திருக்கோவிலூர், வீரட்டேஸ்வரர்
கிரகங்களே தெய்வங்களாக
பக்தி என்பது மனம் பக்குவப்படுவதற்கு மட்டுமல்ல மனிதன் பண்படுவதற்கும்தான் என்பதை உணர்வதற்கு தகுதி மனம்தான் தரும். அதுபோலவே, மனதிற்குள் இருக்கும் சக்திகளை தவிர புறத்திலுள்ள சக்தி பிரபஞ்சத்தை இயக்குகிறது. இதனை இறையுடன் இணைத்து அதற்குரிய தேவதையை வழிபடச் செய்வதுதான் நோக்கம்.
ஞானசம்பந்தரும் அப்பரும் பாடல் பெற்ற திருத்தலம். கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோருக்கு ஒளவையும், கபிலரும் திருமணம் செய்து வைத்த திருத்தலமாக பேசப்படுகிறது. இத்தலத்தில்தான் ஒளவையார் விநாயகர் அகவலைப் பாடியதாக புராணங்கள் சொல்கின்றன.
பார்வதி - ஈசனின் இரு (சூரியன், சந்திரன்) கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள்(அஞ்ஞானம்). அந்த அந்தகாசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது. சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது.
ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள்.
வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுந்து பைரவர்களை உற்பத்தி செய்து அந்த பதங்களில் இருக்க செய்கிறார்.
அறியாமை என்னும் இருளான அந்தகா சூரனை அழித்து சிவபெருமான வீரட்டேஸ்வரராக அவதாரம் கொண்டு ஞானத்தினை அருளியதலம். மூலவர் வீரட்டேஸ்வரர் அம்பாள் பெரியநாயகி சிவ மகிழ் வள்ளி.
இந்த தெய்வத்திற்கு சூரியன், செவ்வாய், சுக்கிரன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளது.
*கிருத்திகை நட்சத்திர நாளில் சுவாமிக்கு விபூதி அபிஷேகம் அல்லது அபிஷேகத்திற்கு விபூதி கொடுத்து கருப்பு நிற பசுவிற்கு உணவு கொடுத்தால் சொத்துப் பிரச்னை தீரும்.
*குரு - சுக்ர மூடம் உள்ளவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அல்லது பூரம் நட்சத்திர நாளில் சுவாமிக்கு செந்தாமரை மாலை கொடுத்து பார்லி அரிசி நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் குரு - சுக்ர மூட தோஷம் விலகும்.
*அனுஷம் அல்லது பூரட்டாதி நட்சத்திர நாளில் சுவாமியை தரிசனம் செய்து கரும்புச்சாற்றை வரும் பக்தர்களுக்கு கொடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் குறையும்.
*செவ்வாய் - சனி சேர்க்கை உள்ளவர்கள் நீண்ட நாளாக வீடு வாங்க முடியாதவர்கள் அல்லது வீடு கட்டமுடியாமல் தடை உள்ளவர்கள் விசாக நட்சத்திர நாளில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு செப்பு காசுகளை சுவாமியிடம் வைத்து பூஜை செய்து மஞ்சள் துணியில் முடிந்து வீட்டில் பச்சரிசி நிரம்பிய பாத்திரத்தில் வைத்தால் வீடு, மனை வாங்குவதற்கான பாக்யங்கள் ஏற்படும்.
*பரணி, பூரம் நட்சத்திர நாளில் அறுகம்புல்லும் நீல நிற சங்குப்பூவும் மாலையாக தொடுத்து சுவாமிக்கும் செந்தாமரை மாலையை அம்பாளுக்கும் கொடுத்து வழிபட்டால் எப்பேர்பட்ட திருமண தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் குறைந்து வீட்டில் சுபகாரியங்கள் ஏற்படும்.
*வாழ்வில் முன்னேற்றம் இல்லாதவர்கள் வாழ்வில் பல இன்னல்களை சந்தித்தவர்கள் பௌர்ணமி அன்று கோயிலில் மகா வில்வ செடியை கோயிலின் பிராகாரத்தில் நட்டு வைத்து வளரச் செய்தால் செடி வளர வளர அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.