திதிகளும் தெய்வ விழாக்களும்
‘‘பஞ்சாங்கத்தைப் பார்த்து செயல்படுபவன் எஞ்ஞான்றும் தோற்பதில்லை’’ என்று ஒரு வாசகம் உண்டு. ஒரு செயலை செய்யத் தொடங்கும்பொழுது அதற்குரிய நாளைக் கணக்கிட்டுத் தொடங்கினால், அந்தச் செயல் நல்லவிதமாக முடியும். பஞ்சாங்கம் 5 உறுப்புக்களைக் கொண்டிருப்பது.
1. வாரம்
2. திதி
3. கரணம்
4. நட்சத்திரம்
5. யோகம்
இந்தக் கால அளவை அனுசரித்துத்தான் உற்சவங்களும் பண்டிகைகளும் விரதங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
திதி என்பது என்ன?
சந்திரன் ஒரு குறிப்பிட்ட பாதையில் பூமியைச் சுற்றி வரும்போது, ஒவ்வொரு நாளும் சூரியனுடனான தூரம் மாறுபடும். இந்த தூரத்தின் அளவீடு திதி எனப்படுகிறது. அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் இணையும், அதன் பிறகு சந்திரன் சூரியனிடமிருந்து விலகிச் செல்லும். இந்த விலகல் திதிகளின் சுழற்சியை ஏற்படுத்துகிறது. வளர்பிறை திதிகள் (சுக்ல பட்சம்) அமாவாசையிலிருந்து தொடங்கி, பௌர்ணமி வரை நீடிக்கும். தேய்பிறை திதிகள் (கிருஷ்ண பட்சம்) பௌர்ணமியிலிருந்து தொடங்கி, அமாவாசையுடன் முடிவடையும்.
திதிகள் காட்டும் வாழ்க்கைத் தத்துவம்
பஞ்ச அங்கங்களில் மற்ற நான்கைவிட திதிகளின் சிறப்பு அற்புதமானது. வாழ்க்கையின் தத்துவத்தைச் சுட்டிக்காட்டுவது. திதிகள் அமாவாசையில் தொடங்கி பௌர்ணமியில் முடிகிறது. இருட்டிலிருந்து தொடங்கி பூரணமான வெளிச்சத்தில் நிறைமதி நாளாக முடிகிறது. அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாக கலைகளை இழந்து அமாவாசையில் பூர்த்தி அடைகிறது. இந்த சுழற்சியானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இப்போது மனித வாழ்வை எடுத்துக் கொள்ளுங்கள். அமாவாசை எனப்படும் இருட்டான கருவறையில் பிறந்த உயிரானது வெளியே வந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஒவ்வொரு கலையாக வளர்கிறது. உடலிலும் உள்ளத்திலும் படிப்படியாக வளர்கிறது. மத்திம வயதில் ஓரளவு அது முழுமையான வெளிச்சத்தை பெறுகிறது.
கல்வி, அறிவு, உடல் வளர்ச்சி, பொருளாதாரம் போன்ற எல்லாவற்றிலும் அது ஒரு சிகரமான நேரம். ஆனால் அது அப்படியே இருந்துவிடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. உடலிலே வளர்ச்சி வேகமாகச் சென்று எப்படி ஒரு நிலையைத் தொட்டதோ (saturation), அதைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக உடலின் பல்வேறு பகுதிகள் பலம் குறைந்து கொண்டே வருகின்றன. ஒரு கட்டத்தில் அவை முழுமையாக பலம் இழந்து இருட்டாகிவிடுகின்றன.
மறுபடியும் வேறு ஒரு வடிவத்தில் புதிய உயிராக வெளிச்சத்தைப் பற்றிக் கலைகளாக உயர ஆரம்பிக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்பதால் வாழ்வின் பிறப்புக்கு முந்தைய நிலைக்கும், இறப்புக்கு பிந்திய நிலைக்கும் உள்ள மாற்றங்களை திதிகள் குறிப்பிடுகின்றன. இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்கலாம். இருட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கலைகள் வளர்ந்து கொண்டே போவதையும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருவதையும் பார்க்கின்ற பொழுது, எதுவுமே நிரந்தரமானது அல்ல, குறைவது வளர்வதும், வளர்வது குறைவதும் சாத்தியமானதுதான் என்பதைத் திதிகள் சுட்டிக் காட்டுகின்றன. இன்றைய எந்த நிலையும் நாளை மாறலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை சுட்டிக் காட்டுவதுதான் திதிகள்.
