மகத்தான இரு மகான்கள்
ஸ்ரீ வாகீஷ தீர்த்தர்- மகான் 16
``மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் இந்த நெடுந் தொகுப்பில், தற்போது இரு மகான்களை பற்றி பார்க்கவிருக்கிறோம். ஒருவர் ``ஸ்ரீ வாகீஷ தீர்த்தர்’’ மற்றொருவர் ``ஸ்ரீ ஜெயத்வஜா தீர்த்தர்’’.கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு அருகில் உள்ள துங்கபத்ரா நதிக்கரைக்கு அருகில் இருக்கும் இடம்தான் அனேகுந்தி. இங்கு நவபிருந்தாவனங்கள் இருக்கின்றன. அதில் நாம் ஏற்கனவே, ஸ்ரீ பத்மநாப தீர்த்தரை பற்றியும், ஸ்ரீ கவீந்திர தீர்த்தரை பற்றியும் தரிசித்திருக்கிறோம். இந்த தொகுப்பில், ``ஸ்ரீ வாகீஷ தீர்த்தரை’’ பற்றி தெரிந்து கொள்வோம்.
இவர் எந்த மடத்தை சேர்ந்தவர்?
ஸ்ரீ வாகீஷ தீர்த்தரின் பிறப்பு, அவரின் பெற்றோர் ஆகியவை இன்னும் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. ஆனால், இவரின் பூர்வாஷ்ரமத்தின் பெயர் ``ஸ்ரீ ரகுநாதாச்சாரியார்’’ என்பதாகும். சிறுவயது முதல் ``வேத அத்யாயனத்தை’’ (வேதங்களை கற்றல்) கற்றுக் கொள்வதில் ஆர்வமிகுந்தவர். மேலும், மகான் ஸ்ரீ கவீந்திர தீர்த்தரிடத்தில் பாடங்களை பயின்று, அவரின் திருக் கரங்களாலே சந்நியாசம் பெற்றவர். மத்வ மடத்தின் மிக முக்கிய மடமான ``ஸ்ரீ ராகவேந்திர’’ மடத்தின் சிம்மாசனத்தில், ஸ்ரீ கவீந்திர தீர்த்தருக்குப் பிறகு, ஸ்ரீ வாகீஷ தீர்த்தர் அலங்கரித்தார்.
1398-ஆம் ஆண்டு முதல் 1406-ஆம் ஆண்டுகள் வரை 9 ஆண்டுகள், ராகவேந்திர மடத்தின் மடாதிபதியாக இருந்திருக்கிறார்.ஸ்ரீ கவீந்திர தீர்த்தரையும், ஸ்ரீ வாகீஷ தீர்த்தரையும் ``ஸ்ரீ உத்தராதி மடத்தின்’’ சந்நியாசிகள் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஸ்ரீ வாகீஷ தீர்த்தர், இந்தியா முழுவதும் சஞ்சாரம் மேற்கொண்டு, மத்வர் நிறுவிய துவைத தத்துவங்களை பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் பிரசங்கம் செய்தார். அதன் விளைவாக, துவைத சித்தாந்தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பலரும் மத்வரை பற்றி அறிந்துகொண்டு அவரை பின்பற்றினர்.
அனைவரையும் ஒன்றுசேர்த்த மகான்
ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரையும் சேர்த்து கணக்கெடுத்தோமேயானால், ஸ்ரீ வாகீஷ தீர்த்தர் ஒன்பதாவது துறவி ஆவார். மத்வர் வழிபட்டு வந்த சில முக்கிய சுவாமி சிலைகளை ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் பூஜித்து வந்திருக்கிறார். அவருக்கு பின், மகாசமஸ்தான சொத்துக்களையும், நூல்களையும், பிரதிமைகளையும் கவனித்து பாதுகாத்து வந்திருக்கின்றார், வாகீஷ தீர்த்தர். ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் ஆகிய இரு மகான்கள் மூலமாக மடங்கள் பிரிந்து செல்ல நேரிட்ட போது, அசாதரணமான சூழ்நிலைகள் நிலவின. அந்த சமயத்தில், மிக லாவகமாக கையாண்டு, பல இடையூறு களைத் தவிர்த்து, மக்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்தார்.
மேலும், மிக குறுகிய காலத்தில் மட்டுமே பீடத்தில் இருந்தாலும், அவர் வசித்த ஊர்களில் இருக்கும் வளங்களை சீர்ப்படுத்துதல் மற்றும் அதன் மீது தனிப்பட்ட கவனத்தை செலுத்துதல் என திறம்பட செயலாற்றினார்.அது மட்டுமா! விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில், மத்வாச்சாரியாரின் தத்துவத்தைப் பரப்பிய முதல் மகான் என்றும்கூட சிலர் கூறுவதுண்டு.
