திருவாசகத் தேன்
“கடையூழி வரும்தனிமை கழிக்க அன்றோ
அம்பலத்து உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி
கருதினதே”
- என்று பாடுகிறார் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை உலகமே அழியும் என்று நினைத்த இறைவன், அழியாதது திருவாசகம்தான் என்று அறிந்து, அதனை உலகுக்கு அறிவிக்கும் நோக்குடனும், அழியும் உலகில் அழியாதது திருவாசகம்தான் என்பதை அறிவித்தார். அதனால், இதைத் ‘தேன்’ என்று சொல்வது சிறந்த பொருத்தமாகும். சரி, இந்தத் தேனை மாணிக்கவாசகர் என்னும் மாணிக்கவண்டு; வாதவூரில் பிறந்த வண்டு; எந்த மலரிலிருந்து எடுத்தது? என்று ஆராய்ந்தால் அந்த வண்டு சிவபெருமானின் பாதம் என்ற மலரிலிருந்துதான் எடுத்தது எனலாம். இந்தத் திருவாசகத்தேனை இன்று பலரும் முற்றோதல் செய்கிறார்கள். சிறப்புதான். ஆனால், சிலர் திருவாசகத்தின் பொருளை நின்று, நிதானித்து உணர்ந்து பாடாமல் ‘வேகம் கொண்ட வேந்தனின்’ பாடல்களை வேகமாகப் பாடுகிறார்கள். அது தவறு. மாணிக்கவாசகரே திருவாசகத்தை எப்படிப் பாடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்” என்று உணர்ந்து அணுஅணுவாக அனுபவித்துப் பாடவேண்டும். அதை, துளித்துளியாகத்தான் சுவைக்க வேண்டும். அது தித்திக்கும் தேன்
அல்லவா!
முனைவர் சிவ. சதீஸ்குமார்