ஒவ்வொரு திதிக்கும் என்ன சிறப்பு?
திதிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை ஒட்டிய விரதங்களும் பண்டிகைகளும் உண்டு.
அமாவாசை
முன்னோர்களுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் தென்புலத்தார் வழிபாடுதான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அமாவாசை 12 மாதங்களுக்கும் முக்கியம்தான் என்றாலும், ஆடி அமாவாசையும் தை அமாவாசையும், முன்னோர்கள் கூட்டமாக வரும் மகாலய அமாவாசையும், அமாவாசைகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. அமாவாசை திதியில் அம்மன் கோயில்களில் வழிபாடுகள் விசேஷமாக இருக்கும்.
பௌர்ணமி
அமாவாசைக்கு நேர் எதிரான நிறைமதி நாள் பௌர்ணமி. அமாவாசை முழுமையான இருட்டு. பௌர்ணமி முழுமையான வெளிச்சம். பெரும்பாலும் தெய்வ வழிபாட்டுக்கு ஏற்ற நாள். ஒவ்வொரு பௌர்ணமியிலும் சத்யநாராயண விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் பௌர்ணமி நாள் வரும் நட்சத்திரத்தை ஒட்டித்தான் மாதங்களின் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தெய்வ விழாக்கள் பௌர்ணமி திதியில்தான் கொண்டாடப்படுகின்றன. சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம், மாசி மகம் என பௌர்ணமியில் கொண்டாடும். விழாக்களை வரிசையாகச் சொல்லலாம். மலைக்கோயில்களில் பௌர்ணமி கிரி வலம் சிறப்பானது.
பிரதமை
பிரதமை திதிக்கு அதிதேவதை அக்னி பகவான். தொடர் விழாக்களின் அல்லது விரதத்தின் தொடக்க நாளாக பிரதமையை எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாளான பாத்ரபத பகுளத்தில் தொடங்கும். பகுளம் என்பது பிரதமை தினம். இதைப் போலவே, நவராத்திரியும் அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமையில் தொடங்கும்.
துவிதியை
துவிதியை திதியின் அதிதேவதை பிரம்மா ஆவார். இந்த திதியில் பிரம்மனையும், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வரும் சூரியனையும் வழிபடுவது சிறந்தது. தீபாவளி சமயத்தில் அமாவாசைக்கு இரண்டாம் நாள் யம துவிதியை அனுசரிப்பார்கள். இந்த நாளில், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்துவார்கள். மேலும், சகோதரிகளின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.
திருதியை
இது மூன்றாவது திதி. மிகவும் சிறப்பான திதி. எல்லா சுபகாரியங்களுக்கும் ஏற்ற திதி. அட்சய திருதியை நாள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருதியை திதியில் செய்யப்படும் வழிபாடுகள் பலவிதமான நன்மைகளை அளிக்கின்றன. அட்சய திருதியை போலவே ரம்பா திருதியை என்று ஒரு நாள் உண்டு. வைகாசி மாத வளர்பிறை திருதியையும் கார்த்திகை மாத வளர்பிறை திருதியையும் ரம்பா திருதியை என்பார்கள். இந்த நாளில் செய்யும் வழிபாடு, சகல ஐஸ்வர்யங்களையும் தருவதோடு ஆரோக்கியமும் அழகும் மேம்படுத்தும்.
சதுர்த்தி
இது நான்காவது திதி. சதுர்த்தி என்றாலே விநாயகர் நினைவுக்கு வந்து விடுவார். ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினாலும், ஒவ்வொரு சதுர்த்தியும் விநாயகர் பூஜைக்கும் விரதத்திற்கும் உரிய நாள். இது தவிர நாக சதுர்த்தி ஒன்று உண்டு. ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் மேற்கொள்ளும் விரதம் நாகசதுர்த்தி விரதம். இந்நாளில் நாகர்சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர்.
பஞ்சமி
ஐந்தாவது திதி. மங்கலமான திதி. இந்த நாளில் எந்த சுபகாரியத்தைச் செய்தாலும் மகத்தான நன்மை கிடைக்கும். ரிஷிகளை வணங்குகின்ற பஞ்சமி ரிஷி பஞ்சமி. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.