குருவின் அருகிலேயே பிருந்தாவனம்
வாகீஷ தீர்த்தருக்கு, ஸ்ரீ மாதவசாஸ்திரி என்னும் பிரதான சீடர் இருந்தார். குருவின் சொல்லை மீறாதவர். தனது குருவிடத்தில் அனைத்து பாடங்களையும் கற்றார், சாஸ்திரி. இதனால், மாதவசாஸ்திரியை பிடித்துப்போக, அவருக்கு ``ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர்’’ என்னும் திருநாமம் சூட்டி, சந்நியாசதீட்சை கொடுத்து, தனது அடுத்த வாரிசாக நியமித்தார், வாகீஷ தீர்த்தர். இவரைப் பற்றிய இன்னும் சில தகவல்கள் ஆய்வில் இருக்கின்றன. சைத்ர பஹுலாவின் 3வது நாள் சர்வஜித் நாம சம்வத்சரத்தில், தன் அன்பான குரு, ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் அருகிலேயே ஸ்ரீ வாகீஷ தீர்த்தரும் பிருந்தாவனமானார்.
``வாசுதேவபதத்வம்த்வ வாரிஜாசக்தமானசம்
பதவ்யாக்யானகுஸலம் வாகீஶயதிமாஸ்ரயே’’
கர்நாடக மாநிலம் ஹம்பியில் இருந்து 19 கி.மீ., தொலைவில் பயணித்தால் ``நவபிருந்தாவனத்தை’’ அடைந்துவிடலாம். இங்குதான் ஸ்ரீ வாகீஷதீர்த்தரின் மூலபிருந்தாவனம் உள்ளது.
ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தர்-மகான் 17
ஸ்ரீ வியாசராஜ மடத்தின் இரண்டாவது மடாதிபதியாக இருந்தவர் ``ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தர்’’. பெயரே மிக அருமையாக இருக்கிறதல்லவா! மகான் ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரிடத்தில் இருந்து சந்நியாசம் பெற்றவர், ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தர். மத்வரையும் சேர்த்து கணக்கு செய்தால், இவர் ஒன்பதாவது துறவி ஆவார்.
உணவுக்கே கஷ்டப்பட்ட மகான்
ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஜெயத்வஜ தீர்த்தர், ராஜேந்திர தீர்த்தரின் பூர்வாஷ்ரம சகோதரர் ஆவார். இவரின் குருவான ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், வட இந்தியாவில் துவைத தத்துவத்தை தொடர்ந்து பரப்பினார். அதேபோல், ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தரும் குருவை பின்பற்றி வடஇந்தியா முழுவதும் துவைத தத்துவத்தை பரப்பினார். இத்தகைய மகத்தான பங்களிப்பின் காரணமாக, துவைத தத்துவம் விருட்சமாக வளர்ந்தது.
அந்த சமயத்தில்தான், ஜெயத்வஜ தீர்த்தரின் மூலமாக, ஸ்ரீ கிருஷ்ணசைதன்யரும் துவைத தத்துவத்தால் ஈர்க்கப்பட்டதாக ஒரு கூற்றும் உண்டு. ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தர், மிகச் சிறிய வயதில் அதாவது பால சந்நியாசம் ஏற்றுக் கொண்டவர். அந்த காலகட்டத்தில், பல துயரங்களை சந்தித்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. குறிப்பாக, பல இடங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்ய நேரிடும் சமயத்தில், யாரேனும் பிக்ஷை கொடுத்தால்தான் அவருக்கு உணவு கிடைக்கும்.
(பிச்சை இல்லை அது பிக்ஷை அதாவது ஸ்வாமிகள் வந்திருக்கிறார். அவரின் உணவுகளை இன்று ஒரு நாள், நான் கவனித்துக்கொள்கிறேன் என்கின்ற தாத்பர்யம்)குக்கிராமத்திற்கு ஜெயத்வஜ தீர்த்தர் பயணம் மேற்கொள்வார். அப்போது பிக்ஷைக்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள். இதனால் ஜெயத்வஜ தீர்த்தர், தொடந்து ஐந்து நாட்கள் வரையில்கூட உபவாசம் இருக்க நேரிடும். நம்மால் இன்று ஒரு வேளைகூட உபவாசம் இருக்க முடியவில்லை. ஆனால், ஸ்வாமிகள் பல நாட்கள் வரை உபவாசம் இருந்திருக்கிறார். அத்தகைய தவவலிமை பெற்றவர், ஜெயத்வஜ தீர்த்தர்.
சில சமயங்களில், சாலையோரத்தில் கிடைத்த சில எளிய பழம் மற்றும் காய் வகைகளை உண்டும், மரக்கிளை களைப் பயன்படுத்தி, மிக எளிமையான சமையல்களை சமைக்கவும் செய்வாராம்.எங்கே உள்ளது என்று தெரியவில்லை வியாசராஜ மடத்தின் மகாசமஸ்தானத்தை, ``ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தரிடம்’’ ஒப்படைத்த பிறகு, ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தர், கர்நாடகா - தெலுங்கானா எல்லைப்பகுதியான யாரகோலா என்னும் பகுதியில், கார்த்திகை மாதம் முழு பௌர்ணமி அன்று பிருந்தாவனமானார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவரின் பிருந்தாவனம் எங்குள்ளது என்கின்ற சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.
ரா.ரெங்கராஜன்