந்து கொண்டே இருப்பார்.
*குறைந்த அளவு படித்தாலும் நிரம்பப் படித்தாலும் கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்குவார்.
*தன்னுடைய நம்பிக்கையான நபர் யாரென்று அறிந்து வைத்திருப்பார். தனக்கு யார் துரோகம் செய்வார் என்பதும் இவருக்கு முன்னேரே தெரியும்.
*கடவுள் பக்தி மற்றும் பொருள் ஆரோக்கியம் நிரம்ப பெற்றவராகவும் தனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை விடாப்பிடியாக மேன்மை நிலை நோக்கி பயணிக்க செய்து முன்னேற்றத்தை காண்பார்.
*தன்னை ஒருவர் நாடுகிறார் என்றால் இதற்காகத்தான் வந்துள்ளார் என்பதை முன்கூட்டியே அறிவார்.