வராகிதேவியை வழிபட்டு வரங்களைப் பெறும் வாராஹி பஞ்சமி, ஸ்கந்த பஞ்சமி, என்று பல்வேறு விரதங்கள் பஞ்சமி திதி விரதங்களாக இருக்கிறது. ரங்கபஞ்சமி என்று ஒரு பஞ்சமி. ஹோலியின் அடுத்த நாள் கொண்டாடப் படும். மக்கள் வண்ணக் குங்குமம், வண்ணப் பொடிகள் மற்றும் தண்ணீரை ஒருவருக் கொருவர் வீசி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். கருட பஞ்சமி என்பது ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியாகும். இது கருட பகவானுக்குரிய விரத நாளாகும். இந்த நாளில், கருடனை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.
சஷ்டி
ஆறாவது திதி. இந்தத் திதி நமக்கு முருகனை நினைவூட்டும். ஒவ்வொரு மாதமும் முருகனை நினைத்து விரதம் இருக்க வேண்டிய நாள். குமார சஷ்டி, கந்த சஷ்டி, என்று வெவ்வேறு பெயர்களில் சஷ்டி விரதங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆண்டுதோறும் வருகின்ற ஸ்கந்த சஷ்டி (ஐப்பசியில்) கோடிக் கணக்கான மக்கள் கொண்டாடும் உற்சவமாகும். ஆவணி மாத சஷ்டியை சூரிய சஷ்டி என்று அழைக்கிறார்கள். இதுவும் மிகவும் சிறப்பான தினமாகும். சஷ்டி திதியில் சூரியனை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால், குடும்பத்தில் உள்ளவர்களின் தோஷங்கள் நீங்கி, செழிப்புடன் வாழ்வார்கள்.
சப்தமி
ஏழாவது திதி. சூரியனை நினைவூட்டும் நாள். சூரியன் சப்தமி திதியில்தான் அவதாரம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒற்றைச் சக்கரமும் ஏழு குதிரைகளும் பூட்டிய தேரில் அவன் சுற்றிக் கொண்டேயிருக்கிறான் என்று புராணங்கள் பேசுகின்றன. ரத சப்தமி என்பது தை மாதத்தில் வரும் சப்தமி நாள். அன்றுதான் திருமலையில் ஏகதின பிரம்மோற்சவம் எனப்படும் ரதசப்தமி உற்சவம் நடைபெறுகிறது. காலை முதல் இரவு வரை மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வருகிறார். கமல சப்தமி என்பது பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமி திதியைக் குறிக்கும். இது மகாலட்சுமிக்குரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமியை வழிபட்டால் கருத்து வேறு பாட்டால் பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்றுசேர்வார்கள்.
அஷ்டமி
எட்டாவது திதி. பகுள அஷ்டமி என்பது தேய்பிறை அஷ்டமி திதியைக் குறிக்கும். இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு எதுவுமே தட்டாமல் கிடைத்தே தீரும் என்பது நம்பிக்கை. வைணவர்களுக்கு அஷ்டமி திதி கண்ணனை நினைவூட்டும். கோகுலாஷ்டமி, அஷ்டமி திதியில் தானே கொண்டாடப்படுகிறது! சைவர்களுக்கு பைரவரை நினைவூட்டும். காலபைரவருக்கான திதி அல்லவா! அம்பாள் பக்தர்களுக்கு துர்காஷ்டமி நினைவுக்கு வரும். இது தவிர அருகம்புல்லை வைத்து பூஜை செய்யும் தூர்வாஷ்டமி விரதமும், மகாலட்சுமியின் அக்காவான மூத்த தேவியை வணங்கும் ஜேஷ்டாஷ்டமி விரதமும், அஷ்டமி நாளுக்குரிய விரத தினங்களாக வருகின்றன. தேய்பிறை அஷ்டமி புதன்கிழமையில் வந்தால், புதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பைரவரை வழிபட்டால், அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
நவமி
ஒன்பதாவது திதி. இந்த திதியில்தான் பகவான் ராமராக அவதரித்தார் என்பதால், ராம நவமி என்பது இந்த திதிக்கு உரிய சிறப்பு. சரஸ்வதி பூஜையும் நவமியில்தான் கொண்டாடப்படுகிறது. அவிதவா நவமி என்பது மகாளய பட்சத்தின் போது வரும் நவமி திதியைக் குறிக்கும். இது சுமங்கலிப் பெண்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள், இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டு, புத்தாடை தானம் செய்வது சிறப்பு. அட்சய திரிதியை போல, அட்சய நவமி நாளும் செல்வங்களை அள்ளித்தரும் நாளாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த நாளில் மங்களப் பொருட்களை வாங்கும் வழக்கம் உள்ளது. இந்த நாளில் நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் விசேஷமானது.
தசமி
இது பத்தாவது திதி. கங்கைக்கு விருப்பமான திதி. கங்கா தசமி, அல்லது கங்கா தசரா, என்பது புனித நதியான கங்கை, வானத்திலிருந்து பூமிக்கு வந்த நாளைக் குறிக்கும். ஜ்யேஷ்ட மாதத்தில் வரும் வளர்பிறை சந்திரனின் 10வது நாளான தசமியில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கங்கையில் நீராடினால், பத்து விதமான பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏகாதசி
‘‘பதினோராவது திதி. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். இந்த ஏகாதசியை விரத தினமாக அனுசரிக்காதவர்கள் இருக்க முடியுமா?’’ ‘‘கங்கையைவிட சிறந்த தீர்த்தம் இல்லை. தாயைவிட சிறந்த உறவு இல்லை. அன்னதானத்தைவிட சிறந்த தானம் இல்லை. ஏகாதசியைவிட சிறந்த விரதம் இல்லை’’ என்றல்லவா சொல்கின்றார்கள். அதிலும் கைசிக ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பான ஏகாதசிகள் உண்டு. ஆண்டின் 24 ஏகாதசிக்கும் தனித்தனிப் பெயர் உண்டு.
துவாதசி
பனிரெண்டாவது திதி. ஏகாதசி விரதம் துவாதசியில்தான் (பாரணை) முடிவுபெறும். ஏகாதசிக்கு பெயர் இருப்பது போலவே துவாதசிக்கும் பெயர்கள் உண்டு. உதாரணமாக, கோவத்ச துவாதசி என்பது கன்றோடு பசுக்களை வழிபடும் நாளாகும் மனிதர்களுக்கும் பசுக்களுக்கும் இடையிலான உறவை கொண்டாடும் மங்களகரமான நாளாகும். ஆந்திராவில், இது ``பாதவல்லப ஆராதனா உத்சவ்’’ என்றும், மகாராஷ்டிராவில் இது ``வாசு பராஸ்’’ என்றும், குஜராத்தில் ``வாக் பராஸ்’’ என்றும் சொல்கிறார்கள்.
திரயோதசி
13வது திதி. பிரதோஷ தினம். தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதத்தை எடுத்த தினம். செல்வங்களைப் பெற்ற தினம். மகாலட்சுமி வெளிவந்த தினம். தீபாவளிக்கு முதல் தினம் தனத் திரயோதசி என்று இந்த திதியைக் கொண்டாடுவார்கள். இந்தநாள் மாலை பிரதோஷ வேளையில் சைவர்கள் சிவனையும், வைணவர்கள் நரசிம்மரையும் வணங்கலாம்.
சதுர்த்தசி
14வது திதி. சிவராத்திரியாக கொண்டாடப்படும் தினம். மாசியில் இந்த நாள் மகாசிவராத்திரி. தீபாவளியும் சதுர்தசியில்தான் வருகிறது. நரக சதுர்த்தசி என்று அந்த நாளைச் சொல்லுவார்கள். அங்காரக சதுர்த்தசி என்று ஒருநாள் உண்டு. சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும்போது, அங்காரக சதுர்த்தசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விநாயகப் பெருமானையும், முருகப் பெருமானையும் வழிபட்டால் புத்திரப்பேறு கிடைக்கும்.
நரசிம்ம ஜெயந்தி பத்ம புராணத்திலும் ஸ்கந்த புராணத்திலும் நரசிம்ம சதுர்த்தசி என்று குறிப்பிடப்படுகிறது. வைகாசி மாதத்தில் சதுர்த்தசி திதியில் வரும் சிறப்பான நாள்.இப்படி திதிகளைப் பற்றி ஆராய்ந்தால், சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனைத் திதிகளும் நம்முடைய பண்டிகைகளுக்கும் உற்சவங்களும் உரிய நாட்கள் என்பதுதான் திதிகளின் சிறப்பு.
தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்